அன்பானவர்களே, இன்றைக்கு உங்களுக்கு தேவையானதைக் காட்டிலும் அதிகமானதை ஆண்டவர் தர இருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமாக இருப்பதை எண்ணி சந்தோஷமடைகிறேன். "தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று" (சங்கீதம் 107:8) என்று வேதம் கூறுகிறது. ஆம், ஆண்டவர் எப்போதும் நம்மை திருப்தியாக்குகிறார். இதற்குமேல் எதுவும் தேவையில்லை என்று கூறுமளவுக்கு அவர் நம்மை நிரப்புகிறார்.
ஆண்டவருடைய ஆசீர்வாதங்கள் நாம் தடுக்க இயலாத அளவுக்கு நிரம்பி வழிவதை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எனக்கு பரிசுத்த ஆவியை அருளியபோது, என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவோ, தேவ பிரசன்னத்தை அடக்கவோ இயலவில்லை. அது அவ்வளவு சந்தோஷமாக, அதிக திருப்தியாக இருந்தது. ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கும்போது, நமக்கு எதையாவது தரும்போது அப்படித்தான் இருக்கும். நிறைவாக, தேவைக்கும் அதிகமாக, பரிபூரணமாக இருக்கும்.
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணித்தபோது, பசியும் தாகமுமாய் இருந்தார்கள். அவர்கள் தேவனிடமாய் திரும்பி அவரிடம் கேட்டபோது, அவர் பதிலளித்தார். பரலோகத்தில் ஆயத்தம்பண்ணப்பட்ட மன்னாவை, ருசியுள்ள போஜனத்தை அவர்களுக்காகவே அனுப்பினார். கன்மலையிலிருந்து மதுரமான தண்ணீர் புறப்படும்படி செய்தார். கானாவூர் திருமணத்திலும், அதுவரை யாரும் ருசித்திராத அளவு சுவையான திராட்சரசத்தை ஆண்டவர் கொடுத்தார். ஆண்டவர் நமக்கு தரும் ஈவானது, ருசியானதாக, மதுரமானதாக, அதிக திருப்தியை அளிப்பதாக இருக்கும். அதற்காக காத்திருங்கள். அவரிடம் கேளுங்கள்.
அநேகவேளைகளில் நாம் அவருடன் இருக்கிறோம். ஆனால் எதையும் கேட்காமல் இருக்கிறோம். மாறாக, உலகத்தை பார்க்கிறோம். ஆனால், நாம் அவரிடம் கேட்கும்போது அவர் மதுரமானதை நமக்குத் தருகிறார். நாம் அவரை சார்ந்துகொள்ள கற்றுக்கொள்ளும்படி நம்மை வனாந்தரத்தின் வழியாக நடத்துகிறார். சுற்றிலும் எதுவுமே இருக்காது. உணவுக்காக இயேசுவையே நோக்கிப் பார்க்கவேண்டியதிருக்கும். தம்மிடம் கேட்பதற்கும், தம்மை மட்டுமே சார்ந்திருப்பதற்கும் அவர் நமக்குப் போதிக்கிறார். நாம் அப்படிச் செய்யும்போது, அவர் ருசியானதை, மதுரமானதை தருகிறார். நீங்கள் ஆண்டவருக்குக் காத்திருக்கிறபடியினால் மதுரமானது இன்றைக்கு வருகிறது.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இருதயத்தில் தாகத்தோடும், ஆத்துமாவில் பசியோடும் உம்மிடம் வருகிறேன். நீர், முழுவதுமாக, பரிபூரணமாக திருப்தியாக்குகிறவராய் இருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் இஸ்ரவேலர்களை போஷித்து, கன்மலையிலிருந்து அவர்களுக்கு மதுரமான தண்ணீரை கொடுத்ததுபோல, என்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் நேர்த்தியான வழியில் சந்திப்பீர் என்று நம்புகிறேன். என்னைச் சுற்றிலுமிருக்கும் உலகத்தை அல்லாமல், உம்மை மாத்திரமே பார்ப்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். நீர் எனக்கு சிறந்ததை தருவீர் என்று நம்பி, உம்மிடம் தைரியமாகக் கேட்டு, பொறுமையோடு காத்திருப்பதற்கு உதவும். என் வாழ்க்கையில் உம்முடைய மதுரமான, திருப்தியாக்கக்கூடிய ஆசீர்வாதங்கள் நிறைந்திருக்கட்டும். அனுதினமும் நான் எப்போதும் உம்மையே சார்ந்திருக்கவும், நீர் தருகிறவற்றில் சந்தோஷத்தை காணவும் உதவி செய்யும். இன்று எனக்கு மதுரமான ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.