அன்பானவர்களே, "நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்" (எசேக்கியேல் 36:10) என்று தேவன் கூறுகிறார். இன்றைக்கு இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. உங்கள் பட்சத்தில் இருக்கக்கூடியவர்களை பெருகப்பண்ணுவதற்கு தேவன் விரும்புகிறார். இப்படிப்பட்ட வாக்குத்தத்தம் யாருக்குக் கொடுக்கப்பட்டது? இஸ்ரவேல், மற்ற தேசங்களுக்குக் கீழ் இருந்தபோது, அவர்களால் ஒடுக்கப்பட்டபோது, பிடித்துக்கொள்ளப்பட்டபோது, அவமானப்படுத்தப்பட்டபோது இந்த வாக்குத்தத்தம்  கொடுக்கப்பட்டது. பிற தேசத்தார், "இஸ்ரவேலே, நீ யார்? நீ ஒன்றுமில்லை. நீ எப்படி பாழான இடத்தில் கிடக்கிறாய் பார்," என்று கூறி நிந்தித்தார்கள்.
நீங்களும் இன்றைக்கு இப்படிப்பட்ட நிலையில், மோசமாய் நடத்துகிறவர்களுக்கு இலக்காகி, எந்த அதிகாரமுமில்லாமல் உங்களையே தற்காத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கலாம். உங்களை தற்காக்கிறவர் கண்ணோக்கிக்கொண்டிருக்கிறார். இந்த அதிகாரத்தை நீங்கள் வாசித்தால், "இஸ்ரவேலாகிய என் ஜனங்களை பரியாசம் பண்ண அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?" என்று கேட்டு பழிவாங்க காத்திருந்ததை அறியலாம்.
அன்பானவர்களே, என் தாத்தாவும் பாட்டியும் தங்களுடைய ஒரே மகளாயிருந்த ஏஞ்சல் அவர்களை இழந்தபோது, பிள்ளையற்ற நிலையில் இருந்ததுபோல் உணர்ந்தார்கள். அன்பு மகளை இழக்கக்கொடுத்து ஆறுதலின்றி தவித்தார்கள்.
ஜனங்கள், என் தாத்தாவும் பாட்டியும் தேவ சித்தத்தின்படி நடக்காததால் தேவன் அவர்களை தண்டித்து விட்டதாகக் கூறி குறை சொன்னார்கள். கல்லூரி கட்டவேண்டும் என்ற எண்ணம் தவறானது; ஆகவேதான் தேவன் அவர்களை தண்டித்துவிட்டார் என்று கூறினார்கள். நிந்தையான இந்த சொற்கள் அவர்களுடைய இருதயங்களை குத்திக் கிழித்தன. அப்போதுதான் ஆண்டவர் தம்மை பின்பற்றுமாறு அவர்களுக்கு அறைகூவல் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை அளவில்லாமல் நிறைத்து பெலப்படுத்தினார். அந்தக் காலைப்பொழுதில் தங்களையுமறியாமல் அவர்கள் வாய்விட்டு சிரித்தனர். ஆவியானவர் அருளிய பெலத்தினால், அவர்கள், "ஆம் ஆண்டவரே, நாங்கள் உம்மை பின்பற்றுவோம்," என்று கூறினார்கள்.
இன்றைக்கு அதே இடத்தில் தேவன் அவர்கள்மேல் ஜனங்களை பெருகப்பண்ணியிருக்கிறார். ஆவிக்குரிய பிள்ளைகள் எண்ணற்றோர் அவர்களுக்கு இருக்கிறார்கள்; எண்ணற்றோர் அவர்களால் ஆண்டவரண்டை வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். அதே பாழ்நிலத்தில் தேவன் மறுபடியும் கட்டியெழுப்பியுள்ளார். ஊழியத்தை, பல்கலைக்கழகத்தை, பலருடைய மனங்களில் தம் ராஜ்யத்தை அவர் கட்டியெழுப்பியிருக்கிறார். உங்கள் பட்சமானவர்களை தேவன் பெருகப்பண்ணுவார். உங்கள் பட்டணங்களில் ஜனங்கள் குடியேறுவார்கள். பாழான இடங்கள் மறுபடி கட்டப்படும். இந்த வாக்குத்தத்தத்திற்காக தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னை பலுகிப் பெருகப்பண்ணி என் வாழ்க்கையை மறுபடியுமாய் கட்டியெழுப்புவதாக நீர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த வாக்குத்தத்தத்தை இன்றைக்கு பற்றிக்கொண்டு, என் வாழ்வில் நீர் ஆசீர்வாதத்தை பெருகப்பண்ணுவீர் என்று விசுவாசிக்கிறேன். இஸ்ரவேலர் ஒடுக்குதலையும் நிந்தையையும் அனுபவித்ததுபோல, நானும் சிலவேளைகளில் அதிகாரமில்லாதவனா(ளா)க, மற்றவர்களின் இஷ்டப்படி நடக்கவேண்டிய நிலையில் இருப்பதாக உணர்கிறேன். என்னை தற்காக்கிறவரான நீர், என்மேல் கண்ணோக்கமாயிருந்து, நான் இழந்தவற்றை திரும்ப தருவதற்கு ஆயத்தமாயிருக்கிறீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே, நீர் என்னை பெலப்படுத்தி, மேன்மையாக்கும். உத்தமமாய் உம்மை பின்பற்ற உதவும். என் வாழ்க்கையில் காணப்படும் பாழ்நிலங்களை திரும்ப கட்டியெழுப்பி, ஆசீர்வாதங்கள் என்மேல் பெருகும்படி செய்யும். உம்முடைய ஆவியினால் என் உள்ளத்தை நிரப்பும்; உம்முடைய ராஜ்யம் எனக்குள் வர்த்திக்கட்டும். நீர் உண்மையுள்ளவராயிருப்பதற்காகவும் அன்பு காட்டுவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை மறுபடி கட்டி, சீர்ப்படுத்துவதாக கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.