அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிக்கிறோம். "நான் அதிகமாய் வேலை செய்கிறேன். ஆனால் பணத்தை சேர்க்க முடியவில்லை. வேலையை தக்க வைத்துக்கொள்ள நான் போராடுகிறேன். என் வியாபாரத்தில் லாபமே பார்க்க இயலவில்லை. நான் அதிக நேரம் உழைக்கிறேன்; குடும்பத்துடன் குறைவான நேரமே செலவழிக்கிறேன். ஆனாலும், என்னால் உரிய பலனை அடைய முடியவில்லை," என்று சொல்கிறீர்களா? அன்பானவர்களே, திடன் கொள்ளுங்கள். இன்றைக்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களை கையின் பிரயாசத்தை அவர் ஆசீர்வதிப்பார். உங்களுக்குத் தேவையான ஐசுவரியத்தை அவர் தருவார். நீங்கள் இலகுவாக உணர்வீர்கள். ஆண்டவருடைய வழிகாட்டுதலில், அமைதியாகவும் சமாதானமாகவும் வேலை செய்வீர்கள். நம் அனைவருக்கும் ஐசுவரியம் வெவ்வேறுவிதங்களில் பொருள்படுகிறது. வேலை செய்கிறவர்கள்; வியாபாரம் செய்கிறவர்கள்  ஆகியோருக்கு செல்வம் என்பது பணத்தை சேர்ப்பது அல்லது ஆஸ்தியை பெருக்குவது என்று பொருள்படுகிறது. வயது முதிர்ந்தோருக்கு ஆரோக்கியமே செல்வமாகும். வாலிபருக்கு, சுதந்திரமே செல்வமாகும்.

வேதாகமத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் சாப்பிடுவதற்கு உணவு கிடைப்பதையே செல்வமாக கருதினர். அவர்கள் வனாந்தரத்தில் உணவு கிடைக்காமல் முறுமுறுத்தார்கள் (யாத்திராகமம் 16ம் அதிகாரம்). ஆனால், கர்த்தர் இரக்கமாக, வானத்திலிருந்து அதிசயவிதமாக உணவை கொடுத்தார். அது, அவர்கள் அது வரை சாப்பிட்டிராத அளவு ருசியாக இருந்தது. தினசரி ஒவ்வொருவேளைக்கும் உரிய உணவு அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களுக்கு அது என்னவென்று தெரியாதிருந்ததினால், அது அற்புதவிதமாக கிடைத்ததினால் அதை அவர்கள் மன்னா என்று அழைத்தனர்.

அன்பானவர்களே, அவர்கள் உணவுக்காகவோ செல்வம் சேர்க்கவோ ஒய்வின்றி உழைக்கவில்லை. தேவன், எப்போதும் அவர்களோடிருந்து, வேண்டியவற்றை அருளிச்செய்வதாக அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்திருந்தார். அவரை அவர்கள் பின்பற்றியபடியால், அவர்கள் நாள்தோறும் வானத்தின் மன்னாவை பெற்றுக்கொண்டார்கள். வனாந்தரத்தில் 40 ஆண்டுகள் அவர்கள் பயணித்தபோதும் ஒன்றிலும் குறைவுபடவில்லை. தேவன் தொடர்ந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அருளிச் செய்தார். அவ்வாறே, தேவன் உங்களையும் ஆசீர்வதிக்கிறார்.

நீங்கள் என்ன செய்கிறீர்களோ அது ஆசீர்வதிக்கப்படும். நீங்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படியும்போது, அவரைப் பின்பற்றும்போது, அவர் உங்களுக்கு தமது செல்வத்தை அருளிச்செய்வார். உங்கள் வாழ்க்கையை நடத்த போதுமான பணத்தை, உங்கள் உடலுக்கு வேண்டிய நற்சுகத்தை தருவார்; உங்கள் வாழ்க்கையில் வாசல்களை திறப்பார். அன்பானவர்களே, அதற்காக நீங்கள் கஷ்டப்படவேண்டியதில்லை. ஆண்டவரைப் பின்பற்றுங்கள்; அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள்; அவருடைய சித்தத்தை செய்யுங்கள். அப்போது திறந்த வாசலினுள் உங்களால் எளிதாக நடந்து செல்ல முடியும். சந்தோஷமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதித்து, தமது செல்வத்தினால் உங்களை நிரப்புவார். அவருடைய அன்பினால் எப்போதும் நிரம்பியிருங்கள். எப்போது அவருடைய ஆவியினால் நிறைந்திருங்கள். அவருடன் நெருங்கிய ஐக்கியமாயிருங்கள். நீங்கள் செய்யவேண்டிய காரியம் அதுதான். "ஆண்டவரே, இந்த வாக்குத்தத்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றும்," என்று இன்றைக்கு கேட்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என் கையின் கிரியைகளை ஆசீர்வதித்து, என்னை வழிநடத்தும். பலனில்லாத கஷ்டமான உழைப்பின் பாரத்தை என்னை விட்டு எடுத்துப்போடும். உம்முடைய ஜனங்களுக்கு நீர் மன்னாவை கொடுத்ததுபோல, எனக்கும் அருளிச்செய்யும். நான் முடிவுகளை எடுக்கும்போது உம்முடைய சமாதானமும் அமைதலும் என்னை வழிநடத்தட்டும். ஒரு மனுஷனும் அடைக்காதவண்ணம் எனக்கு வாசல்களை திறந்தருளும்; உம்முடைய ஐசுவரியத்தை எனக்கு தந்து என்னை ஆசீர்வதியும். என்னை உம்முடைய ஆவியினால், உம்முடைய அன்பினால், உம்முடைய பிரசன்னத்தினால் அனுதினமும் நிரப்பிடும். நான் எப்போதும் உம்மை மகிமைப்படுத்தும்வண்ணம் என் வாழ்க்கையில் உம்முடைய ஆசீர்வாதங்கள் நிரம்பி வழியவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.