அன்பானவர்களே, உங்களை பெலப்படுத்தி ஆண்டவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி வழிநடத்தக்கூடிய, "ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்" (1 நாளாகமம் 29:12) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆம், தேவனே சகலத்தையும் ஆளுகிறவர். தம்முடைய பார்வைக்கு உகந்தவர்களுக்கு அவர் ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுக்கிறார். சகலமும் அவருக்குச் சொந்தமானவையாயிருக்கின்றன. ஆகவே, நாம் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, ஐசுவரியவான்களாகிறோம்; நமக்குள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கிறோம். ஐசுவரியத்தையும் ஆஸ்தியையும் நாம் எப்படிச் சேர்த்துக்கொள்ள முடியும்? ஐசுவரியத்தின் மேலான இச்சையை நாம் மறுக்க வேண்டும். ஆஸ்தியை தொடரக்கூடிய ஆசையை நாம் துறக்கும்போது, மெய்யான ஐசுவரியத்தை பெற்றுக்கொள்வோம்.
ஒரு பெண்மணி இருந்தார்கள். அவர்களுக்கு மிகவும் குறைந்த வருமானமே இருந்தது. அதிலிருந்து இயேசுவுக்கு காணிக்கை கொடுத்து வந்தார்கள். சின்ன சின்ன வேலைகள் செய்து, குறைவான பணம் சம்பாதித்தாலும் மாதந்தோறும் அவர்கள் உதாரத்துவமாக கொடுத்தார்கள். தேவன் அவர்கள் உண்மையை கனம்பண்ணினார். அவர்கள் மகளுக்குத் திருமணம் ஒழுங்கானபோது, மணமகனே திருமண செலவு முழுவதையும் பொறுப்பெடுத்துக்கொண்டார். அவர்கள் மகளுடைய தோழிகள் அனைவரும் திருமணம் விமரிசையாக நடந்தை கண்டு ஆச்சரியப்பட்டார்கள்; ஆனால், அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதமே அதற்குக் காரணம் என்று கூறினார்கள். திருமண வெகுமதியிலிருநது அவர்கள் இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு ரூ.20,000/- காணிக்கை கொடுத்தார்கள். உடனடியாக அவர்களுடைய மகள் ஆசீர்வாதம் பெற்றார்கள்; வாழ்க்கையில் மகளின் தேவைகள் எல்லாவற்றையும் தேவன் அருளிச்செய்தார். அந்தப் பெண்மணியின் காணிக்கையையும் அவர்கள் குடும்பத்தார் ஆண்டவர் இயேசுவில் கொண்டிருந்த விசுவாசத்தையும் தேவன் கனப்படுத்தினார்; அவர்கள் மகளுக்கு மிகவும் வசதியான வாழ்க்கை அமைந்தது.
ஆம், அன்பானவர்களே, பெரும் ஆஸ்தியின்மீது நமக்கு நாட்டமில்லையென்றும், நாம், நமக்காக வாழவில்லை என்றும் அறிக்கையிடுவோம். எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்து, எல்லாவற்றுக்கும் மேலாக அவரே நம் தேவை என்று கூறுவோம். அப்போது, எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் அவர், ஐசுவரியத்தையும் கனத்தையும் அருளுகிறவரான அவர், நம் வாழ்க்கைக்குள் வருவார். அவர் நம்மோடு இருக்கும்போது, அவர் மூலமாக எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வோம்.


ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறவரே, என்னை உயர்த்தும். என்னுடைய கடன் பாரத்தின் மத்தியிலும், என் வாழ்வின் தேவைகள் மத்தியிலும் உம்மையே முழு மனதாய் நம்புகிறேன். ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். என்னுடைய எல்லா தேவைகளுக்கும் மேலாக, உம்மையே நான் விரும்புகிறேன். எல்லா ஆஸ்திகள், ஐசுவரியத்துக்கும் மேலாக உம்மையே நாடுகிறேன். எனக்கு நீரே எல்லாவற்றையும் அருளிச் செய்கிறீர். என்னை சுகமாக காத்துக்கொள்கிறீர். ஆண்டவரே, என் இருதயத்துக்குள் வாரும். ஜீவனின் சந்தோஷத்தை எனக்கு தந்தருளும். என்னுடைய கடன்கள் தீரட்டும். என் குறைவுகளை நிறைவாக்கும். ஓர் அற்புதத்தை செய்து, என் குறையை நிறைவாக்குவீராக. உம்மோடு ஐக்கியப்பட்டு நான் சந்தோஷமாக ஜீவிக்க உதவி செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.