அன்பானவர்களே, உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" (யோவான் 8:47) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். இந்த வார்த்தைகளை இயேசு ஜனங்களுக்குப் போதித்தார். அவரது போதனையை கேட்டவர்களுள் பரிசேயரும் இருந்தனர். அவர்கள், அவருக்கு உண்மையாய்ச் செவிகொடுப்பதற்கு மாறாக, அவருடன் வாக்குவாதம் செய்வதற்காக அவர் பேசுவதை கேட்டனர். அவர் பேசுவதை புரிந்துகொள்ளும்படியோ, அவற்றை விசுவாசிக்கும்படியோ அவர்கள் எண்ணவில்லை. "நீ பிதாவினுடையவன் அல்ல; நீ பேசுவது உண்மையல்ல," என்று அவர்கள் அவரது செய்தியை உதறினார்கள். அவரது வார்த்தைகள் அவர்களுக்கு சாதகமாக இல்லாதபடியினால் அவற்றுக்கு செவிகொடுக்கவும் புரிந்துகொள்ளவும் விசுவாசிக்கவும் மறுத்தார்கள். நம் வாழ்க்கையிலும் பெரும்பாலும் இப்படியே நடக்கிறது. நாம் நினைப்பதற்கு, எதிர்பார்ப்பதற்கு மாறாக யாராவது ஒன்றை கூறினால், நாம் அதை மறுக்க முயற்சிக்கிறோம். அது நம் நன்மைக்கேதுவானதாக இருந்தாலும்கூட, நாம் கேட்க விரும்புகிற காரியங்களுக்கு மாறானதாக இருப்பதால் அதை எதிர்க்கிறோம்.
நாமும் சிலவேளைகளில் தேவனிடம் இவ்வாறு நடந்துகொள்கிறோம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படியும், அவருடைய சித்தத்தின்படி நடக்கும்படியும் அவர் நம்மிடம் கூறலாம். ஆனால், அது நமக்குக் கடினமானதாக தோன்றக்கூடும். ஒருவேளை, அவர் புதிய வேலையில் சேரும்படி, புதிய இடத்திற்குச் செல்லும்படி, சில இன்பங்களை விட்டுவிடும்படி நம்மை நடத்தலாம். நாமும் வாழும் முறை நமக்கு சாதகமாக இருக்கிறபடியினால், தேவனுக்குச் செவிகொடுக்க நாம் விரும்பாதிருக்கலாம். அதன் காரணமாக, ஜெபிப்பதை நிறுத்தலாம்; அவருடைய கட்டளைகளை அசட்டை பண்ணலாம்; அவரை விட்டு தூரமான வாழ்க்கை நடத்தலாம். ஆனாலும் அன்பானவர்களே, "நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்" (உபாகமம் 30:16) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.

ஆகவே, ஆண்டவரை நேசிப்பதற்கு, கீழ்ப்படிந்து நடப்பதற்கு, அவருடைய கட்டளைகளை கைக்கொள்வதற்கு நாம் உறுதியாய் தீர்மானிப்போம். அப்படிச்செய்யும்போது, அவர் நம்மை நேர்த்தியான பாதையில் நடத்துவார்; ஆசீர்வதிப்பார்; பெருகப்பண்ணுவார். தங்களுக்கு ஏற்றதாய் இருக்கும்போது செவிகொடுப்பதும், அப்படி இல்லாதிருக்கும்போது கேளாமற்போவதுமான பரிசேயரைப்போல் நாம் இருக்கவேண்டாம். நாம் தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய திட்டங்கள் சிரமமானவையாய் தோன்றினாலும் அவற்றை நம்பும்போது உண்மையில் அவருக்குச் சொந்தமானவர்களாகிறோம். நம்முடைய சுய சித்தத்தை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, அவரை பின்பற்றினால், நம்முடைய நன்மைக்கென்று அவர் வகுத்த பரிபூரண திட்டங்களின்படி நம்மை செழிக்கப்பண்ணி ஆசீர்வதிப்பார். "ஆண்டவரே, நான் உமக்குச் சொந்தமாமானவனா(ளா)க விளங்கவும் உம்முடைய சத்தத்தைக் கேட்கவும், உம்முடைய சித்தத்தை செய்யவும் விரும்புகிறேன்," என்று இன்றைக்கு அர்ப்பணியுங்கள். ஆண்டவர்தாமே உங்களை மிகுதியாய் ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கும் வாஞ்சையும் தாழ்மையும் கொண்ட இருதயத்துடன் உம்மண்டை வருகிறேன். உம்முடைய கட்டளைகள் எளிதானவையாக இருக்கும்போது மாத்திரமல்ல; எல்லா சூழ்நிலைகளிலும் அவற்றுக்கு நான் செவிகொடுக்க எனக்கு உதவும். என்னுடைய சித்தத்தை முழுவதுமாக உம்மிடம் ஒப்படைத்து, என் வாழ்க்கையைக் குறித்த உம்முடைய பரிபூரணமான திட்டங்களை நம்புவதற்கான பெலனை எனக்குத் தாரும். உம்முடைய பாதைகள் கடினமானவையாக தோன்றும்போது, அவை எப்போதும் எனக்கு நன்மையானவையாகவே அமையும் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். உமக்கு நான் எப்போதும் கீழ்ப்படிந்து உம்முடைய கட்டளைகளை காத்துக்கொள்ளும்படி உம்பேரிலான அன்பினால் என் இருதயத்தை நிரப்பும். அனுதினமும் என்னை உம்மிடம் கிட்டிச்சேர்த்து, உம்முடைய சித்தத்தில் நான் நடக்கும்படி செய்யும். ஆண்டவரே, நான் உமக்குச் சொந்தமானவனா(ளா)க இருக்கவும், உம்முடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவும் எப்போதும் உம்மை பின்பற்றவும் எனக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.