அன்பானவர்களே, இன்றைக்கு, "என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்" (மல்கியா 4:2) என்ற வசனத்தை தியானிக்கிறோம். நீங்கள் சுகம்பெறுவதற்காக இன்றைக்கு காத்திருக்கிறீர்களா? "இந்த வியாதியால் நெடுங்காலம் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நோய் என்னை அலைக்கழிக்கிறது," என்று சொல்லுகிறீர்களா? இந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் மன உறுதியோடு, தேவனை குறைகூறாமல் அவருடைய நாமத்தைக் காத்துக்கொள்கிறீர்கள். அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய நாமத்திற்கு பயந்திருக்கிறபடியினால், இன்றைக்கு உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். அவர் உங்களைக் குணமாக்குவார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்த பிரதிமா என்ற சகோதரியின் வாழ்வில் இப்படியே நடந்தது. தேவன் தன்னை அற்புதவிதமாக சுகமாக்கியது குறித்த சாட்சியை அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள், ஜெப கோபுரத்தை தூய்மையாக்க தினமும் உண்மையாய் உதவி செய்து வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது 2019 நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உள்ளமுடைந்து போனார்கள். அவர்கள் உடலில் போதுமான இரத்தம் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். அவர்களுடைய உடல்நலம் குன்றியது. மருத்துவர்கள், புற்றுநோய் பாதிப்பினால் அவர்களால் நீண்டகாலம் வாழ முடியாது என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த சகோதரி பயமும் துக்கமும் அடைந்தார்கள்.

அந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தொடர்ந்து ஜெப கோபுரத்திற்கு வந்தார்கள். ஆண்டவருடைய வீட்டை சுத்தம் செய்தார்கள்; வேலையை முடித்தபிறகு, அமர்ந்து தேவனுக்கு முன்பாக அழுது தன் சுகத்திற்காக ஜெபித்தார்கள். என் தந்தை Dr. பால் தினகரனின் செய்திகளை தொடர்ந்து பார்த்து, அவருடன் இணைந்து ஜெபித்து வந்தார்கள். "ஆண்டவரே, இது உம்முடைய சரீரம். எல்லா எலும்பும், எல்லா சதையும், எல்லா இரத்த அணுவும், எல்லா நரம்பும் உமக்குச் சொந்தமானவை. ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னை பூரணமாக குணமாக்கும்," என்று ஜெபித்தார்கள். ஓராண்டு காலத்திற்கும் மேலாக அவர்கள் தினமும் திடவிசுவாசத்துடன் ஜெபித்து வந்தார்கள். ஆண்டவருடைய நாமத்தை அவர்கள் தள்ளிப்போடவில்லை. தொடர்ந்து அவரை சேவித்தார்கள்; அவருடைய ஊழியத்தை தாங்கினார்கள்; அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டார்கள்.

2021 ஜனவரி மாதம் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றார்கள். அங்கு அவர்களுடைய இரத்தம் சோதிக்கப்பட்டது. எலும்பு மஜ்ஜையை சோதித்தார்கள். மருத்துவர்கள், "நீங்கள் பூரண சுகத்தோடு இருக்கிறீர்கள். இது அற்புதம். இப்போது இரத்தப் புற்றுநோய் பாதிப்பு இல்லை. நீங்கள் சுகமாயிருக்கிறீர்கள்," என்று கூறியதைக் கேட்டு சகோதரி பிரதிமா ஆச்சரியப்பட்டார்கள்; சந்தோஷத்தினால் நிறைந்து முழு இருதயத்துடனும் ஆண்டவரை துதித்தார்கள். அந்த அற்புதத்தை உறுதிசெய்துகொள்ளும்படி அவர்கள் பல பரிசோதனைகளை செய்தார்கள்; உடலில் எங்காவது புற்றுநோய் செல்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தார்கள். மருத்துவர்கள் மறுபடியும், "இரத்தப் புற்றுநோய் சுகமாகிவிட்டது," என்று கூறினார்கள். ஆம், அவர்கள் பூரண சுகம் பெற்றார்கள். அற்புதவிதமாய் தன்னை சுகப்படுத்தியதற்காக அவர்கள் களிகூர்ந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

அன்பானவர்களே, அவ்விதமாகவே நீங்கள் கர்த்தருடைய நாமத்திற்குப் பயந்திருக்கிறபடியினால், இப்போதே, நீதியின் சூரியன் உங்கள்மேல் உதிக்கும். அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். புற்றுநோயால் வாடுகிறீர்களா? உயிரைப் போக்கும் கொடிய வியாதியுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? நம்பிக்கையில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களா? தோல் முழுவதும் வேதனையான கட்டிகள் உருவாக்கியிருக்கிறதா? கண்களில் தாங்க முடியாத வலி இருக்கிறதா? நீங்கள் அவருடைய நாமத்தை உயர்த்திப் பிடித்து, விசுவாசத்தை விட்டு வழுவிப்போகாதிருக்கிறபடியினால், தொடர்ந்து அவரை சேவித்து, பாடுகளின் மத்தியிலும் அவருடைய ஊழியத்தை தாங்குகிறபடியினால், இப்போதே தேவனுடைய ஆரோக்கியம் உங்கள்மேல் பிரகாசிக்கும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய சுகமளிக்கும் வல்லமையின்மேல் விசுவாசம் வைத்து, நம்பிக்கையுடன் உம்மிடம் வருகிறேன். நீரே நீதியின் சூரியன். உம்முடைய நாமத்திற்குப் பயந்திருக்கிறவர்கள்மேல் உம்முடைய ஆரோக்கியம் வரும். ஆண்டவரே, என்னுடைய வேதனையின் மத்தியிலும் உம்மை நான் பற்றிக்கொண்டிருக்கிறேன். பாடுகளின் மத்தியிலும், நீரே என் பரிகாரி என்று அறிந்து திடவிசுவாசத்துடன் இருக்கிறேன். உம்முடைய தெய்வீக ஒளி என்மேல் பிரகாசித்து, என் உடலிலும் மனதிலும் ஆவியிலும் ஆரோக்கியத்தை திரும்பப்பண்ணட்டும். ஆண்டவரே, உம்முடைய பெலன் என்னை நிறைக்கட்டும்;என்னுடைய சாட்சி உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும். உம்முடைய அற்புத சுகமளிக்கும் வல்லமைக்கும், மாறாத இரக்கத்திற்கும் நான் சாட்சியாக நிற்கும்படி செய்யும். நீர் உண்மையுள்ளவராயிருக்கிறபடியினால், உம்முடைய சுகமளிக்கும் வல்லமை என்னில் கிரியை செய்கிறபடியினால் உம்மை துதித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.