அன்பானவர்களே, இன்றைக்கு, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11) என்ற வசனத்தை தியானிப்போம். நம்மை ஆசீர்வதிப்பதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. அவருடைய திட்டங்கள் ஒருபோதும் நிச்சயமற்றவையாகவே, தற்செயலானவையாகவோ இல்லாமல், நம்முடைய நன்மைக்கென்று கவனமாக வடிவமைக்கப்பட்டவையாய் இருக்கின்றன. "அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்" என்று இதை வேதம் உறுதிப்படுத்துகிறது (ஏசாயா 28:29). மனுஷன் கணக்கற்ற திட்டத்தை தீட்டலாம்; ஆனால், இறுதியில் தேவனுடைய நோக்கமே நிலைநிற்கும். தேவன், இஸ்ரவேலின் ராஜாவான தாவீதுக்கு நேர்த்தியானவற்றை நியமித்தபோது, எதிர்ப்பு கிளம்பியது. ஆண்களும் பெண்களும் அவன்மீது பொறாமை கொண்டு, அவனுக்கு எதிராக பொல்லாங்கை யோசித்தார்கள். ஆகவேதான் அவன், "அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது" என்று கதறுகிறான் (சங்கீதம் 140:2, 3). தன்னுடைய கிலேசத்தில் தாவீது தேவனை நோக்கி, "கர்த்தாவே, பொல்லாதவர்களின் கைகளுக்கு என்னை நீங்கலாக்கி பாதுகாத்துக்கொள்ளும்," என்று முறையிடுகிறான். தேவன் நல்லவராகவே இருக்கிறார்; அவருடைய திட்டங்கள் எப்போதும் நன்மைக்கேதுவானவையாகவே உள்ளன. மாறாக, மனுஷரின் யோசனைகள் பொல்லாதவையாக இருக்கின்றன. ஆகவேதான் தேவன், "என்னுடைய நினைவுகள் தீமைக்கானவையல்ல; நன்மைக்கானவையே," என்று நமக்கு உறுதிப்படுத்துகிறார். இக்கட்டான சமயங்களில், தேவனுடைய பூரணமான திட்டத்தை காண்பதற்கு நாம் சிரமப்படலாம். நாம் அழலாம்; புலம்பலாம்; சிலவேளைகளில், எதிர்காலம் என்னவென்று அறிய இயலாமல் தேவனையே கேள்வியும் கேட்கலாம். ஆனால், தேவனுடைய திட்டங்கள் நமக்கு நன்மைக்கேதுவானவையாகவே இருக்கின்றன. நம்முடைய நன்மைக்கென்று அவர் ஞானமாய் எல்லாவற்றையும் ஏற்படுத்துகிறார். நம்முடைய பாதை குழப்பமாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கும்போது, தேவன் நம்மை சரியான பாதையில் நடத்துவார் என்று நாம் நம்பலாம்.

எங்கள் மகள் ஷேரன் பல்லைக்கழகத்திற்கு படிக்கச் சென்றது இதற்கு நல்ல உதாரணமாகும். ஒரு பெரிய சுவரின்மேல், "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" - இதேவசனம் எழுதப்பட்டிருந்ததை அவள் கண்டாள். இது அவளை அதிகமாய் ஊக்கப்படுத்தியது. அவள், "ஆண்டவர் என்னைக் குறித்தும் நினைக்கிறார்" என்று கூறினாள். அன்பானவர்களே, பலவேளைகளில் ஜனங்கள் நம்மேல் நடந்துபோகலாம். தீயையும் தண்ணீரையும் கடந்துசெல்வதற்கு தேவன் நம்மை அனுமதிக்கலாம். ஆனால் அவர், "செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்" (சங்கீதம் 66:12) என்று வசனம் கூறுவதுபோல நம்மை நடத்துகிறார். இன்றைக்கு நீங்கள் பொருட்படுத்தப்படாத நிலையில் இருக்கலாம். ஆனாலும் திடன்கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கென்று நேர்த்தியான எதிர்காலத்தை வைத்திருக்கிறார். நிச்சயமாகவே நம்பிக்கை உண்டு; உங்கள் நம்பிக்கை வீண்போகாது. அன்பானவர்களே, சந்தோஷப்பட்டு களிகூருங்கள்! ஆண்டவர் எப்போதும் உங்கள்மேல் நினைவாயிருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் வாழ்க்கையைக் குறித்து நீர் வைத்திருக்கிற ஆச்சரியமான திட்டங்களுக்காகவும், அவை தீமைக்கானவையாக அல்லாமல், நன்மைக்கேதுவானவையாக இருப்பதாலும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் ஞானத்தின் தேவனாயிருக்கிறீர்; உம்முடைய நினைவுகள் பூரணமானவையாக, ஜெயம்பெறுகிறவையாக இருக்கின்றன. ஆண்டவரே, பிறர் எனக்கு விரோதமாக எழும்பும்போது, நீர் எனக்கு அடைக்கலமாக இருப்பீராக; பொல்லாதவர்களின் கைகளிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்வீராக. நான் குழம்பும் தருணங்களில், நீர் சரியான பாதையில் நடத்துவீர் என்பதை நான் மறக்காமல் இருப்பதற்கு உதவும். எதிர்காலத்தை என்னால் பார்க்க இயலாவிட்டாலும், என் நன்மைக்காகவே நீர் எல்லாவற்றையும் செய்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். தீயையும் தண்ணீரையும் என்னை கடக்கப்பண்ணி, செழிப்பான இடத்தை நோக்கி என்னை நடத்துவதற்காக உமக்கு நன்றி. இன்றைக்கு நான் எங்கே இருந்தாலும், நீர் எனக்கென்று நேர்த்தியான எதிர்காலத்தை வைத்திருக்கிறீர் என்பதை அறிந்து களிகூருகிறேன். நீர் எப்போதும் என்மேல் நினைவாயிருப்பதற்காகவும், உம்முடைய எண்ணங்கள் ஒருபோதும் தவறாதவையாக இருப்பதற்காகவும் உமக்கே சகல துதியையும் மகிமையையும் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.