அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்" (சங்கீதம் 4:7) என்று சொல்கிறது. ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை சந்தோஷத்தால் - இருதயத்தில் சந்தோஷத்தை தந்து, தானியத்தையும் திராட்சரசத்தையும் கொடுப்பதன் மூலம் சந்தோஷம் அளித்து, எல்லா ஆசீர்வாதங்களையும் அருளி, உலக பிரகாரமானவற்றை தருவதினால் கிடைக்கும் சந்தோஷத்தை விட மேலான சந்தோஷத்தால் நிரப்ப விரும்புகிறார்.

இந்த சந்தோஷம் பரிசுத்த ஆவியின் மூலமாக வருகிறது. ஆம், நீங்கள் உலகத்தின் ஆசீர்வாதங்களையும், கர்த்தராகிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வருவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். அதுவே, நீங்கள் பெறக்கூடிய பெரிதான ஆசீர்வாதமாகும். இன்றைக்கு இந்த ஆசீர்வாதம் இயேசுவின் நாமத்தினால் உங்கள்மேல் வருவதாக.

திரு. வில்சன் - திருமதி. மைதிலியின் தம்பதியரின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். 2004ம் ஆண்டிலிருந்து அவர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். அது சரியாக நடக்காமல் பொருளாதார இழப்பு நேரிட்டது. வியாபாரத்தை தொடர்வதற்கு திருமதி. மைதிலி, தன்னுடைய அரசாங்க வேலையிலிருந்து கடன் பெற்றார்கள். ஆனாலும் நஷ்டம் தொடர்ந்ததால், திரு. வில்சன் வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு, வேலை தேடினார். திருமதி. மைதிலி கடனை கட்ட இயலாததால் அரசாங்க வேலையை இழக்க நேரிட்டது. இதனால் அவர்களும் பிள்ளைகளும் சாப்பிட வழியில்லாமல் தவித்தார்கள்; கடன்காரர்களும் நெருக்க ஆரம்பித்தார்கள். நம்பிக்கையை எல்லாம் இழந்த நிலையில் சாவதே நல்லது என்று எண்ண தொடங்கினார்கள்.

இப்படி நெருக்கத்தின் வழியாக கடந்து சென்று கொண்டிருந்தபோது, இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்தார்கள். அதில் கடன் பிரச்னை மற்றும் பொருளாதார நெருக்கடியின் வழியாக கடந்து செல்கிறவர்களுக்காக நான் ஜெபித்தேன். வேதனையில் இருந்த அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு அது ஆறுதலாய் இருந்தது. ஜெபத்திற்கு பிறகு அவர்கள் பெரிய சமாதானத்தை உணர்ந்தார்கள்; இயேசு தங்களுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை பெற்றார்கள்.

அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்து, தங்கள் மகள்களை இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்தார்கள். அன்றைக்கே, ஒருவர் திரு.வில்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு கொடுக்கவேண்டிய பதினைந்தாயிரம் ரூபாய் தம்மிடம் இருப்பதாகவும், வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறினார். அதை தேவன் காட்டிய அடையாளமாக அவர்கள் கண்டு அதிக சந்தோஷப்பட்டார்கள். விரைவிலேயே அவருக்கு வேலை கிடைத்தது. திருமதி. மைதிலிக்கும் அரசாங்க வேலை திரும்ப கிடைத்தது. இன்றைக்கு அவர்களுடைய பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்கிறது. அவர்களுடைய மூத்த மகளுக்கு திருமணமாகி சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள்; இளைய மகளுக்குத் திருமணமாகி துபாய்க்கு சென்றுவிட்டார்கள். தேவன் அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை தந்ததோடு, பாடுகளின் மூலம் அவர்கள் இயேசுவை கண்டுகொண்டதால், இருதயங்களில் அதிக சந்தோஷத்தை கொடுத்துள்ளார். இயேசு உங்களுக்கும் உதவி செய்வார். அவருடைய தரித்திரத்தினால் நீங்களும் நானும் ஐசுவரியவான்களாகும்படி அவர் மிகுந்த தரித்திரரானார். இயேசு வறுமையின் வழியாக கடந்து சென்றார். ஆனால் இன்றைக்கு, அவர் ராஜாதி ராஜாவாக இருக்கிறார். வறுமையிலிருந்து, பொருளாதார இக்கட்டிலிருந்து உங்களை விடுவிக்க அவரால் முடியும். இயேசுவை நம்புங்கள்; அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

ஜெபம்:
பரம தகப்பனே, நீர் கொடுத்திருக்கும் அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய சமுகத்தில் மாத்திரமே பரிபூரண ஆனந்தம் உண்டு. நம்பிக்கையற்ற நிலையில் ஒத்தாசையை நாடி உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உம்மால் என்னை மீட்கவும், நான் இழந்தவற்றை திரும்ப தரவும் முடியும். என்னை ஜெயம்பெறச் செய்கிற, என் உள்ளத்தில் மிகுந்த சந்தோஷத்தை தரக்கூடிய வல்லமை கொண்ட உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பவேண்டுமென்று ஊக்கமாய் ஜெபிக்கிறேன். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் நம்பிக்கையும் பரிபூரண ஆனந்தமும் சமாதானமும் உண்டு என்று உம்முடைய வசனம் கூறுகிறது. என் வாழ்க்கையை, முயற்சிகளை, பொருளாதாரத்தை, உறவுகளை உம்முடைய அன்பின் கரங்களில் கொடுக்கிறேன். என் வாழ்வில் கோணலான பாதைகள் எல்லாவற்றையும் நீர் செவ்வையாக்கவும், என் வாழ்வில் எல்லா பகுதியையும் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்பவும் கூடிய வல்லமை உமக்கு உண்டு என்றும், நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கி, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி, நிரம்பி வழியக்கூடிய அளவு என்னை சந்தோஷத்தால் நிரப்புவீர் என்றும் நிச்சயமாய் நம்புகிறேன். என் வாழ்வில் நீர் நற்கிரியையை ஆரம்பித்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.