அன்பானவர்களே, இன்றைக்கு இயேசுவின் நாமத்தைச் சொல்லி கூப்பிடுங்கள். அவர் உங்களுக்குச் செவிகொடுத்து, அற்புதங்களைச் செய்ய இரக்கம் மிகுந்தவராக இருக்கிறார். இன்றைக்கு, "கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்" (2 நாளாகமம் 14:11) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். பலனற்றவர்களுக்கு உண்மையாய் உதவி செய்வதற்கு ஆண்டவரைத் தவிர யாருமில்லை. பலனற்றவர்கள்மேல் ஆண்டவர் மனதுருக்கமாயிருக்கிறார். அவர், அவர்களை தம் பக்கமாக சேர்க்கிறார்; அவர்களைச் சுமக்கிறார்; அவர்களுக்காக யாவற்றையும் செய்கிறார்.
நீங்களும் பெரிய தேர்வை எதிர்கொள்ள, கடினமான பாடத்தை எழுத அல்லது உயர் மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற அதிகமாக போராடிக்கொண்டிருக்கலாம். சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்தவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் போராடிக்கொண்டிருக்கலாம். மிகுந்த திறமை மிகுந்தவர்கள் கலந்துகொள்ளும் போட்டியில் நீங்களும் பங்கேற்க இருக்கும் நிலையில், "இவ்வளவு பெரியவர்களை நான் எப்படி ஜெயிக்க முடியும்? மிகவும் பலவீனமாக உணருகிறேன்," என்று நீங்கள் நினைக்கலாம். தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் பலனற்றவர்களுக்கு சமீபமாய் வருகிறார்; அவர் உங்களுக்கு உதவி செய்வார்; பலத்தவர்கள்மேல் உங்களுக்கு வெற்றியை தருவார். அவருடைய கிருபை உங்களுக்குப் போதும்.
நான் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்த நாள்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. நான் படித்த வகுப்பில், 40, 50 வயதான, மிகுந்த அனுபவம் கொண்ட பெரியவர்களும் படித்தார்கள். அவர்கள் சொந்தமாக தொழில் செய்யும் தொழிலதிபர்களாக அல்லது மிகப்பெரிய நிறுவனங்களில் மேலாளர்களாக இருந்தனர். வகுப்பறை கலந்துரையாடலின்போது அவர்கள் நிர்வாகத்தில், பொருளாதாரத்தில், மேலாண்மையின் பல்வேறு பிரிவுகளில் தங்களுக்கு இருக்கும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். நான் மட்டுமே அனுபவம் இல்லாதவன் போல உணரக்கூடிய வகையில் மிகவும் பயத்தை ஏற்படுத்தும் தருணமாக அது அமைந்தது. "இவர்களோடு எப்படி போட்டிப்போட போகிறேன்?" என்று நான் திகைத்தேன்.
அனைவரும் தங்கள் அறிக்கையை காட்சிப்படுத்தவேண்டிய (presentation) நாள் வந்தது. அவர்கள் முன்பு நான் நின்று என் அறிக்கையை காட்சிப்படுத்தவேண்டும். ஆகவேதான் ஆண்டவரின் உதவியை நாடினேன். "இவ்வளவு பெரியவர்கள் மத்தியில் நான் எப்படி அறிக்கையை காட்சிப்படுத்துவேன். ஆண்டவரே, இது மிகவும் கடினம். எனக்கு உதவி செய்யும்," என்று வேண்டிக்கொண்டேன். ஆச்சரியவிதமான ஒரு சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது. எந்த விவரங்களை சேர்க்கவேண்டும்? எப்படி ஆயத்தப்படுத்தவேண்டும்? என்று ஆண்டவர் ஒவ்வொன்றையும் எனக்கு கற்றுத் தருவதை உணர்ந்தேன். என் இருதயம் மகிழ்ந்தது. நான் நம்பிக்கையோடு சென்று காட்சிப்படுத்தினேன். தேவனுடைய கிருபையால் எனக்கு அதற்கு A+ என்ற முழு மதிப்பெண்கள் கிடைத்தன. என் ஆசிரியருக்கும் அது திருப்தியை அளித்தது. ஆம், எந்தச் சூழ்நிலையையும் மேற்கொள்வதற்கு தேவன் உதவுவார். நீங்கள் பலத்த மக்களை எதிர்த்து நிற்க நேரிட்டாலும், அவர் தம் வல்லமையை உங்கள் மூலம் காண்பிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பலனற்றவனுக்கு உதவி செய்து, அவனை உயர்த்துவது உம்மால் மாத்திரமே கூடும் என்பதால் இன்றைக்கு உம்முடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுகிறேன். நீர் மனதுருக்கம் நிறைந்தவர்; ஒருபோதும் மாறாதவர். இந்தப் போராட்டத்தை நான் கடக்கும்படி என்னை சுமந்து செல்வதற்கு என் அருகில் வாரும். நான் சந்திக்கவேண்டிய சவால்கள் என்னிலும் பெரியவையாய் இருக்கின்றன. ஆனால், நீரோ பராக்கிரமசாலியாக இருக்கிறீர். உம்முடைய பலம், என்னுடைய பலவீனத்தில் பூரணமாக விளங்கட்டும். எனக்கு சமாதானத்தை, வழிகாட்டுதலை, தெய்வீக உறுதியை தந்தருளும். பலமுள்ளவர்களுக்கு எதிராக எனக்கு வெற்றியை உம்மால் அளிக்க முடியும் என்று நம்புகிறேன். உம்முடைய கிருபையால் என்னை நிரப்பும்; அது எனக்கு போதுமானது. எனக்குச் செவிகொடுத்து அற்புதங்களை நடப்பிப்பதற்காக நன்றி செலுத்தி இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.