அன்பானவர்களே, இன்றைக்கு, "உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்" (உபாகமம் 2:7) என்ற வசனத்தை தியானிக்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். அவ்வாறே உங்கள் வேலையையும் அவர் ஆசீர்வதிப்பார். இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு நடக்கையையும் அவர் நன்றாய் அறிந்திருந்தார். அவர்களுக்கு வேண்டியவை எல்லாவற்றையும் அவர் வாய்க்கச் செய்தார். ஆண்டவர் உங்கள்பேரில் அன்பாயிருக்கிறார். ஆகவே, நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். தேவன் என்னை ஆசீர்வதிக்கும்போதெல்லாம் நான் என்னுடைய கணவரிடம், "ஆண்டவர் என்னை நேசிக்கிறார்; இயேசு என்பேரில் அன்பாயிருக்கிறார்," என்று சந்தோஷமாக சொல்லுவேன். அப்போது என் கணவர், புன்னகையுடன், "ஆண்டவர் என்னையும் நேசிக்கிறார்," என்று கூறுவார். "ஆண்டவர் உன்னை விட என்னை அதிகமாய் நேசிக்கிறார்," என்றும் வேடிக்கையாகக் கூறுவார். ஆம், இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதில் கர்த்தர் பிரியமாயிருந்தார். அவர்களுடைய நடைகளை அவர் அறிந்திருந்தார். ஆகவேதான் தாவீது, "நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்" (சங்கீதம் 139:3,4)என்று அழகாகக் கூறினான்.

அன்பானவர்களே, "நான் சென்று கொண்டிருக்கும் பாதையை ஆண்டவர் அறியமாட்டார்," என்று ஒருபோதும் சொல்லாதிருங்கள். உங்களை அவர் நன்றாய் அறிந்திருக்கிறார்; உங்கள் தேவைகள் அவருக்குத் தெரியும். நம்மைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார் என்பதை எந்த அளவுக்கு நாம் நம்புகிறோம்? இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த 40 வருடங்களும் கர்த்தர் அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து ஆதரித்தார். தேவன் அவர்கள் வாழ்க்கையைக் குறித்து எவ்வளவு அக்கறையாய் இருந்தார் என்பதை அது தெளிவாகக் காண்பிக்கிறது. ஆகவேதான் மோசே, "எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்" (சங்கீதம் 90:17) என்று ஜெபித்தான். ஆம், அன்பானவர்களே, உங்கள் கைகளின் கிரியைகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.

இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றி வரும் ரம்யா பிரசன்னா என்ற அன்பு சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் இளைய மகன் அபிலாஷுக்கு காய்ச்சல் வந்தது. 101 டிகிரி தீவிரமான காய்ச்சல். நாளுக்கு நாள் நிலைமை மோசமானது. அவன் வாந்தியெடுக்க ஆரம்பித்தான். வயிற்றில் அதிக வலி. எதையும் சாப்பிட முடியவில்லை. இரண்டு நாட்கள் சிறுநீரும் கழிக்க இயலவில்லை. நோய்த் தொற்று உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவ ஆரம்பித்தது. சிறுநீரகங்கள், நுரையீரல், இருதயத்தையும் கூட அது பாதித்தது. மிகுந்த மனவேதனையின் மத்தியில் சகோதரி ரம்யா, மகனை நான்கு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். ஒரு மருத்துவமனையில், "பையன் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மரித்துவிடுவான்," என்று மருத்துவர் கூறினார். அவர்கள் நான்காவது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, என் கணவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவனுக்காக ஜெபித்தார். "இந்தப் பையன் நீண்டகாலம் வாழ்வான்; தேவனுடைய தீர்க்கதரிசியாக விளங்குவான்," என்று அபிலாஷை குறித்து தீர்க்கதரிசனமும் கூறினார்.

பிறகு மருத்துவர்கள், அவனுடைய கைகளில் ஒன்றை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், ஜெபத்தின் வல்லமையால் ஆண்டவர் இடைப்பட்டார். மருத்துவர்கள், "இனி அறுவைசிகிச்சை தேவையில்லை," என்று கூறிவிட்டார்கள். என் கணவர் மூலமாக தேவன் பேசியதுபோலவே அபிலாஷ் பூரண சுகம் பெற்றான். இப்போது சகோதரி ரம்யா, "என் மகன் நல்ல சுகத்துடன் இருக்கிறான்," என்று சந்தோஷமாக சாட்சி கூறுகிறார்கள். அதே கையினால் அவர் இப்போது ஜெப கோபுரத்தில் எண்ணெய் ஊற்றி, மகிழ்ச்சியுடன் ஆண்டவருக்கு ஊழியம் செய்து வருகிறான். "ஒருநாள் ஆண்டவர் அவனை தீர்க்கதரிசியாக பயன்படுத்துவார் என்பது எனக்குத் தெரியும்," என்றும் அவர்கள் விசுவாசத்துடன் கூறுகிறார்கள். 12 வயது பையனான அபிலாஷ், இப்போது ஜெப கோபுரங்களுக்கு வருகிறவர்களுக்கு ஜெப எண்ணெயை கொடுக்கும் ஊழியத்தை தன்னார்வமாக செய்கிறான். அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள்பேரிலும் இப்படியே கரிசனையாய் இருக்கிறார். தேவனாகிய கர்த்தர், அபிலாஷை சுகப்படுத்தி ஆசீர்வதித்ததுபோல, நீங்கள் கையிட்டுச் செய்யும் வேலைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். இன்றைக்கு உங்கள் ஜெபங்கள் எல்லாவற்றும் அவர் பதிலளிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நான் கையிட்டுச் செய்கிற எல்லா காரியங்களையும் நீர் ஆசீர்வதிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் செல்லும் பாதையை, நான் சுமக்கும் பாரத்தை நீர் அறிந்திருக்கிறீர். என் தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர் என்று நான் நம்புவதற்கு உதவும். நான் செய்யும் காரியங்களை ஸ்திரப்படுத்தி, உம்முடைய கரத்தினால் அவற்றை வாய்க்கப்பண்ணும். என்னை கவனிப்பார் யாருமில்லை என்று நான் நினைக்கும்போது, நீர் எனக்கு சமீபமாயிருக்கிறீர் என்பதை நினைவுப்படுத்தும். என் இருதயத்தில் உள்ளவற்றை அறிந்து, நான் செல்லுவதற்கு முன்னரே என்னை வழிநடத்தும். இஸ்ரவேல் ஜனங்கள்மேல் உம்முடைய தயை இருந்ததுபோல் என்மீதும் தங்கட்டும். இன்றைக்கு நான் செய்ய இருக்கும் வேலைகளை செய்து முடிக்கும்படி என்னை பெலப்படுத்தும். என்னுடைய ஜெபங்கள் எல்லாவற்றுக்கும் நீர் பதில் அளிப்பீர் என்று விசுவாசித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.