அன்பானவர்களே, உங்கள் இருதயத்தை சந்தோஷத்தினால் நிறைக்கக்கூடிய அருமையான வாக்குத்தத்தத்தை ஆண்டவர் இன்றைக்கு உங்களுக்கென்று வைத்திருக்கிறதினால், நீங்கள் அவருக்குள் மகிழ்ச்சியடைவேண்டும். "என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்" (நீதிமொழிகள் 8:35) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். நம் வாழ்வில் பெரிதான தேவ தயவு விளங்குகிறது. அந்த தயவினால் நம்மேல் ஆசீர்வாதங்கள் அளவில்லாமல் பொழியப்படும். அவருடைய கிருபையினால் நாம் செல்வாக்கான நிலையில், மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தை அளித்து, பதிலாக ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய பொறுப்புகளில் இருக்கலாம். அதற்கும் மேலாக, தேவன் நமக்கு அன்பான பெற்றோரை, வாழ்விலும் தாழ்விலும் நம்மோடு நிற்கக்கூடிய, நமக்காக ஜெபித்து தாங்கக்கூடிய குடும்பத்தினரை தந்து ஆசீர்வதித்திருக்கிறார். நம் வாழ்வில் அவர் எல்லாவற்றையும் ஒழுங்காக செயல்படுத்தி, எப்பக்கமும் விளங்கும் அவருடைய பூரண அன்பையும் அக்கறையையும் நமக்கு நினைவுப்படுத்துகிறார் என்பது நம்புவதற்கு அரிதாயிருக்கிறது.
சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிட்டு எண்ணற்ற பிரச்னைகள் உருவாக காரணமாகிறார்கள். எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். தேவன் எங்களுக்கு அவருக்குப் பயப்படுகிற பிள்ளையை கொடுத்திருக்கிறார்; எங்களுக்கு உதவுகிறதற்கும், எங்களை பராமரிப்பதற்கும் வீட்டில் அன்பானவர்களைக் கொடுத்திருக்கிறார். இன்னும் அதிகமாக, எங்கள் அலுவலகத்தில் ஆண்டவரை நேசிக்கிற, அவருக்கென்று தங்களால் இயன்ற சிறந்த காரியங்களை செய்ய முயற்சிக்கும் சிறந்த மக்கள் இருக்கிறார்கள். தேவன் எங்களுக்கு நற்சுகத்தை, பெலத்தை, பொருளாதார ஆசீர்வாதங்களை தந்திருக்கிறார். நாங்கள் பல்வேறு சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்போது, தேவன் அற்புதவிதமாக யாரையாவது அனுப்பி அவர்கள் மூலம் எங்களுக்கு உதவி செய்கிறார். வீடுகளிலும் சாலைகளிலும் எவ்வளவோ தீங்கு நடைபெறுவதை நாங்கள் கேள்விப்பட்டாலும், அவர் எல்லா தீங்குகளிலிருந்தும் எங்களை பாதுகாக்கிறார். தேவனுடைய தயவினாலே நாங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். தேவன் தம்முடைய தயவு எங்களைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்துள்ளார்; எல்லாவற்றிலும் இதை நாங்கள் உணர்கிறோம். சிலசமயங்களில் இவற்றுக்காக நாம் தேவனை ஸ்தோத்திரியாமல் இருந்துவிடுகிறோம். ஆனால், இன்றைய வசனத்தில் தேவன், 'கர்த்தரைக் கண்டடைகிறவன் தயை பெறுகிறான்' என்று கூறுகிறார். நாம் தேவனை கண்டடைவதற்கு அவர் ஒளிந்துவிளையாடுகிறாரா? இல்லை, நம்முடைய பாவங்கள், கவலைகள், சந்தேகங்களே நம்மிடமிருந்து தேவனை மறைக்கின்றன. நாம் அவரைத் தேடினால் அவரைக் கண்டடைவோம் என்று தேவன் கூறியிருக்கிறார். ஆகவே, இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஆண்டவரை தேடும்போது, நாம் அவரைக் கண்டடைவோம். நீங்களும் அவரிடமிருந்து தயவை பெற்றுக்கொள்ளலாம். தயவு நிறைந்த வாழ்வை உங்களுக்குத் தருவதற்கு தேவன் விரும்புகிறார்.
ஜெபம்:
பரம தகப்பனே, இன்றைக்கு நீர் எனக்கு தந்திருக்க வாக்குத்தத்தத்திலும் உம்முடைய பிரசன்னத்திலும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் வாழ்வில் நீர் அருளியிருக்கிற பெரிதான தயவுக்காகவும், என் இருதயத்தை சந்தோஷத்தினால் நிரப்புவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தை அருளி, பதிலாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி செல்வாக்கு நிறைந்த பொறுப்பில் என்னை கிருபையாக அமர்த்தியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாழ்விலும் தாழ்விலும் என்னோடு துணை நின்று, எனக்காக ஜெபித்து என்னை தாங்கும் குடும்பத்தினரையும் அன்பான பெற்றோரையும் எனக்கு தந்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் வாழ்வில் எல்லாவற்றையும் நீர் சீராக நடத்திவரும்விதம், உம்முடைய பூரண அன்பையும் அக்கறையையும் எனக்கு நினைவுப்படுத்துகிறது. நீர் அருளியுள்ள சுகம், பெலன், பொருளாதார நன்மை எல்லாம் உண்மையாகவே ஆச்சரியமானவை. ஆண்டவரே, எல்லா தீமையினின்றும் என்னை பாதுகாத்து, என் வாழ்வில் உம்முடைய தயவு விளங்குவதை நான் அறிந்து உமக்கு நன்றி செலுத்த உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக நான் உம்மை தேடி, உம்மைக் கண்டடைந்து நீர் வாக்குப்பண்ணியிருக்கும் தயவை பெற்றுக்கொள்ள உதவும். என் வாழ்வில் உம்முடைய தயவு நிறைந்திருக்கும்படி நீர் விரும்புவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.