அன்பானவர்களே, "என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்" (நெகேமியா 2:8) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். ஆம், இன்று, தம்முடைய தயவுள்ள கரம் உங்கள்மேல் வரும் என்று ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். நான் வேதாகமத்தில் நெகேமியாவைக் குறித்து வாசித்துக்கொண்டிருந்தேன். அவன் ராஜாவிடம் சென்றபோது, அவனைப் பார்த்த ராஜா, "நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன?" என்று கேட்டான். அப்போது, நெகேமியாவின் மனம் பாரமாக இருந்திருக்கவேண்டும். அதைத்தான் அவன் முகம் காட்டியுள்ளது. உடனே அவன் ராஜாவிடம், "என் நகரம் பாழாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி?" என்று கேட்டான்.

ராஜா உடனே, "நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். நெகேமியா, சில வேண்டுதல்களை வைத்தான். அவை சாதாரணமான எளிய கோரிக்கைகள் அல்ல; தன்னுடைய நகரத்திற்கு மதில்களை கட்டும்படி தைரியமாகக் கேட்டான். அவன் கேட்டவற்றை ராஜா உடனே அனுமதித்தான். கர்த்தர், நெகேமியாவுடன் இருந்ததினால் இது நடந்தது. தேவனுடைய தயவுள்ள கரம், அவன்மேல் இருந்தது; அதனால், ராஜா அவனுக்கு தயவு காண்பித்தான். அவ்வாறே இன்றைக்கு உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் யாவரின் தயவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அன்பானவர்களே, கர்த்தர் நெகேமியாவுடன் இருந்ததுபோல, உங்களுடனும் இருக்கிறார். தேவனுடைய தயவுள்ள கரம் உங்கள்மேல் இருக்கிறது; எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் தயவை கண்டுகொள்வீர்கள். எந்தக் காரியங்களெல்லாம் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, தேவன் உங்களோடு இருக்கிறபடியினால் அவை கூடும்.

நான் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். பட்டம் பெற்று சில காலம் கடந்துவிட்டிருந்தது. ஆகவே, கவனம் செலுத்தி படித்து நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. அதில் தேர்ச்சி பெற்ற பிறகும், 'எந்தக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்கும்? குடும்பத்தை பிரிந்து செல்லவேண்டியதிருக்குமோ? வேறு பட்டணத்திற்கு போக வேண்டியதிருக்குமோ?' என்றெல்லாம் குழம்பினேன். ஆனால், தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியினால், சென்னையிலேயே சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் எனக்கு இடம் கிடைத்தது. ஆண்டவர் எனக்கு வழியை உண்டாக்கி, மேற்படிப்பு காலம் முழுவதும் எனக்கு உதவினார். தேவனுடைய தயவு இவ்வளவு வல்லமையுள்ளது. அவ்வாறே, இன்றைக்கு தேவன் தம்முடைய தயவை உங்கள்மேல் பொழிந்தருளுவார்; அவருடைய தயவு மட்டுமல்ல; உங்களைச் சுற்றிலுமிருக்கிற மக்களின் தயவும் உங்கள்மேல் பொழியும்படி செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய தயவுள்ள கரம் என்மேல் அமருகிறதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறவர், என்னை வழிநடத்துகிறவர் என்பதை அறிந்து, என் பாரங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நான் கடந்துசெல்கிற எல்லா சூழ்நிலைகளிலும் உம்முடைய தெய்வீக தயவு என்னை சூழ்ந்துகொள்வதாக. திறக்கமுடியாததுபோல் காணப்படும் வாசல்களை திறந்து, வழியில்லாத இடத்தில் வழியை உண்டாக்குவீராக. நீர் எப்போதும் என்னோடு இருக்கிறீர் என்பதை அறிந்துகொள்ளும்படி செய்து, என் இருதயத்தை சமாதானத்தினாலும் திடநம்பிக்கையினாலும் நிரப்பும். உம்முடைய கண்களில் மாத்திரமல்ல; என்னை சுற்றிலுமிருக்கிறவர்களின் கண்களிலும் எனக்கு தயவு கிடைக்கும்படி செய்யும். உம்முடைய ஆசீர்வாதம் என் வாழ்வில் எப்பக்கமும் நிரம்பி வழியவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.