அன்பானவர்களே, "அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்" (ஏசாயா 33:16) என்று இன்றைய வாக்குத்தத்தத்தில் தேவன் கூறுகிறார். இந்த நிச்சயம் நமக்கு எவ்வளவு ஆறுதலை தருகிறது! தேவன் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அருளிச்செய்து, உயர்ந்த இடங்களுக்கு உங்களை உயர்த்துவார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
இதற்காகவே இயேசு, இவ்வுலகில் தன்னை அதிகமாய் தாழ்த்தினார். அவர்தாமே தேவனாயிருந்தாலும், மகிமை கொண்டவராயிருந்தாலும், மரிக்கவும், கல்லறையில் அடக்கம்பண்ணப்படவும் தன்னையே ஒப்படைத்தார். ஆனால், தேவ ஆவியானவர், இயேசுவுக்குள் இருந்த அதே ஆவியானவர், மரணத்திலிருந்து அவரை எழுப்பினார்; அவர் உயிருடன் எழுந்தார். இன்று அவர் உயிர்த்தெழுந்த நம் இரட்சகராக ஜீவிக்கிறார். இயேசுவின் அதே ஆவியானவர், உங்களையும் எழும்பப்பண்ணி, இவ்வுலகில் முற்றும் ஜெயங்கொள்ளும்படி செய்வார். இயேசுவின் வல்லமையான நாமம் உங்கள்மேலிருக்கிறபடியினால், தேவன் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற எல்லா ஆசீர்வாதத்தையும் நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். அவருடைய பரிசுத்த நாமத்தை துதியுங்கள். அவரை நம்பி, அவருடைய நாமத்தை விசுவாசத்துடன் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார்; உங்கள் தேவைகளை அருளிச்செய்வார்; பூமியின் உயர்ந்த இடங்களில் நீங்கள் தங்கும்படி செய்வார்.
கொல்கத்தாவை சேர்ந்த டெவோனிட்டா என்ற சகோதரியின் அருமையான சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் எம்.டெக். படித்து முடித்து, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அவர்களுடைய சொந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு தொலைவு அதிகம். அவர்கள் வேலை செய்த இடத்தில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பணியிடத்தில் அவர்களுக்கு பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. குறிப்பாக ஆண்டவர் இயேசுவின்மேல் இவர்களுக்கு இருக்கும் விசுவாசத்திற்காக அதிக கேலி, கிண்டலுக்கு உள்ளானார்கள். சகோதரி டெவோனிட்டாவின் தாயார் சுகவீனமாக இருந்தார்கள். ஆகவே, அவர்களைப் பார்ப்பதற்கு வாரந்தோறும் ஜாம்ஷெட்பூரிலிருந்து கொல்கத்தாவுக்கு சென்று வரவேண்டியிருந்தது.
அதிக பணி அழுத்தமும், மனரீதியான அழுத்தமும் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. இந்த இக்கட்டானவேளையில், நாகலாந்து மாநிலம், திமாப்பூரில் நடைபெற்ற இயேசு அழைக்கிறார் தீர்க்கதரிசன மாநாட்டில் சகோதரி டெவோனிட்டா கலந்துகொண்டார்கள். அதில் நான் பேசியபோது, பரிசுத்த ஆவியானவர், "இந்த மாநிலத்திற்கு வெளியே இருந்து, அதிக தொலைவு பயணித்து வந்த ஒருவர் இருக்கிறீர்கள். உங்கள் உள்ளம் கவலையால் நிரம்பியிருக்கிறது. நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு திரும்பிச் செல்லும்போது, ஆண்டவர் இயேசு எல்லாவற்றையும் மாற்றியிருப்பார். எல்லாம் உங்களுக்குச் சாதகமாக மாறும்," என்று கூறும்படி என்னை வழிநடத்தினார். இந்த வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அளித்தன. பரிசுத்த ஆவியினால் அவர்கள் பெலப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் அலுவலகத்திற்கு திரும்பிச் சென்றபோது, ஆண்டவர் அங்கே ஓர் அற்புதத்தைச் செய்திருந்தார். நிறுவனம் அவர்களை அவர்களது சொந்த ஊருக்கே பணியிட மாற்றம் செய்திருந்தது. கொல்கத்தாவில் இருக்கும் தாயாரை கவனித்துக்கொண்டே வேலை செய்ய அனுமதித்திருந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் சமாதானம் உண்டானது. வேலை, பெரிய ஆசீர்வாதமாக மாறியது.
இவ்வாறே தேவன் உங்கள்பேரில் அக்கறை காட்டுவார். உங்களுக்குத் தேவையான அப்பத்தையும் தண்ணீரையும் அவர் அளிப்பார். உயர் ஸ்தலங்களில் வாசம்பண்ணும்படி செய்வார்; இயேசு உங்களுடன் நடந்து வருவார். தேவன், தாம் வாக்குப்பண்ணியவற்றை செய்ய உண்மையுள்ளவரானதால் அவரை நம்புங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, எனக்கு தேவையானவை எல்லாவற்றையும் தந்தருளுவதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னை உயர் ஸ்தலங்களுக்கு உயர்த்துவீர் என்றும், என்னை வழிநடத்துவீர் என்றும் நம்புகிறேன். இயேசுவே, எனக்காக மரிக்கும்படி உம்மை தாழ்த்தியதற்காகவும், மறுபடியும் மகிமையில் எழுந்ததற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, சாவிலிருந்து உம்மை எழுப்பிய அதே ஆவியானவரால் என்னை நிரப்பிடும். நீர் எனக்காக ஆயத்தம் பண்ணியிருக்கும் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும்படி, இந்த உலகில் நான் ஜெயம்பெறும்படி செய்யும். நீர் வாக்குத்தத்தங்களை காக்கிறதில் உண்மையுள்ளவர் என்று அறிந்து, உம்முடைய நாமத்தை விசுவாசத்துடன் பற்றிக்கொள்கிறேன். அன்றன்றுள்ள அப்பத்தை எனக்குத் தந்து, உம்முடைய சமுகத்தின் ஜீவத்தண்ணீரை அளித்தருளும். உயர் ஸ்தலங்களில் வாசம்பண்ணவும், உம்முடைய நித்திய அன்பிலும், விசாரிப்பிலும் இளைப்பாறுதல் காண எனக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.