அன்பானவர்களே, இன்றைக்கு இந்த செய்தியை உங்களுக்கு எழுதுகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன்" (எரேமியா 31:9) என்பதே இன்றைக்கு தேவன் தரும் வாக்குத்தத்தமாயிருக்கிறது. இவ்வாறே தேவன் உங்களை தண்ணீருள்ள நதிகளண்டையில், செம்மையான பாதையில் நடத்துவார். மனதில் அதிக பாரமிருப்பதாகவோ, மனம் சோர்ந்துபோனதாகவோ நீங்கள் உணரக்கூடும்; சமாதானமில்லாததுபோன்ற உணர்வு உங்கள் இருதயத்துக்குள் எழும்பக்கூடும். யாராவது என்மேல் அக்கறை காட்டமாட்டார்களா என்று நீங்கள் ஏங்கிக்கொண்டிருக்கலாம். ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த பணியை அல்லது நீங்கள் நிறைவேற்றி முடிக்கவேண்டிய காரியத்தை தொடர வேண்டுமா என்று எண்ணி நீங்கள் சலித்துப்போயிருக்கலாம். அன்பானவர்களே, இதுபோன்ற சூழ்நிலையில் தேவன் உங்களை தண்ணீருள்ள நதிகளண்டைக்கு அக்கறையாய் நடத்துவார். எலியாவின் வாழ்க்கையில் இப்படியே நடந்தது. அவன் யேசபேலுக்கு பயந்து உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்கையில், தேவன் அவனோடு பேசி, யோர்தானுக்கு கிழக்கே இருக்கிற இடத்திற்குச் சென்று மறைந்துகொள்ளும்படி அவனை வழிநடத்தினார். தேவன் அவனிடம், "நீ ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய். அங்கே உனக்கு உணவு கொடுக்கும்படி காகங்களுக்குக் கட்டளையிடுவேன்," என்று கூறினார். நெருக்கப்பட்ட அந்த நேரத்திலும் தேவன் அவனை ஆற்றினண்டையில் அமரப்பண்ணி, அவன் ஆத்துமாவை தேற்றி, அவனை போஷித்தார். அன்பானவர்களே, தேவன் இந்த அளவு நம்மேல் அக்கறை கொண்டிருக்கிறார். நம்முடைய வாழ்க்கைப் பாதையில், இருதயத்தை தளரச் செய்யும் பல்வேறு தடைகளையும் உபத்திரவங்களையும் அடிக்கடி எதிர்கொள்கிறோம். இதுபோன்ற உபத்திரவங்கள் வழியாக நடப்பதற்கு தேவன் நம்மை ஏன் அனுமதிக்கிறார் என்று நாம் கேட்கக்கூடும். அதுபோன்ற சூழ்நிலைகளிலும் தேவன் உங்களுக்கு உணவளிப்பார்; உங்களை பராமரிப்பார்; உங்கள் ஆத்துமாவை தேற்றுவார்; "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி...அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்" என்று சங்கீதக்காரன் கூறுவதுபோல, ஓர் ஆற்றின் அருகே அமர்ந்திருக்கும்படி செய்வார் (சங்கீதம் 23). அப்படி ஆச்சரியமான காரியங்களை ஆண்டவர் நமக்காக செய்கிறார்.
நான் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய பெற்றோரை விட்டு வெகுதொலைவில் இன்னொரு பட்டணத்தில் இருந்தேன். அப்போது, தனியாக இருப்பதாக உணர்ந்தேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலருக்கு தேவன் என்னுடைய தேவைகளை நினைவுப்படுத்தியுள்ளார். அவர்கள் எனக்காக சமைத்து, வேறு மாநிலங்களிலிருந்து கூட அனுப்பி வைத்தனர். தாம் என்பேரில் எவ்வளவு அக்கறையாயிருக்கிறார் என்பதை தேவன் எனக்குக் காட்டினார். அவ்வாறே உங்கள்பேரில் அக்கறை காண்பிப்பதற்கு, உதவி செய்வதற்கு, நீங்கள் கூறுவதை காதுகொடுத்து கேட்பதற்கு சிலர் தேவையாயிருக்கலாம். தேவன் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் ஏற்ற உதவியை அனுப்புவார். அவர் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார்; உங்களுக்குத் தேவையானவற்றை கொடுப்பார். ஆகவே, திடமனதாயிருங்கள். உறுதியுடன் வாழ்க்கையை
தொடருங்கள். தேவன் உங்களை பராமரிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் கொடுக்கும் வாக்குத்தத்தங்களுக்காகவும், என் வாழ்வில் மாறாமல் விளங்கும் உம் பிரசன்னத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தண்ணீருள்ள நதிகளண்டையிலும் நான் இடறிவிடாதபடி செம்மையான பாதையிலும் என்னை நடத்தும். என்னுடைய பாரங்களை, கவலைகளை, அதைரியமான உணர்வினை உம்முன்னே வைக்கிறேன். தயவாய் என் ஆத்துமாவை தேற்றும்; எனக்குத் தேவையான அக்கறையையும் ஆறுதலையும் அளித்தருளும். நீர் எலியாவின்மேல் அக்கறை கொண்டு, ஓர் அடைக்கலமான இடத்திற்கு நடத்தியதுபோல, என்னையும் பராமரிப்பீர் என்று நம்புகிறேன். நான் நெருக்கப்படுகிற காலங்களில் உம்முடைய அன்பையும் உண்மையையும் நான் மறவாதிருக்கும்படி செய்யும். எனக்கு தேவைப்படும்போது ஏற்ற உதவியையும் ஆதரவையும் அனுப்புவதோடு, நீர் எனக்கென்று வைத்திருக்கும் பணியை நான் தொடர்வதற்கான பெலனையும் தந்தருளும். நீர் என்னுடைய மேய்ப்பராக இருப்பதற்கும், என் ஆத்துமாவை மீட்டுக்கொள்வதற்கும், நான் நினைத்திராதவழிகளில் எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என்னை பராமரிப்பீர் என்பதை அறிந்து உம்மேல் நம்பிக்கை வைத்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.