அன்பானவர்களே, "கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்" (2 சாமுவேல் 22:29) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். இருளை வெளிச்சமாக்கும் வல்லமை தேவனுக்கு இருக்கிறது என்பதை இந்த வசனம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. அவர் நம் விளக்காயிருக்கிறார்; பரிசுத்த ஆவியானவரின் எண்ணெயால் அவரது தீபம் எரியும்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்பும்போது, நமக்குள் தேவ பிரசன்னம் பிரகாசமாய் எரியும்படி தூண்டும் எண்ணெயாக அவர் விளங்குகிறார்; எந்த இருளாலும் அந்த பிரகாசத்தை மேற்கொள்ள முடியாது. "அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்" (அப்போஸ்தலர் 2:4) என்று சீஷர்களைக் குறித்து வேதம் கூறுகிறது. சீஷர்கள், வெவ்வேறு தேசங்களின் மொழிகளில் பேசினர். அந்த சமயத்தில் எருசலேமில் உலகம் முழுவதிலுமிருந்து ஜனங்கள் கூடியிருந்தனர். கல்லாதவர்களான இந்த மனுஷர், தங்கள் மொழிகளில் சரளமாக பேசி, தேவனை மகிமைப்படுத்துவதை அவர்கள் கேட்டபோது ஆச்சரியமடைந்தனர். கேட்டுக்கொண்டிருந்தவர்களின் உள்ளங்களை அவர்களது வார்த்தைகள் உருவக் குத்தின. பேதுரு பிரசங்கித்தபோது, அவர்கள் உறுத்தப்பட்டு, இயேசுவிடம் வந்து, அவரை பின்பற்றுகிறவர்களானார்கள்.

பரிசுத்த ஆவியின் ஒளி, நம் வாழ்வில் காணப்படும் இருளை போக்குவதோடு, மற்றவர்களின் வாழ்வில் ஒளியைக் கொண்டு வரும்படி நம்மை பெலப்படுத்தும். எந்த இருளையும் பிரகாசமான ஒளியாக மாற்றும்படி, இன்றைக்கு உங்களை ஒளி வீசப்பண்ணுவதற்கு தேவன் விரும்புகிறார். அதற்காகவே உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார்.

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். சத்துருவானவன் வெள்ளம்போல வரும்போது, கர்த்தரின் ஆவியானவர் அவனுக்கு விரோதமாக கொடியேற்றுவார். இன்றைக்கு அவர் உங்களுக்கு இதைச் செய்வார்.

ஒரு வல்லமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஜாண்சன் தினகரன் - ஜூன் பிரியவதி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். தங்கள் சொந்த வீட்டை ஒரு வழக்கறிஞருக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, தங்கள் பிள்ளைகள் படித்த பள்ளியின் அருகே அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர் நான்கு மாதங்கள் வாடகை கொடுத்த பிறகு, வாடகை கொடுக்காமல் சாக்குப் போக்கு சொல்லி வந்தார். ஜாண்சன் தம்பதியர் தங்கள் நிலையை காவல் நிலையத்தில் தெரிவித்தனர். அந்த வழக்கறிஞரின் குடும்பத்தினர் 10 நாட்களில் காலி செய்துவிடுவதாக கூறிவிட்டு, பின்னர், ஜாண்சன் குடும்பத்தினர் தங்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதாக பொய்யாய்க் குற்றஞ்சாட்டினர். இதனால் ஜாண்சன் குடும்பத்தினர் மனமுடைந்தனர்; தங்கள் வீடு திரும்ப கிடைக்குமா என்ற நிச்சயமில்லாமல், தற்போது வசிக்கும் வீட்டுக்கு எப்படி வாடகை கொடுப்பது என்று கவலைப்பட்டனர்.

அந்த நம்பிக்கையற்ற நேரத்தில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்தனர். அங்கு ஜெப வீரர்கள் அவர்களுக்காக ஜெபித்து, ஆறுதல் கூறினர். விரைவிலேயே எதிர்பாராதவண்ணம் ஓர் அரசியல்வாதி, பிரச்னைக்குள் தலையிட்டு வழக்கறிஞரை சந்தித்தார். இப்போது அரசியல்வாதிக்கும் வழக்கறிஞருக்கும் பிரச்னை என்று நிலைமை மாறியது. இறுதியில் அந்த வழக்கறிஞர் வீட்டை காலி செய்ததுடன் பொய்யாய் பதிவு செய்த குற்றச்சாட்டையும் திரும்ப பெற்றார். ஜாண்சன் குடும்பத்தினர் பிரச்னையிலிருந்து விடுபட்டனர்.

தேவனுடைய வழிநடத்துதலால், ஜாண்சன் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய தீர்மானித்தார். தன்னுடைய வேலையுடன் கிறிஸ்துவின் ஸ்தானாபதியாகவும் ஊழியம் செய்தார்; தற்போது ஜெப கோபுரத்தின் மூலம் ஊழியம் செய்கிறார். தேவன் அவர்கள் இருளை வெளிச்சமாக்கியதுபோல, உங்களுக்கும் செய்வார். அவர் உங்களுக்கு விளக்காக பிரகாசித்து, உதவி செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னுடைய இருளை வெளிச்சமாக்குவதாக நீர் வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே எனக்குள் விளக்காக இருக்கிறீர். என் வாழ்வில் வீசும் உம்முடைய ஒளியை எந்த இருளும் மேற்கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியின் எண்ணெயினால் என்னை நீர் அபிஷேகிக்கவேண்டும் என்றும், அதன் மூலம் உம்முடைய பிரசன்னம் எனக்குள் பிரகாசமாய் எரிந்து, என் வாழ்விலிருந்து எல்லா இருளையும் அகற்றவேண்டும் என்றும் ஜெபிக்கிறேன். நீர் உம்முடைய சீஷர்களை பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தியதுபோல, நான் மற்றவர்களுக்கு உம்முடைய வெளிச்சத்தை கொண்டு செல்லும்படி, என்னை ஆவியின் கனியாலும் வரங்களாலும் நிரப்பும். உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் சத்துருவுக்கு விரோதமாக நீர் கொடியேற்றி இருக்கிறீர் என்றும், எல்லா இருளையும் போக்கி, உம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்தை கொண்டு வருகிறவனா(ளா)க என்னை மாற்றுகிறீர் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.