எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். ஆம், நம் தேவன் வல்லமையானவர். இன்று அவர், "நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (ரோமர் 8:37) என்ற வாக்குத்தத்தத்தை தருகிறார். நாம் இணைந்து, முந்தின வசனத்தையும் சேர்த்து வாசிப்போம்: "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (ரோமர் 8:36,37)

ஆம், அன்பானவர்களே, மிக அதிகமான உபத்திரவங்கள், இக்கட்டுகள் வழியாக நீங்கள் கடந்துசென்று கொண்டிருக்கலாம். ஒருவேளை, குழந்தை பாக்கியத்திற்காக நீங்கள் தவித்துக்கொண்டிருக்கலாம்; நம்பிக்கை இழந்திருக்கலாம்; ஒன்றன்மேல் ஒன்றாக பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கலாம். திடன்கொள்ளுங்கள்! தேவனுடைய வார்த்தை, "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" என்று கூறுகிறது. "கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்" (1 நாளாகமம் 29:11) என்று வேதம் விவரிக்கிறது. நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு வல்லமையுள்ளவர்! "ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்" (1 நாளாகமம் 29:12) என்றும் வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, ஆண்டவரால் நமக்கு எவ்வளவு ஆசீர்வாதமான வாழ்க்கையை தர இயலும், பாருங்கள்! இயேசு உங்களுடன் இருக்கும்போது, எல்லா ஆசீர்வாதங்களையும் உடையவர்களாக இருப்பீர்கள். பாதையின் கடைசி எல்லையை எட்டிவிட்டதைப் போல் நீங்கள் நம்பிக்கையை இழந்துபோயிருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கலாம். வேலை கிடைப்பதற்காக அதிகமாய் முயற்சித்துக்கொண்டிருக்கலாம்; நீண்டகாலமாக பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கலாம். ஆசீர்வாதங்கள் கிடைக்காது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்திருக்கலாம்; உங்கள் இருதயம் கவலையினால் பாரப்பட்டிருக்கலாம். ஆனாலும், அன்பானவர்களே, இன்று தேவனை பற்றிக்கொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன். அப்போது நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக விளங்குவீர்கள்.

நானும் பெரிய இழப்பை அனுபவித்திருக்கிறேன். முதலாவது குழந்தையையும், பின்னர் இரண்டாவது குழந்தையையும் இழந்தேன். இழப்பின் வேதனை எனக்குத் தெரியும். அந்த துயரம் தாங்க இயலாதது. ஆனால், தேவன் என்னை ஒருபோதும் கைவிடவில்லை. தேவன் தமக்கு ஏற்றவேளையில் என் பிள்ளைகள் மூலமாக பேரப்பிள்ளைகளை தந்து என்னை ஆசீர்வதித்தார்; சந்தோஷத்தை பரிபூரணமாக திரும்ப தந்தார். ஏஞ்சல் மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருந்தாள்; இன்றும் என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எனக்கு அளப்பரிய சந்தோஷமாக, ஆசீர்வாதமாக விளங்குகிறார்கள்.
ஆம், எனக்கு அன்பான தேவ பிள்ளையே, ஆண்டவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். அவர்  உங்களோடு இருப்பார்; உங்களை பெலப்படுத்துவார்; எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றியை கொடுப்பார். இப்போதே தேவனிடம் ஜெபித்து இந்த பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நம்பிக்கையும் நன்றியறிதலும் நிறைந்த இருதயத்துடன் உம்முன்னே வருகிறேன். ஆண்டவரே, எல்லா உபத்திரவங்கள், இக்கட்டின் மத்தியிலும் உம்முடைய அன்பின் மூலம் நான் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவனா(ளா)ய் இருக்கிறேன் என்பதை மறந்துபோகாமலிருக்க உதவும். நீரே என் பெலனும் என் அடைக்கலமும் ஆசீர்வாதத்தின் ஊற்றுமாய் இருக்கிறீர். நீர் எல்லாவற்றையும் என் நன்மைக்கேதுவாகவே செய்கிறீர் என்று அறிந்திருக்கிறீர். தகப்பனே, என் கவலைகள், போராட்டங்கள் மற்றும் பாரங்கள் உம்முடைய வல்லமையுள்ள கரங்களில் ஒப்படைக்கிறேன். உம்முடைய வல்லமையும் மகிமையும் என் வாழ்வில் விளங்கி, என்னை மகா உயரங்களுக்கு உயர்த்துவதாக. உம்முடைய சமாதானத்தையும், எனக்கு வேண்டியவற்றையும் எனக்கு அருளிச் செய்து, நான் செய்யும் எல்லா காரியங்களிலும் உம்முடைய தெய்வீக தயவு விளங்கும்படி செய்யும். நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர் என்பதை அறிந்து உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்கிறேன், ஆமென்.