அன்பானவர்களே, இன்றைக்கு, "அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்" (சங்கீதம் 23:2) என்ற வசனமே உங்களுக்கு தேவன் தரும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தமாயிருக்கிறது. இயேசு உங்களை நேசிக்கிறார். தம்முடைய சொந்த பிள்ளையாக இருக்கும்படி அவர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களை விசாரிக்கிறார். தம்முடைய ஆசீர்வாதமாகிய புல்லுள்ள இடங்களில் நீங்கள் எப்போதும் தங்கியிருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவர் உங்களுக்கு உலகப் பிரகாரமான எல்லா ஆசீர்வாதங்களையும் பரலோகத்தின் எல்லா ஆசீர்வாதங்களையும் தருவதற்கு விரும்புகிறார். அவரே சமாதானத்தைக் கட்டளையிடுவதால், நீங்கள் பாதுகாப்புடனும் சமாதானத்துடனும் இருக்கவேண்டும் என்று வாஞ்சிக்கிறார் (ஏசாயா 32:18). ஆகவே, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. கர்த்தரே உங்கள் மேய்ப்பராயிருக்கிறார். நீங்கள், "நான் புல்லுள்ள இடங்களை எப்படி கண்டுபிடிப்பது? குழப்பம் நிறைந்த இந்த உலகில் அமர்ந்த தண்ணீரை எப்படி கண்டுபிடிப்பது?" என்று கேட்கலாம். கரைபுரைடோண்டும் தண்ணீரை, பொறாமை நிறைந்த மக்களை, உங்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள முயற்சிக்கும் பொல்லாதவர்களையே நீங்கள் காணலாம். "நான் சமாதானத்தையும் பாதுகாப்பையும் எங்கே காண்பது? யாரை நான் நம்புவது?" என்று நீங்கள் திகைக்கலாம். ஆனால் ஆண்டவர், "நானே உன் தகப்பன். நான் ஒருபோதும் உன்னை விட்டு விலகமாட்டேன்; உன்னைக் கைவிடமாட்டேன். நீ என் பிள்ளை. நான் உன்னை அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்துவேன். பசுமையான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும்படி செய்வேன். நானே உனக்காக அவற்றை உருவாக்குவேன்," என்று கூறுகிறார்.

ஆம், "அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்" (யோபு 25:2) என்றும், "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி" (கொலோசெயர் 1:20) என்றும் வேதம் கூறுகிறது. ஆம், சிலுவையில் அவர் தம்முடைய இரத்தத்தை சிந்தினார். அந்த இரத்தத்தினால், நமக்கு சமாதானத்தை தந்தார். அந்த சமாதானம் தேவனிடத்தில் இருந்தது. இப்போது நம்மால் அவரை பிதாவே என்று அழைத்து, அவருடைய ஆசீர்வாதங்களை தைரியமாய் பெற்றுக்கொள்ள முடியும். அவருடைய இரத்தத்தின் மூலமாக மனுஷரோடும் நமக்கு சமாதானம் உண்டு. மற்றவர்கள் நமக்கு தீங்கு செய்ய முயற்சித்தாலும், ஆசீர்வாதங்களை உரைக்கும்படி நாம் பெலப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

தம்மைக் காட்டிக்கொடுத்த யூதாஸை பார்த்து இயேசு, "நீ என் சிநேகிதன்," என்றார். அவர் அவனை விரோதியாக பார்க்கவில்லை. யூதாஸ், தேவனுடைய திட்டத்தையே நிறைவேற்றுகிறான் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அவனிடம், "சிநேகிதனே, எங்கேயிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சமாதானத்திற்கு அத்தகைய வல்லமை உண்டு. பிசாசு தாக்குவதற்கு முயற்சித்தாலும், தேவன் உங்கள் எல்லைகளைச் சமாதானமுள்ளதாக்குவார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 147:14). இந்த தெய்வீக சமாதானம் எல்லா தீங்கிலிருந்தும் உங்களை பாதுகாக்கும். இயேசுவே உங்கள் மேய்ப்பர். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேய்ப்பர். நீங்கள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து அவரை பின்பற்றுவீர்களா? "ஆண்டவரே, நான் உம்முடைய சத்தத்தைக் கேட்டு, உம்முடைய சித்தத்தை செய்ய விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்வதற்குச் செவிகொடுக்க விரும்புகிறேன்," என்று ஜெபியுங்கள். அப்போது நீங்கள் புல்வெளியில் தங்கியிருப்பீர்கள்; அவருடைய பராமரிப்பில் செழிப்பீர்கள். ஆண்டவர் உங்களை அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்துவார்; சமாதானத்தினால் நிரப்புவார்.

ஓர் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். செல்வி எஸ்தர் என்ற சகோதரி, இயேசுவின்மேல் பக்தியுள்ளவர்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள். அவர்கள் இருவரையும் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தார்கள். இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் ஸ்தானாபதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள். இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் பங்காளராகும் முன்பு அவர்கள் வாழ்க்கையில் கடன், பிள்ளைகளின் படிப்பு தேவைகளை சந்திக்க முடியாத நிலை, குடும்ப பாரம் போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால், இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் அவர்கள் இயேசுவுக்கு தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தார்கள்.  அவர்கள் மூத்த மகள் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார்கள். அவர்கள், "சகோதரர் பால் தினகரன், அந்த ஹோட்டலில் தங்கினார்; அப்போது அவளுக்காக ஜெபித்தார்," என்று எழுதியுள்ளார்கள். ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் மகள் மேலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். அதை அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. அவர்களுடைய இளைய மகள் வணிக ஆசீர்வாத திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். பிறகு IT நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. இன்று, சகோதரி செல்வி எஸ்தர், தான் இயேசு அழைக்கிறார் மூலம் இயேசுவுக்கு ஸ்தானாபதியாக இருப்பதாக பெருமிதத்துடன் கூறுகிறார்கள். உண்மையாகவே, தேவன் அவர்களை புல்லுள்ள இடங்களில் தங்கி சமாதானத்தை அனுபவிக்கச் செய்திருக்கிறார். நிச்சயமாகவே அவர் உங்களுக்கும் அப்படி செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் மேய்ப்பராக இருந்து என்னை அதிகமாய் நேசிக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்குச் சொந்தமானவனா(ளா)ய் இருக்கும்படி நீர் என்னை தெரிந்தெடுத்திருக்கிறீர்; என் வாழ்வின் எல்லா பகுதியையும் நீரே பொறுப்பெடுத்திருக்கிறீர். உம்முடைய ஆசீர்வாதமான புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தும். என்னை சுற்றிலுமிருக்கும் குழப்பங்களை அமர்த்தி, அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னை நடத்தும். நீர் உம்முடைய இரத்தத்தால் கிரயம் பண்ணின உம்முடைய சமாதானம் என் இருதயத்தை ஆண்டுகொள்ளட்டும். எல்லா தீங்கான தாக்குதல்களிலுமிருந்தும் என் எல்லையை சமாதானமாக பாதுகாத்துக்கொள்ளும். உம்முடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, உம்முடைய சித்தத்திற்கு சந்தோஷமாக கீழ்ப்படிய எனக்கு உதவும். உம்முடைய சமுகத்தில் நான் செழிப்புற்று விளங்கச் செய்யவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.