அன்பானவர்களே, காலைப்பொழுதில் உங்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசாயா 26:3) என்பதே இன்றைய தியானத்திற்கான வசனமாகும். அன்பானவர்களே, இந்த வசனம் கூறுகிறபடி, தேவன் தம்முடைய பரிபூரண சந்தோஷத்தை இன்றைக்கு உங்களுக்கு தருவார். சமாதானத்தை குறித்து யோசிக்கும்போது, நாம் பெரும்பாலும் அமைதியை, பாதுகாப்பையே எண்ணுகிறோம். அமைதியான ஏரியின் நடுவில் படகு ஒன்றில் நீங்கள் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். சூரியன் ஒளி வீசுகிறது; குளிர்காற்று இதமாக முகத்தை வருடிச்செல்கிறது. முற்றிலும் இளைப்பாறுதலுடன், சூழ்நிலை அமைதியாக, பாதுகாப்பானதாக இருப்பதால் நீங்கள் சமாதானமாக இருப்பதாக உணர்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் அதே படகில் இருக்கும்போது, மூடுபனி உங்களைச் சூழ்ந்துகொண்டு, எதிரே என்ன இருக்கிறதென்று பார்க்க இயலாத நிலை ஏற்பட்டால், நீர் கொந்தளித்தால், பதற்றம் ஏற்படுமல்லவா! உயிர் பிழைப்போமா என்பதே உங்களுக்குத் தெரியாத நிலை உண்டாகும். ஆனால், உங்கள் ஜீவன், மகா பெரியவரின் கரங்களில் இருக்கிறது என்பதை அறிந்திருக்கும்போது, உங்கள் உள்ளத்தில் அசைக்கமுடியாத விசுவாசம் இருக்கும். அதைக் கடந்து சென்றுவிடலாம் என்ற திடநம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அதுவே, தேவன் நமக்குத் தருகிற தெய்வீகமான பூரண சமாதானமாகும்.
எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று ஒரு நிச்சயமின்மை நம்மை சூழ்ந்திருக்கலாம். வாழ்க்கை தத்தளிப்பாக காணப்படலாம்; வழியில் எண்ணற்ற தடைகள், நீங்கள் முன்னேறுவதை தடுக்கலாம். இந்த இக்கட்டுகளின் மத்தியிலும், தேவன் நமக்கு தம்முடைய சமாதானத்தை அருளிச்செய்கிறார்; அவர் நம்முடன் இருந்து, பாதையில் நம்மை பாதுகாப்பார் என்ற நிச்சயத்தை தருகிறார். "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை" என்று வேதம் கூறுகிறது சங்கீதம் (119:165).
ஆம், அன்பானவர்களே, நீங்கள் ஆண்டவர்பேரில் அன்புகூரும்போது, அவரை நம்பும்போது, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது, அவர், நீங்கள் இடறிப்போகாதிருக்கும்படி தம்முடைய பூரண சமாதானத்தினால் உங்களை நிரப்புகிறார். ஒன்றும் உங்களை அசைக்க இயலாது. உங்களுக்கு விரோதமாக மக்கள் பேசலாம்; உங்களை எதிர்க்கலாம். உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும்படி தடைகள் காணப்படலாம்; உங்களை விழத்தள்ளும்படி இக்கட்டுகள் நேரிடலாம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தேவன் உங்களை தமது சமாதானத்தினால் தாங்குவார். நீங்கள் இடறுவதில்லை. பயம் உங்களை மேற்கொள்ளாது. உங்கள் ஜீவன் தேவனுடைய கரங்களில் இருக்கிறது; அவர், நீங்கள் சென்று சேரவேண்டிய மறுகரைக்கு உங்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பார் என்ற நிச்யயம் உங்களுக்குக் காணப்படும். உங்கள் பயணத்தில் அவர் உடனிருப்பார். ஆகவே, அன்பானவர்களே, திடன்கொள்ளுங்கள். தேவன் உங்களோடிருக்கிறார். அவர் உங்களை தமது சமாதானத்தினால் நிறைத்து வழிநடத்துவார். தேவனுடைய சமாதானத்திற்காக அவரை ஸ்தோத்திரிப்போம்; இன்றைய நாள் முழுவதும் இந்த சமாதானம் நம்மை தாங்கும்படி ஆண்டவரிடம் கேட்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நன்றியுள்ள இருதயத்துடன் உம்மண்டை வருகிறேன். இப்போது என் வாழ்க்கையை உம்முடைய பூரண சமாதானம் நிரப்புவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, உம்முடைய சமாதானம், உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல. அது பூரணமானது; நித்தியமானது. என்னுடைய போராட்டங்களின் மத்தியிலும் உம்மை நான் நம்புகிறேன். இன்றைக்கு உம்முடைய தெய்வீக ஞானத்தை, பாதுகாப்பை, வழிகாட்டுதலை என்மேல் பொழிந்தருளுவீராக. நீரே ஆளுகை செய்கிறீர் என்பதை அறிந்து எல்லா இக்கட்டையும் எதிர்கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும். என் தேவைகள் எல்லாவற்றையும் நீர் பொறுப்பெடுத்துக்கொள்வீர் என்பதை நான் மறவாதிருக்கும்படி செய்யும். நீர் எனக்கென்று ஆயத்தம் பண்ணியிருக்கிற ஸ்தலத்திற்கு பாதுகாப்பாக என்னை கொண்டு சேர்த்திடும். இந்த நாளை நான் தொடங்கப்போகிற நிலையில் என் இருதயத்தை உம் சமாதானம் ஆட்கொள்வதாக. ஆண்டவரே, நீரே எனக்கு அடைக்கலமும், பெலனும், சமாதானமுமாய் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.