எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று ஈஸ்டர் பண்டிகை. ஆனால், நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்களா? உலக காரியங்கள் எல்லாவற்றின்மேலும், நீங்கள் நம்பியவர்கள் அத்தனைபேர் மேலும் நம்பிக்கையை இழந்துவிட்டீர்களா? "அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்" (எரேமியா 31:9)என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். ஆகவே, திடன்கொள்ளுங்கள். இது எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம் பாருங்கள்!

ஆம், அவர்கள் அழுதுகொண்டு வரலாம். இன்றைக்கு நீங்களும் கண்ணீரோடு இருக்கலாம். நம்பிக்கை, பணம், பெலன் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களா? கர்த்தர், "அவர்களை வழிநடத்துவேன்; அவர்களை இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன்," என்று கூறுகிறார். ஆகவேதான் தாவீது, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்," என்று சொல்லுகிறான் (சங்கீதம் 23:1). இந்த வார்த்தைகளை நம்புங்கள். இப்படியே நீங்களும் சொல்லுங்கள். மனமுடைந்து சோர்ந்துபோயிருக்கிறீர்களா? எல்லாவற்றையும் இழந்துவிட்டதால் அழுதுகொண்டிருக்கிறீர்களா? தாவீது, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்," என்று கூறினான். அவ்வாறே நீங்களும் இன்று தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள்.

அதுதான் ஈஸ்டர். ஆண்டவர் உயிரோடு எழுந்திருக்கிறார் என்பதே ஈஸ்டரின் பொருள். அவர் மரித்துப்போன தேவன் அல்ல. அவர் உயிரோடிருக்கிறார். சதாகாலமும் ஜீவிக்கிறார். அதுதான் ஈஸ்டர். சந்தோஷமாயிருங்கள். எப்போதும், "ஐயோ, அதை இழந்துபோனேனே... இதை இழந்துபோனேனே," என்று அழுதுகொண்டே இராதிருங்கள். ஆண்டவர் நம் மேய்ப்பராயிருக்கிறபடியினால் அவர்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22)என்று வேதம் கூறுகிறது. 'கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்' என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (நீதிமொழிகள் 28:25). "என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்" (எரேமியா 31:14)என்று ஆண்டவர் கூறுகிறார்.

இன்றைக்கு நீங்கள், "நான் ஆரோக்கியத்தை இழந்துபோனேன். பணத்தை இழந்துபோனேன். சமாதானத்தை இழந்துபோனேன். என் குடும்பத்தில் சமாதானமில்லை. எல்லாமே இருளாயிருக்கிறது," என்று அழுதுகொண்டிருக்கலாம். ஆனால், ஆண்டவர், "உன்னை உயிர்ப்பிக்கவே நான் வந்தேன். அதற்காகவே என் ஜீவனை சிலுவையில் கொடுத்தேன். அதற்காகவே இன்றைக்கு உயிர்த்தெழுந்தேன். உன் வாழ்க்கையிலும் அப்படியே செய்வேன். எல்லாவற்றையும் நான் உயிர்ப்பிப்பேன். எல்லா இருளும் விலகிப்போகும். உன் துக்கமெல்லாம் அகன்றுபோகும்," என்று சொல்லுகிறார். இப்போது அவரை நோக்கிப் பார்த்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் அழுகையோடு வருகிறேன். ஆனாலும், உம்முடைய வாக்குத்தத்தங்களை நம்புகிறேன். நீர் என் மேய்ப்பர். வாழ்க்கையில் எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. என் பெலவீனத்திலும், சமாதானத்தின் நதிகளண்டையில் நீர் என்னை நடத்துவீர். உடைந்துபோன என் உள்ளத்தை நீர் உயிர்ப்பித்து, நான் இழந்துபோன எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். நான் மனுஷரை நம்பவில்லை. உம்முடைய கிருபையையே நம்புகிறேன். ஆண்டவர் இயேசு, மறுபடியும் எழுந்து எப்போதும் ஜீவிக்கிறபடியால் உம்மை துதிக்கிறேன். உம்முடைய வெளிச்சம், இருளின் மத்தியில் பிரகாசிக்கட்டும். என் துக்கத்தை நீக்கி, உம்முடைய சந்தோஷத்தை தாரும். உம்முடைய நன்மையால் என்னை திருப்தியாக்கி, பூரணப்படுத்தும். உயிர்த்தெழுந்த இரட்சகர்மேல் உண்மையுள்ள தகப்பன்மேல் முழு நம்பிக்கையையும் வைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.