எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்" (சங்கீதம் 71:21) என்ற தேவனுடைய அருமையான வாக்குத்தத்தத்தை இன்றைக்கு தியானிப்போம். அன்பான தேவ பிள்ளையே, தேவன் உங்கள் மேன்மையைப் பெருகப்பண்ணி, உங்களைத் தேற்றுவார்.

"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33)என்று வேதம் கூறுகிறது. ஆண்டவராகிய இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது, நமக்கு முன்பாக மாதிரியாக இருக்கக்கூடிய வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவர் உபத்திரவங்களின் வழியாக கடந்து சென்றார். அவர் பரம பிதாவிடம் ஜெபித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்தார். அன்பானவர்களே, அவ்வாறே நாமும் எப்போதும் ஆண்டவரையே நோக்கிப் பார்க்கவேண்டும். "அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்" (சங்கீதம் 71:20)என்று வேதம் கூறுகிறது.

இந்த உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்றும், சாத்தான் நம்மை இருளில் இருக்கப்பண்ணுகிறான் என்றும் வேதம் கூறுகிறது (1 யோவான் 5:19; சங்கீதம் 143:3). ஆனால் இப்படிப்பட்ட உபத்திரவங்களிலிருந்து நாம் எப்படி வெளியே வரமுடியும்? அநேகர் பல்வேறுவிதமான உபத்திரவங்களால் வேதனையுற்று, "ஐயோ, எனக்கு இந்த பிரச்னை இருக்கிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை," என்று எப்போதும் முறுமுறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்த பிரச்னைகளையெல்லாம் மேற்கொள்ளக்கூடிய வழியை, "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10)என்று வேதம் காட்டுகிறது. அன்பானவர்களே, நாம் தேவனை இறுகப்பற்றிக்கொள்வது மாத்திரமே ஒரே வழியாக இருக்கிறது.

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33)என்று வேதம் கூறுகிறது. ஆம், ஆண்டவரை நோக்கிப் பார்த்து அவரைப் பற்றிக்கொள்வதை நாம் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். உங்கள் இருதயத்தை விரிவாய்த் திறந்து எல்லா பிரச்னைகளையும் ஆண்டவரிடம் கூறுங்கள். ஜெபத்தைக் கேட்கிற தகப்பனாகிய நம் ஆண்டவர் நிச்சயமாகவே உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார். வேதம் கூறுகிறதுபோல, கர்த்தர் உங்கள் மேன்மையைப் பெருகப்பண்ணி, எப்போதும் உங்களைத் தேற்றுவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.


ஜெபம்:
பரம தகப்பனே, நன்றியும் நம்பிக்கையும் நிறைந்த இருதயத்தோடு உம் முன்னே வருகிறேன். என் மேன்மையைப் பெருகப்பண்ணி, எல்லாவிதங்களிலும் என்னை தேற்றுவதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் உலகத்தை ஜெயித்திருப்பதால், உபத்திரவ காலத்திலும் நான் உம்முடைய வார்த்தைகளை நினைத்து மகிழ்ச்சியாயிருக்க எனக்கு உதவும்.  கர்த்தாவே, இயேசு உம்மையே பற்றிக்கொண்டு, பாடுகளின் மத்தியில் உம்மை நோக்கி ஜெபித்ததுபோல, எப்போதும் உம்மையே நோக்கிப் பார்த்து, உம்முடைய பெலத்தை சார்ந்திருக்க எனக்குக் கற்றுத்தாரும். நான் அநேக கசப்பான உபத்திரவங்களை சந்திக்கும்போது, என்னை நீர் மறுபடியும் உயிர்ப்பித்து, உயர்த்துவீர் என்று விசுவாசிக்கிறேன். தகப்பனே, இந்த உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்றும், சாத்தான் என்னை இருளில் இருக்கப்பண்ண முயற்சிக்கிறான் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், உம்மை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையுங்குறைவுபடாது என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நான் நம்பியிருக்கிறேன். எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் நீர் அருளிச்செய்வீர் என்று அறிந்து முதலாவது உம்முடைய ராஜ்யத்தையும் நீதியையும் நான் தேடுவதற்கு உதவி செய்யும். என்னை தேற்றி, ஆசீர்வதித்து, என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிற தகப்பனாக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் மேன்மையைப் பெருகப்பண்ணி, உம்முடைய ஆறுதல் என்னை எப்போதும் சூழ்ந்துகொள்ளச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.