அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் உங்களை அன்போடு வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்" (யோவான் 1:51) என்ற வசனத்தை நாம் தியானிப்போம்.

நாத்தான்வேல் என்ற மனுஷனிடத்தில் தேவன் இவ்வாறு கூறுகிறார். தேவனாகிய கர்த்தரின் ஆழமான காரியங்களை நாத்தான்வேல் புரிந்துகொள்ளவில்லை. ஆனாலும், இந்த தருணத்தில், தம்மிடமிருந்து விசேஷித்த வெளிப்பாடு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அறிவை தேவன் அவனுக்கு அருளிச்செய்தார். தேவனை அறிந்துகொள்வது என்பது, தேவ பிள்ளையின் வாழ்வில் மகத்தான ஆசீர்வாதமாயிருக்கிறது. "என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்" (ஏசாயா 53:11) என்று வேதம் கூறுகிறது. வேதத்தை வாசிப்பதன் மூலமாக நாம் ஆண்டவரைக் குறித்து அறிந்துகொள்ள முடியும். ஆகவேதான் நான் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுகிறேன். நாம் தேவனுடைய வசனத்தில் மூழ்கியிருக்கும்போது, கணக்கற்ற நன்மைகளும், தேவனாகிய கர்த்தரை அறிகிற அறிவும் ஆசீர்வாதமாக கிடைக்கும். அல்லேலூயா.

அன்பானவர்களே, வேதத்தை வாசிக்க எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? முழு இருதயத்தோடும் உங்களை அர்ப்பணித்து வேதத்தை வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கை மறுரூபமாகும். "சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்" (கொலோசெயர் 1:10) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் ஆண்டவரை பிரியப்படுத்தவும், நற்கிரியைகளான கனிகளை கொடுக்கவும் கூடும்.

ஆம், தேவன் எல்லாவற்றையும் உங்களுக்கு நேர்த்தியாக கற்றுக்கொடுப்பார். ஆகவே, அவரது சமுகத்தில் அமர்ந்து, வேதத்தை திறந்து வாசிக்க ஆரம்பியுங்கள். ஆண்டவர்தாமே உங்களை தம்மண்டை கிட்டிச்சேர்த்து, கற்றுக்கொடுப்பார். எப்பொழுதும் உங்களை தமக்கு அண்மையில் சேர்த்து, உங்கள்மேல் தம் கண்களை வைத்து உங்களை வழிநடத்துவார் (சங்கீதம் 32:8). அன்பானவர்களே, இந்த விலையேறப்பெற்ற அனுபவத்தை பெறுவதற்கு விரும்புகிறீர்களா? ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் இந்த தெய்வீக ஆசீர்வாதத்தை உங்களுக்கு அருளிச்செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, தாழ்மையான இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். என் வாழ்க்கையை மறுரூபப்படுத்தும் வல்லமை உம்முடைய வார்த்தைக்கு இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நாத்தான்வேலுக்கு நீர் வெளிப்படுத்தியதுபோன்று, உம்முடைய சத்தியத்தின் ஆழங்களை பார்க்கும்படி என் கண்களை திறந்தருளும். உம்மை நான் இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ளும்படி, உம்முடைய வசனத்தில் மூழ்கியிருப்பதற்கான வாஞ்சையை எனக்கு தந்தருளும். உமக்கு ஏற்றபடி நடந்து, உமக்கு பிரியமானபடி எல்லா நற்கிரியைகளையும் செய்து, உம்முடைய மகிமைக்கென்று கனி கொடுக்க எனக்கு உதவியருளும். வேதம் கூறுகிறவண்ணம், உம்முடைய வழிகளை எனக்குப் போதித்து, உம்முடைய அன்பான கண்களை என்மேல் வைத்து, என்னை நடத்தியருளும் (சங்கீதம் 32:8). என்னை உம்மண்டை கிட்டிச்சேர்த்து, எப்போதும் உம்முடைய சமுகத்தின் சந்தோஷத்தை நான் அனுபவிக்கும்படி செய்யும். உம்முடைய வசனத்தை நான் தியானிக்கும்போது, பரிசுத்த ஆவியின் மூலமாக என்னை ஞானத்தினாலும், புத்தியினாலும் நிறைத்தருள வேண்டுமென்று இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.