அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்" (உபாகமம் 31:8) என்ற வசனத்தை தியானிப்போம். இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்குள் நடத்திச் செல்லுவதற்கான பொறுப்பை யோசுவா தன்மேல் ஏற்று, மோசேயின் வேலையை செய்வதற்கு ஆயத்தமாகும் நிலையை இந்த வசனத்தில் பார்க்கிறோம். இந்த முக்கியமான தருணத்தில் மோசே, யோசுவாவிடம், "யோசுவா, கர்த்தரே உனக்கு முன்பாக செல்வார்; அவர் உன்னுடன் இருப்பார்; அவர் உன்னை கைவிடமாட்டார்; உன்னை விட்டு விலகமாட்டார்," என்று சொல்லுகிறான். இந்த வார்த்தைகள், முன்னேறிச் செல்லும்படியான பெலனையும் தைரியத்தையும் யோசுவாவுக்கு அளித்தன. அன்பானவர்களே, இந்த அருமையான வார்த்தைகள் உங்களுக்கும் உரியவை.

ஒருவேளை நீங்கள் புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்திருக்கலாம் அல்லது குடும்ப வியாபாரத்தை செய்ய தொடங்க இருக்கலாம்; திருமணமாகி புதிதாக இல்லற வாழ்வை ஆரம்பிக்க இருக்கலாம். நீங்கள் எதைச் செய்ய இருந்தாலும், ஆண்டவர் உங்களுக்கு முன்னே போகிறார்; அவர் உங்களோடு இருப்பார் என்பதை மறவாதிருங்கள்.

எங்கள் தகப்பனார் Dr.டி.ஜி.எஸ். தினகரன், 2008ம் ஆண்டு மரணமடைந்த பிறகு, நாங்கள் மனமுடைந்துபோனோம். குறிப்பாக, திடீரென ஊழியத்தின் பொறுப்பை சுமக்க நேரிட்டதால் என் கணவர் உள்ளமுடைந்தார். தேவ சித்தத்தையும் வழிகாட்டலையும் அறிந்துகொள்ளும்படியாக அநேக கடிதங்கள் வந்தபடியினால், அவர் இரவில் தூங்க முடியாமல் தவித்தார். கடிதங்கள் ஏராளமாக இருந்தபடியினால், ஊழியச் சுமையால் 23 நாள்கள் இரவில் அவரால் தூங்க இயலவில்லை. கடிதங்கள் குவிந்திருந்தன. அவர், ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து, உதவி கேட்டார். ஆனால், என்னால் அதற்காக ஜெபிக்க மாத்திரமே முடிந்தது. 23 இரவுகள் கழித்து, ஆண்டவர் திடீரென என் கணவரிடம் பேசினார்; அந்த ஜெப விண்ணப்பங்களுக்கு பதில் கொடுத்தார்; அவற்றைக் குறித்து தம் சித்தத்தை வெளிப்படுத்தினார். என் கணவர், அலுவலக ஊழியர் ஒருவரை அழைத்து, ஒவ்வொரு கடிதத்துக்கும் உரிய பதில்களை கூறினார்; ஒரே நாளில் அத்தனை கடிதங்களுக்கும் பதில் அனுப்பப்பட்டது. அன்று, ஆண்டவர், என் கணவருக்கு இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் புதிய யுகம் குறித்த தரிசனத்தை அளித்து, ஊழியத்தில் செயல்படுத்தும்படி திட்டத்திற்கு பின் திட்டங்களை கொடுத்தார். ஆண்டவர் கொடுத்த அத்தனை வாக்குத்தத்தமும் ஒரு வருட காலத்திற்குள் நிறைவேறின.

அன்பானவர்களே, கலங்காதிருங்கள்; எதிர்காலத்தைக் குறித்து பயப்படாதிருங்கள். ஆண்டவர் உங்கள் முன்னே போகிறார். அவர் உங்களோடு இருப்பார்; ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார்; உங்களை விட்டு விலகமாட்டார். நீங்கள் செய்ய வேண்டிய யாவற்றையும் செய்து முடிக்கும்படி அவர் உங்களுக்கு ஒரு தரிசனத்தை தந்து வழிநடத்துவார். எல்லாவற்றிலும் அவரே உங்களுடன் இருப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் என் முன்னே செல்வதற்காகவும், பாதைக்கு வெளிச்சமாய் விளங்குவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே மாறாத வழிகாட்டியாகவும், கைவிடாத துணையாகவும் இருக்கிறீர். என் பயங்களை விட்டுவிடவும், என் எதிர்காலத்தை உம்முடைய அன்பின் கரங்களில் முற்றிலுமாய் ஒப்படைக்கவும் உதவி செய்யும். இக்கட்டுகள் என்னை சூழும்போது, உம்முடைய மாறாத பிரசன்னம் அனுதினமும் என்னோடு இருப்பதை எனக்கு நினைவுப்படுத்தும். வாழ்வின் எந்த நிலையிலும் நீர் என்னை விட்டு விலகமாட்டீர்; கைவிடமாட்டீர் என்று நான் திடநம்பிக்கையாய் இருக்கும்படி என் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, தைரியத்தினால் நிரப்பும். என் வாழ்க்கையைக் குறித்த உம்முடைய தரிசனத்தை வெளிப்படுத்தும்; நீர் எவற்றை செய்யும்படி என்னை அழைத்திருக்கிறீரோ, அவற்றை செய்து முடிக்கும்படி என்னை வழிநடத்தும். என் இருதயத்தை பூரண சமாதானத்தினால் நிறைத்தளுரும்; என் வாழ்க்கையைக் குறித்து நீர் கொடுத்திருக்கும் எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவீர் என்று நம்புவதற்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.