எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். வியாதிப்பட்டிருந்த  மகனை தம்மிடம் கொண்டு வந்த மனுஷனிடம் இயேசு, "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" (மாற்கு 9:23)என்று கூறிய வசனத்தை இன்றைக்கு தியானிக்கிறோம்.

வேதம், நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என்று கூறுகிறது. நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது (1 யோவான் 5:4). நாம் விசுவாசிப்பதுடன், நமக்கு இருக்கிற எல்லாவற்றுக்காகவும் நன்றி செலுத்தவேண்டும். "நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக" (கொலோசெயர் 2:7)என்று வேதம் கூறுகிறது. ஆகவே, அன்பானவர்களே, நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் விசுவாசிக்கிறவண்ணம் உங்கள் தேவைகளை தேவன் சந்திப்பார் என்று நம்பி, தொடர்ந்து ஸ்தோத்திரிக்கவேண்டும். முதலாவது விசுவாசியுங்கள். உங்கள் விசுவாசத்தின் மூலம் உங்கள் விண்ணப்பங்களை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் விண்ணப்பம்பண்ணும்போது, "இயேசுவே, நீர் எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்துவிட்டதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்," என்று நன்றி சொல்லுங்கள். அதுவே, விசுவாசம்!

நீங்கள் அவரை ஸ்தோத்திரிக்கும்போது, அவரது சமுகம் உங்களோடு இருக்கும் என்று தேவன் கூறுகிறார். "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 தெசலோனிக்கேயர் 5:18)என்று வேதம் கூறுகிறது. தாவீதின் வாழ்க்கையை பாருங்கள், "கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" (சங்கீதம் 34:1)என்று அவன் கூறுகிறான். ஆகவே, தேவனை ஸ்தோத்திரித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் அவரை எந்த அளவு அதிகமாக ஸ்தோத்திரிக்கிறீர்களோ, அந்த அளவு அதிகமாக அவரது பிரசன்னத்தை உணருவீர்கள்.  தாவீது, இக்கட்டான நேரத்தை கடந்து சென்றபோது, தேவனை துதிக்க ஆரம்பித்தான்; அவர் ஓர் அற்புதத்தை செய்வார் என்று விசுவாசித்தான் (1 சாமுவேல் 30:6). அதே அதிகாரத்தில் தாவீது தான் இழந்த எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் என்று வாசிக்கிறோம். அவன் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் (வசனம் 19).  

அன்பானவர்களே, அவ்வண்ணமாகவே, நீங்களும் வாழ்க்கையில் அநேக காரியங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் மனந்தளர்ந்துபோகாதிருங்கள். நீங்கள் முழு மனதுடன் தேவனை ஸ்தோத்திரிக்க தொடங்கினால், உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் அவர் இருமடங்காக நிறைவேற்றுவார். அவரிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். விசுவாசமில்லாமல் உமக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று அறிந்திருக்கிறேன். ஆகவே, உம்மை அதிகமாக நம்பும்படி, அதிகமாக நேசிக்கும்படி, உம்முடைய வழிகளை பின்பற்ற என்னை அதிகமாக அர்ப்பணிக்கும்படி என் உள்ளத்தை ஏவியருளும். இவ்வுலகத்தின் நெருக்கங்களால் கவனம் தப்பிவிடாமல் உம்மையே நோக்கிக்கொண்டிருக்க எனக்கு உதவும். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. என்னை சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு உம்முடைய வல்லமையான கிரியைகளைக் குறித்து நான் சொல்லும்படி, உம்முடைய வல்லமையான கரத்தை நீட்டி, அதிசயவிதமாய் என்னை விடுவிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நீர் அளிக்கும் விடுதலையை நான் காணுமட்டும், கடுகளவான என் விசுவாசம் நாள்தோறும் பெருகும்படி செய்யும். நீர் உண்மையுள்ளவராயிருக்கிறபடியினால், உம்மை நம்புகிற ஒருவரும் ஒருபோதும் ஏமாற்றமடையும்படி விட மாட்டீர் என்று அறிந்திருக்கிறேன். என்னுடைய ஜெபத்தை கேட்டு, பதில் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.