அன்பானவர்களே, இன்றைக்கு, "அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" (1 பேதுரு 2:24)என்ற வல்லமையான வாக்குத்தத்தத்தை தியானிக்கிறோம். இன்றைக்கு வியாதியால் வாடிக்கொண்டிருக்கிறீர்களா? "என் உடல் முழுவதும் ஒரே வேதனை. இனிமேல் என்னால் தாங்க இயலாது," என்று கூறுகிறீர்களா? ஓர் அற்புதம் நடப்பதற்காக பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறீர்களா? நோயின் காரணமாக வெளியே செல்லமுடியாமல் அடைபட்டுக் கிடக்கிறீர்களா? அன்பானவர்களே, "அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" என்ற சத்தியத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். இயேசுவின் நாமத்தில் சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் காயங்கள் எல்லாவற்றையும் தேவன் குணப்படுத்துவார்.

திருச்சியை சேர்ந்த அழகுமதி என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்கு 1996ம் ஆண்டு திருமணம் நடந்தது. 1997ம் ஆண்டு குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மருந்து ஒத்துக்கொள்ளாமல் கடுமையான அலர்ஜி உண்டானது. கைகள், கால்கள் முழுவதும் சிறுகட்டிகளும் தோலில் வெடிப்பும் தோன்றி, தாங்க இயலாத அரிப்பை கொடுத்தன. அவற்றிலிருந்து இரத்தமும் கசிந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இப்படி வந்து, ஆறு மாதங்கள் வேதனைப்படுத்தும். அந்த தோல் வியாதியிலிருந்து விடுபட முடியாமல் 20 ஆண்டுகள் அவதிப்பட்டார்கள். 2017ம் ஆண்டில் ஒருநாள், அந்த சகோதரி திருச்சியில் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அருகில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம் இருப்பதைக் கண்டார்கள். உள்ளே போனபோது, "உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்," என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்தார்கள். அதை வாசித்ததும் அவர்கள் இருதயத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்டானது. ஆண்டவர் தன்னை குணப்படுத்தி, சந்தோஷத்தை திரும்ப தருவார் என்று விசுவாசித்தார்கள். ஜெப கோபுரத்திலிருந்த ஜெப வீரர்கள் அவர்களுக்காக ஜெபித்ததோடு, சிறிது ஜெப எண்ணெயும் கொடுத்தார்கள். அந்த எண்ணெயை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு சென்று தினமும் உடலில் பூசி, ஜெபித்தார்கள். ஆச்சரியவிதமாக ஒருவார காலத்திற்குள் அவர்கள் உடலிலிருந்த கட்டிகள் அனைத்தும் மறைந்தன. 20 ஆண்டுகள் அவர்களை வாட்டி வதைத்துக்கொண்டிருந்த நோய், ஒரே வாரத்தில் பூரணமாக குணமாயிற்று. இந்த அற்புதத்தைக் கண்டு அவர்கள் இருதயம் நன்றியால் பொங்கியது; தேவனை துதித்தார்கள். நீங்களும், "15 ஆண்டுகளாக எனக்கு குழந்தையில்லை," "இந்த கேன்சர் இவ்வளவு காலம் என்னை வாட்டுகிறதே," என்று அங்கலாய்க்கிறீர்களா? ஒருவேளை தோல்வியாதி குணமாகாமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் ஈரல் அல்லது சிறுநீரம் செயல்படாமல் உள்ளனவா? மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வியாதியிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்குகிறீர்களா?

அன்பானவர்களே, "அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" என்ற வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்ளுங்கள். இன்றைக்கு உங்கள் சரீரத்திலும் மனதிலும் அவருடைய சுகமளிக்கும் வல்லமை பாய்வதாக. உங்களை இப்போதே தொட்டு சுகப்படுத்த தேவன் ஆயத்தமாயிருக்கிறார். எத்தனை ஆண்டுகள், எந்த பெலவீனத்தினால் நீங்கள் பாடுபட்டாலும், அவரால் கணப்பொழுதில் உங்களைக் குணமாக்க முடியும். இயேசுவின் ஆணி கடாவப்பட்ட கரம் உங்களைக் குணப்படுத்தும்படியாக ஜெபிப்பீர்களா? விசுவாசியுங்கள், இன்றைக்கு தேவனுடைய அற்புத வல்லமை உங்கள் வாழ்வில் செயல்படுவதை காண்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய தழும்புகளால் நான் சுகம்பெறுவேன் என்ற வாக்குத்தத்தத்தை விசுவாசித்து உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, உம்முடைய சுகமளிக்கும் வல்லமையை நம்பி, என்னுடைய வியாதிகள், வேதனைகள், பாடுகள் எல்லாவற்றையும் உம்முடைய பாதத்தில் வைக்கிறேன். என் உடலை, மனதை, ஆவியை தொட்டு, என்னை மறுபடியும் பூரணப்படுத்துவீராக. ஆணிகளால் கடாவப்பட்ட உம்முடைய கரங்கள் எல்லா உபத்திரவங்களையும் நீக்கி, இந்த பாரத்திலிருந்து என்னை விடுவிக்கட்டும். உம்முடைய அன்பில் நான் இளைப்பாறுதல் காண்பதால் என்னை பெலத்தினாலும் சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நிரப்பும். ஆண்டவரே, கணப்பொழுதில் என்னை உம்மால் குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறேன். இன்றைக்கு உம்முடைய அற்புதத்தை அனுபவிக்கும்படி என் இருதயத்தை திறக்கிறேன். நீர் என்னுடைய பரிகாரியாக, இரட்சகராக, ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாக இருப்பதினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய நன்மைக்காகவும் கிருபைக்காகவும் உம்மை துதித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.