அன்பானவர்களே, "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1 கொரிந்தியர் 6:19) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவரின் மறுரூபமாக்கும் வல்லமையை விசுவாசிக்கவும், ஜீவனுள்ள தேவனின் ஆலயமாக வாழும்படியும் இந்த அழைப்பு நமக்குக் கொடுக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுவதுடன், வாழ்வின் இக்கட்டுகளை மேற்கொண்டு, பரிசுத்தமாக நடப்பதற்கு, தெய்வீக பெலனை நமக்குத் தருகிறார்.

பரிசுத்த ஆவி மரியாளின்மேல் வந்தபோது, உன்னதமானவரின் பெலன் அவளை நிறைத்தது (லூக்கா 1:35). அவ்வாறே, பரிசுத்த ஆவியானவர், மனுஷீக பெலத்தினாலோ, பராக்கிரமத்தினாலோ அல்ல; தமது தெய்வீக பிரசன்னத்தினால் நம்மை பெலப்படுத்துகிறார் (சகரியா 4:6). பெலவீனமாக உணர்ந்தாலோ, வாழ்வின் பாரங்கள் அழுத்தினாலோ பயப்படாதிருங்கள். "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்" (லூக்கா 4:18) என்று இயேசு கூறியதுபோல, பாவத்திலிருந்தும், பயத்திலிருந்தும், இருளிலிருந்தும் நம்மை விடுவிக்கவே பரிசுத்த ஆவியானவர் வருகிறார். பரிசுத்த ஆவியானவர், விடுதலையை தருகிறார்; கட்டுகளை உடைக்கிறார்; இயேசுவின் பூரணத்தினால் நம்மை நிரப்புகிறார்.

மறுரூபமாகுதல் எப்படி நடக்கிறது?

இயேசு தாம் சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் நாம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கு வழியை உண்டாக்கினார் (1 யோவான் 1:7). நாம் கேட்கும்போது அவர் நம்மை தம்முடைய ஆவியினால் நிரப்புகிறார் (லூக்கா 11:13); மனந்திரும்புவதற்கு நமக்கு வழிகாட்டி, அவருடைய மன்னிப்பை பெற்றுக்கொள்ளும்படி செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கண்களை இயேசுவுக்கு நேராக திருப்புகிறார்; விடுதலையின் ஆதாரமாக விளங்குகிறார் (1 கொரிந்தியர் 12:3). இயேசுவின் இரத்தத்தின் மூலம் நாம் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 8:2). இந்த விடுதலை, இயேசுவின் வழிகளில் காணப்படும் புது ஜீவனை, புது நினைவுகளை, புதிய பாஷையை நமக்குக் கொடுக்கிறது (மாற்கு 16:17). பரிசுத்த ஆவியானவர் நம்மை சுத்திகரிப்பதோடு, சோதனைகளை மேற்கொள்ளும்படி நம்மை பெலப்படுத்துகிறது. உலக சோதனைகள் நம்மை சூழும்போது, உதவிக்காக நாம் பரிசுத்த ஆவியானவரை நோக்கிக் கூப்பிடலாம். அந்நிய பாஷைகளில் பேசுவது, சத்துருவை எதிர்த்து நிற்பதற்கு நமக்கு பக்திவிருத்தியுண்டாக்கி, பெலப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 14:4). எல்லா இருளையும் ஜெயித்து, தேவனுடைய பிள்ளைகளாக திடமாக நிற்கும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை பயிற்றுவிக்கிறார்.

மரியாளையும் இயேசுவின் சீஷர்களையும் நிரப்பிய அதே பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு உங்களையும் நிரப்புவார். அவர் உங்களை பாவத்திலிருந்து விடுதலையாக்கி, ஜெயிக்கும்படி பெலப்படுத்தி, கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிபூரண ஜீவனால் நிரப்பி, தேவனுடைய பரிசுத்த ஆலயமாக மறுரூபமாக்குவராக. "கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு" (2 கொரிந்தியர் 3:17) என்று வேதம் கூறுகிறது. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உங்களுக்குள் வாசம்பண்ணி, ஜெயமும் நோக்கமும் கொண்ட வாழ்க்கைக்குள் வழிநடத்தும்படி பரிசுத்த ஆவியானவரை அழைத்திடுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னுடைய சரீரத்தை உம்முடைய பரிசுத்த ஆவியின் ஆலயமாக்கியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைத்து, உம்முடைய தெய்வீக வல்லமையினால் என் வாழ்க்கையை மறுரூபமாக்கும். இயேசுவின் இரத்தத்தினால் என்னை சுத்திகரித்து, எல்லா பாவத்திலிருந்தும் கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கும். சோதனைகளை மேற்கொண்டு, உம்முடைய பரிபூரண பரிசுத்தத்தில் ஜீவிக்க எனக்கு உதவி செய்யும். உமக்கு பிரியமான பிள்ளையாக, நீர் அருளும் விடுதலையிலும், சந்தோஷத்திலும் நான் வாழும்படி பெலப்படுத்தும். பரிசுத்த ஆவியானவரே, என் சிந்தனைகள், வார்த்தைகள், கிரியைகள் இயேசுவை மகிமைப்படுத்துவதாக இருக்கும்படி என்னை வழிநடத்தும். உம் பிரசன்னம் எப்போதும் எனக்குள் தங்கியிருந்து, இவ்வுலகில் நான் ஒரு நோக்கத்தோடு, அன்பின் பாத்திரமாக வாழ்வதற்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.