அன்பானவர்களே, இன்றைக்கு உங்களோடு தியானத்தை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவர்தாமே தம்முடைய வல்லமையான பிரசன்னத்தினால் உங்களை ஆறுதல்படுத்தி, உங்கள் உள்ளத்தை தைரியத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. நாம் இணைந்து ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தில் அடைக்கலம் தேடி, அவரது மகத்துவத்தில் மகிழுவோம். "அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்" (சங்கீதம் 77:14) என்று வேதம் கூறுகிறது.

ஆம், அன்பானவர்களே, தேவன்தாம் நம் வாழ்வில் ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறார். ஏன் அவற்றைச் செய்கிறார்? நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் அனைவரும் தமது மகத்துவத்தையும் மகிமையையும் அறிந்துகொள்ளும்படியாக அப்படிச் செய்கிறார். உங்கள் வகுப்பு தோழர்கள் மத்தியில், அண்டை அயலகத்தார் மத்தியில், குடும்பத்தினர் மத்தியில், நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் கூட சாட்சியாக வாழ்வதற்கு அவர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார். உங்கள் வாழ்வில் தேவன் வல்லமையான அற்புதத்தைச் செய்யும்போது அதை யாராலும் இல்லையென மறுக்க இயலாது. அவர்கள் உங்களைப் பார்த்து, "மெய்யாகவே தேவன் இவரோடு இருக்கிறார்," என்று சொல்வார்கள். ஆனால், பெரும்பாலும் அற்புதம் நடப்பதற்கு முன்னர், குறைவு, உபத்திரவம், இக்கட்டு ஆகியவற்றை நாம் சந்திக்க நேரிடலாம். அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். தம்முடைய அற்புதத்தை பெறுவதற்கு நம்மை ஆயத்தமாக்குவதற்கு இந்த இக்கட்டுகளை தேவன் பயன்படுத்துகிறார். அவர் வல்லமையாக செய்யும் கிரியை வெளியரங்கமாக விளங்கும்படி, உங்கள் உபத்திரவத்தை சாட்சியாக மாற்றுவதற்காக இப்படிப்பட்ட தருணத்தை ஆண்டவர் அனுமதிக்கிறார். தேவன் உண்மையுள்ளவர் என்பதை விளக்கும் ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். ஒரு சகோதரி மிகுந்த துக்கத்தோடு இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்தார்கள். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு குழந்தையில்லை. ஆகவே, அவர்கள் குடும்பத்தினர் தங்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் இவர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள்; குடும்பத்திற்கு இவர்களால் வெட்கம் வருகிறது என்று குறைகூறியிருக்கின்றனர். அவர்களுக்கு இருந்த மனக்குறையோடு, தொடர்ந்து சுமத்தப்பட்ட அவதூறுகளும் அதிக வேதனையைக் கொடுத்தன. அவர்கள் மனமுடைந்து அழுதுகொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு யாரோ ஒருவர் ஜெப கோபுரத்தைப் பற்றி கூறியிருக்கிறார். அந்த சகோதரி ஜெபிப்பதற்கு விசுவாசத்துடன் வந்திருக்கிறார்கள்.  அந்த ஆண்டிலேயே தேவன் ஓர் அற்புதத்தை செய்தார். அவர்கள் கருத்தரித்தார்கள். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இயேசு அழைக்கிறார் கூட்டம் ஒன்று நடந்தபோது, அவர்கள் மேடைக்கு அந்தக் குழந்தைகளைக் கொண்டு வந்து ஆயிரக்கணக்கான மக்கள் முன்னர் சாட்சி கூறினார்கள். ஒரு சிலர் அவர்களைக் குற்றப்படுத்தி அவதூறு செய்தனர்; ஆனால், பல்லாயிரக்கணக்கானோருக்கு முன்பு நின்று சாட்சி கூறி, தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதை காண்பிக்கும்படி அவர், அவர்களை உயர்த்தினார்.

அன்பானவர்களே, அந்த சகோதரிக்கு அற்புதத்தை செய்த தேவன், உங்கள் வாழ்க்கையிலும் அற்புதத்தைச் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். சாட்சியாக வாழ்வதற்கு ஆயத்தப்படுங்கள்! தேவன் உங்களோடிருக்கிறார்; எல்லா உபத்திரவங்களையும் தம்முடைய மகிமைக்காக அவர் ஜெயமாக மாற்றுவார். அவர்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள்; நீங்கள் எண்ணிப்பார்க்காத வழிகளில் அவர் தமது மகத்துவத்தை வெளிப்படுத்துவதை காண்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையில் வல்லமையாக கிரியை செய்வுதற்கு நீர் அதிசயமானவராக இருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய வாக்குத்தத்தங்கள்மேல் நான் நம்பிக்கையாயிருக்கிறபடியினால் என் இருதயத்தை தைரியத்தினால் நிரப்பும். நான் எதிர்கொள்ளும் எல்லா உபத்திரவமும் உம்முடைய மகத்துவத்திற்கும் வல்லமைக்கும் சாட்சியாக மாறும்படி செய்யும். நீர் என்னோடு இருப்பதை மற்றவர்கள் காணும்படி உம்முடைய மகிமையை என் மூலம் வெளிப்படுத்தும். நீர் கிரியை செய்கிறீர் என்பதை நான் அறிந்து, இக்கட்டுகளின் மத்தியிலும் திடமாக இருப்பதற்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய வேளைக்காகவும், என் வாழ்வை குறித்து நீர் வைத்திருக்கும் நினைவுகளின்மேலும் நம்பிக்கை வைப்பதற்கு என் விசுவாசத்தை பெலப்படுத்தும். என்னை சுற்றிலுமிருக்கிறவர்கள் மத்தியில் உம்முடைய அன்பு, கிருபை, உண்மை ஆகியவற்றுக்கு நான் சாட்சியாக விளங்கும்படி செய்யும். உம்முடைய அதிசயங்கள் என்னில் காணப்பட்டு, உம்முடைய நாமத்திற்கு மகிமை சேரும்படி செய்யும். நீர் ஜெயத்தை தருவீர் என்று நம்பி, எல்லா இக்கட்டுகளையும் உம்முடைய கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.