அன்பானவர்களே, தேவன் உங்களுக்கு சிநேகிதராக இருக்கவிரும்புகிறார். ஆம், இயேசு உங்களை நேசிக்கிறார். உங்களை நண்பனே என்று அழைக்க அவர் விரும்புகிறார் (யோவான் 15:14). "சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்" (நீதிமொழிகள் 17:17) என்றும் வேதம் கூறுகிறது.


இருளான நாள்களில் இயேசுவின் அன்பை நீங்கள் அனுபவிப்பீர்கள். இயேசு உங்களை நேசிக்கிறார். "உலகில் எனக்கு நண்பர்களே இல்லை. எனக்கு உதவி செய்ய யாரும் விரும்பவில்லை. என்னை ஆதரிக்க யாருமில்லை. எனக்கு உத்தரவாதமாக நிற்க யாருமில்லை," என்று நீங்கள் கூறலாம். "எனக்காக பேசுவதற்கு யாருமில்லை; எனக்கு பண உதவி செய்ய யாருமில்லை. எனக்கு கற்றுக்கொடுக்க யாருமில்லை," என்று நீங்கள் கண்ணீரோடு சொல்லலாம். இந்த உலகில் உங்களுக்கு உதவி செய்வதற்கு நண்பர்கள் யாருமே இல்லாதிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு, "நான் உனக்கு சிநேகிதனாயிருப்பேன். எல்லாவற்றையும் என் வார்த்தையின்படியே செய்வதால், நீ எனக்கு சிநேகிதனாயிருப்பாய். பயப்படாதே," என்று கூறுகிறார்.


திரு. பிரபாகர் ராவின் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் 18 வயதிலேயே இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தனர். அவரது மனைவி திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரித்துப்போனார்கள். திரு. பிரபாகர் ராவ் அதிக துக்கமடைந்தார். அவர் மது அருந்தவும், புகை பிடிக்கவும் தொடங்கினார். அதனால் அவருடைய உடல்நலம் கெட்டுப்போனது; இதய அறுவைசிகிச்சை செய்யவேண்டியதாயிற்று; உடலில் வாத பாதிப்பும் ஏற்பட்டது. அவரது மகள்களுக்கு ஏற்ற வரன் பார்ப்பதற்கு உதவிட யாருமில்லை. அப்போது குண்டூரில் நடந்த இயேசு அழைக்கிறார் கூட்டத்தில் திரு. பிரபாகர் ராவ் கலந்துகொண்டார். அங்கே லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். ஜெபவேளையில் நான் அவர்கள் மத்தியில் அவரது பெயரைக் கூப்பிடும்படி பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தினார். "பிரபாகர் ராவ், எங்கே இருக்கிறீர்கள்? மேடைக்கு ஓடி வாருங்கள். உங்கள் தோள்பட்டையில் ஏதோ பிரச்னை இருக்கிறது. இங்கே பிரபாகர் ராவ் என்று அநேகர் இருக்கிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுக்கு தோள்பட்டையில் பிரச்னை இருக்கிறது. தேவன் உங்களை தொட்டு, மறுரூபப்படுத்துகிறார். தமது பரிசுத்த ஆவியானவரை உங்கள்மேல் வைக்கிறார்," என்று நான் கூறும்படி பரிசுத்த ஆவியானவர் செய்தார். திரு. பிரபாகர் ராவ் மேடைக்கு வந்தார்; நான் அவருக்காக ஜெபித்தேன். தேவன் அவரை பூரணமாக குணப்படுத்தினார். அடிமைத்தனங்கள் மறைந்தன. அவர் விடுதலை பெற்றார். பல லட்ச ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்கியை தாங்கினார். அவருடைய மகளுக்கு இருந்த தோல் பிரச்னையையும் தேவன் குணப்படுத்தினார்; வாசல்களை திறந்தார். அவரது பெண்கள் மூவரும் திருமணம் நடைபெற்றது. அவரது துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாக மாறின.
அன்பானவர்களே, நீங்கள் தமது சிநேகிதர் என்று தேவன் கூறுகிறார். ஆகவே, இயேசுவுக்கு உங்கள் இருதயத்தை திறந்து, "ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்முடைய நண்பன். என் இருதயத்தையும் வாழ்க்கையையும் உம்மை நோக்கி திருப்புகிறேன்," என்று சொல்லுங்கள். இயேசு உங்கள் வாழ்க்கையை பொறுப்பெடுத்து, உங்களுக்கு அநாதி சிநேகிதராக இருப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எப்போதும் எனக்கு உண்மையான சிநேகிதராக இருக்கும் சொல்லிமுடியாத ஈவாகிய இயேசுவை எனக்கு தந்தததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை உம்முடைய சிநேகிதனாக இருக்கும்படி தெரிவுகொண்டுள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போது என் இருதயத்தை உமக்கு திறக்கிறேன். உம்முடைய பிரசன்னத்தினால் என்னை நிரப்பும்; நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் உம்முடைய வழிகளில், உம்மோடு கரம்கோர்த்து நடக்கும்படியும் என் வாழ்க்கையை பொறுப்பெடுத்துக்கொள்ளும். தனிமை உணர்ச்சியிலிருந்து என்னை விடுவித்தருளும். என் மனதை புதிதாக்கும். நீர் எனக்கு சமீபமாய் இருப்பதை நான் அனுபவிக்கவும், தினமும் உமக்குள் வளரவும் உதவும். நான் உம்முடைய சத்தத்தைக் கேட்கும்படி செய்யும். இதுவரை இல்லாதவண்ணம் உம்முடைய அற்புதங்களை நான் அனுபவிக்க உதவும். என்னை சிநேகிதனாக அரவணைத்து உமக்குள் புதிய ஆரம்பத்தை தருவதற்காக நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.