அன்பானவர்களே, வேதம், எஸ்றா 8:22-ல் கூறுகிறபடி, "தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது". ஆகவே, இன்றைக்கும் கர்த்தருடைய கரம் உங்கள்மேல் நன்மைக்கேதுவாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து களிகூர்ந்து மகிழுங்கள்.  

சிலர், "இன்றைக்கு எல்லாமே எனக்கு மோசமாக நடக்கிறது. சந்தை நிலை சரியில்லை; காலநிலை மோசமாக இருக்கிறது; உறவினருடன் கசப்பு இருக்கிறது," என்று கூறலாம். ஆனால், தேவன் எப்போது நல்லவராகவே இருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள். அவரைத் தேடுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, அவரைத் தேடி, "ஆண்டவரே, உம்மால் அன்றி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு உதவி செய்யும்," என்று கேளுங்கள். இரண்டாவதாக, "நான் என்ன செய்வதென்று எனக்கு போதியும்," என்று கேளுங்கள். மூன்றாவதாக, "நான் செய்கிற எல்லாவற்றிலும் உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுகிறதற்கான பெலனை தாரும்," என்று வேண்டுங்கள். இறுதியாக, "என்னால் இயன்ற அளவு அதிகமானோருக்கு உம்முடைய கிருபையை பகிர்ந்துகொள்ள உதவும்," என்று கூறுங்கள். இந்த நான்கு வழிகளிலும் நீங்கள் தேவனை தேடும்போது, உங்கள் வாழ்வில் நன்மையைக் கொண்டுவரும்படியாய் அவரது கரம் நிச்சயமாய் உங்கள்மீது அமரும். இன்றிலிருந்து உங்கள் வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதம் பரிபூரணமாக விளங்கும். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

உங்களோடு ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். மதுரையைச் சேர்ந்த ராதா என்ற இளம்பெண் 12ம் வகுப்பில் படித்தார்கள். அவர்கள் குடும்பத்தினர் இயேசுவை பற்றி அறியாதவர்கள்.பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரும்போது மிகவும் நோய்வாய்ப்பட்டு பெலவீனமடைந்தார்கள். எந்த வேலையும் செய்ய இயலவில்லை. அப்போது, தொலைக்காட்சி வழியாக இயேசு அழைக்கிறார் ஊழியத்தைக் குறித்தும், இளம் பங்காளர் திட்டத்தில் இணைகிறவர்களை தேவன் எவ்வாறு ஆசீர்வதிக்கிறார் என்றும் அறிந்துகொண்டார்கள். இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்குச் சென்று, தன்னை இளம் பங்காளராக இணைத்துக்கொண்டார்கள்.  

அப்போதிலிருந்து தேவன் அவர்கள் படிப்பை ஆசீர்வதித்தார். சகோதரி ராதாவின் தொண்டையில் கடுமையான வலி இருந்தது. நான் தொலைக்காட்சியில் நடத்திய நேரலை ஜெபத்தில் அவர்கள் இணைந்து ஜெபித்தபோது, அந்த வலி நீங்கியது. எல்லா போராட்டங்களும் சகோதரி ராதாவை விட்டு நீங்கியது. பின்னர் எம்.பில் படிப்பை முடிக்கவும், ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை கிடைக்கவும் ஆண்டவர் கிருபை செய்தார். தற்போது பல லட்சக்கணக்கானோர் ஆசீர்வாதம் பெறும்படி அவர்கள் மாதந்தோறும் ஊழியத்தை தாங்கி வருகிறார்கள். ஆண்டவர், அவர்களுக்கு அருமையான கணவரை கொடுத்து, இரண்டு பிள்ளைகளை தந்து ஆசீர்வதித்துள்ளார். மெய்யாகவே, தேவனுடைய கரம் அவரைத் தேடுகிறவர்கள்மேல் நன்மைக்கேதுவாக அமர்ந்திருக்கிறது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மாலன்றி என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஒத்துக்கொண்டு இன்று உம்மிடம் வருகிறேன். எல்லா சூழ்நிலைகளிலும் என்ன செய்யவேண்டும் என்பதை எனக்குப் போதித்தருளும். நான் செய்கிற எல்லா காரியங்களிலும் உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும்படி என்னை பெலப்படுத்தும். வாழ்வில் இக்கட்டுகள் நேரும்போது எனக்கு வழிகாட்டி, எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்பதை நினைவுப்படுத்தும். உம்முடைய அன்பின் கரத்தை என்மீது வைத்து, என் வாழ்வை பூரணமாய் ஆசீர்வதித்தருளும். நீர் எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறீர் என்பதை அறிந்து, என் இருதயம் கலங்காமல், சமாதானமாய் இருக்க உதவும். என்னைச் சுற்றிலுமிருக்கிறவர்களுடன் உம்முடைய நன்மையை பகிர்ந்துகொள்ள என்னை பெலப்படுத்தும். உம்முடைய அநுகூலமான அன்புக்காகவும், நீர் காட்டும் கரிசனைக்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.