அன்பானவர்களே, "நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" (யாத்திராகமம் 15:26) என்ற வாக்குத்தத்தத்தின்படியே கர்த்தர் உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பாராக.
இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் செங்கடலை எப்படி பிளந்து ஓர் அற்புதத்தை செய்தார் என்பதை நினைத்துப்பாருங்கள். அந்த ஜனங்கள் மகிழ்ச்சியானால் நிறைந்து, தேவனை துதித்துப் பாடினார்கள். மூன்றே நாளில் வனாந்தரத்தில் அவர்களுக்கு தண்ணீர் இல்லாதபோது அவர்கள் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் தண்ணீரைக் கண்டார்கள்; ஆனால், அதன் தண்ணீர் கசப்பாக இருந்தது. ஆகவே, அவர்கள் அந்த இடத்தை 'மாரா' என்று அழைத்தார்கள். மோசே தேவனை நோக்கி முறையிட்டபோது, அவர் ஒரு மரத்தை தண்ணீருக்குள் போடும்படி கூறினார். மோசே அதற்குக் கீழ்ப்படிந்தபோது, தண்ணீர் குடிக்கக்கூடியதாய், மதுரமாய் மாறியது. இந்த சம்பவத்தின் மூலம், தண்ணீரை மாற்றியதுபோல, ஜனங்கள் தம்மை நம்பினால் அவர்கள் சரீரங்களையும் தம்மால் குணப்படுத்த முடியும் என்று தேவன் போதித்தார். "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்," என்று அவர் கூறினார். ஆம், அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், அவரால் உங்களையும் சுகப்படுத்த முடியும்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக பல பிரிவுகள் (வார்டு) உண்டு. குணப்படுத்த முடியாத வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு பிரிவுகளும் உள்ளன. அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், நம்பிக்கை குறைந்துபோன நிலையிலேயே இருப்பார்கள். ஆனால், நம்முடைய பரிகாரியாகிய கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. சுகப்படுத்த முடியாத நோயும் தேவனுடைய வல்ல கரத்தினால் சுகமாகும். அன்பானவர்களே, நீங்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், "உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்" (யாத்திராகமம் 23:25) என்று வேதம் கூறுகிறபடி, இந்த உலகின் வியாதி எதுவும் உங்கள்மேல் வராது. நம் தேவன் எவ்வளவு அன்புள்ளவர்! இயேசுவாகிய அவர், நீங்கள் குணப்படும்படி சிலுவையில் தம்மைத்தாமே பலியாக்கினார். பரிகாரியாகிய அவரே உங்கள் கர்த்தராயிருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீரே என் பரிகாரி; என் நித்திய நம்பிக்கை என்று அறிந்து, நன்றியுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். உம்முடைய வார்த்தைக்கு நான் கீழ்ப்படிந்து நடப்பதால் எல்லா வியாதிக்கும் என்னை விலக்கி காப்பதாக வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய ஜனங்களுக்காக நீர் செங்கடலை பிளந்தீர்; கசப்பான தண்ணீரை மதுரமானதாக மாற்றினீர். என் வாழ்விலும் உம்முடைய அதே கிருபையும் சுகமளிக்கும் வல்லமையும் விளங்குவதாக. உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். நீர் வாக்குப்பண்ணியுள்ளபடியே என் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்தருளும்; என்னிலிருந்தும் எனக்கு அன்பானோரிடத்திலிருந்தும் வியாதியை விலக்கியருளும். நீர் சிலுவையில் செய்த தியாகத்திற்காக, நான் குணமாகும்படி என் வேதனையை எடுத்துக்கொண்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என் பரிகாரியாகவும், ஆறுதலாகவும், பெலனாகவும் இருக்கிறீர். உம்மையே நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.