அன்பானவர்களே, இந்த ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு அருமையான ஆண்டை தருவதற்காக தேவனை ஸ்தோத்திரிப்போம். தேவன் நம்மை தாங்கி வந்தார்; அவரே மகா உயரமான இடங்களுக்கு நம்மை தொடர்ந்து வழிநடத்துவார். இன்று "நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்" (சங்கீதம் 63:7)என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம்.

அன்பானவர்களே, இந்த வசனத்தை திடநம்பிக்கையுடன் அறிக்கை செய்யுங்கள். இந்த வசனம், ஆண்டவருடைய மகா பெரிய சந்தோஷத்தினால் உங்கள் இருதயத்தை நிரப்பும். ஒருவேளை நீங்கள் தேவைகளோடு இருப்பீர்களானாலும் இந்த வசனத்தை அறிக்கை செய்யுங்கள். திக்கற்ற நிலையில் இருப்பீர்களானால் பயப்படாதிருங்கள். "ஆண்டவரே, நீரே எனக்கு சகாயராக இருக்கிறீர்," என்று தைரியமாக அறிக்கை பண்ணுங்கள். "என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்" (சங்கீதம் 6:6)என்று சங்கீதக்காரன் கூறுகிறான். மிகுந்த வேதனையில் இருக்கும் அவன், தன் கவலையின் மத்தியிலும், கர்த்தர் தனக்குச் செய்த ஆச்சரியமான காரியங்களை நினைவுகூர்கிறான். "கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்" (சங்கீதம் 77:11,12)என்று அவன் கூறுகிறான். ஆம், அன்பானவர்களே, பயத்திற்குரிய, கவலைக்குரிய நேரங்களில் தேவனுடைய பிரசன்னத்தை, அவர் செய்த ஆச்சரியமான கிரியைகளை, அவருடைய மகிமையை நினைப்போம்.

ஒருமுறை, இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மிகப்பெரிய திட்டம் ஒன்றை குறித்து நான் மிகுந்த கவலையோடு இருந்தேன். அநேக திட்டங்களை ஒருங்கிணைக்கவேண்டியதிருந்தது. அதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. "நான் என்ன செய்யவேண்டும்? இவை அனைத்தையும் எப்படி என்னால் செய்து முடிக்கமுடியும்?" என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். பயம் என்னை பிடித்தது. நான், "ஆண்டவரே, நீரே எனக்கு உதவி செய்யவேண்டும்," என்று ஊக்கமாக ஜெபித்தேன். என் இருதயத்தை ஊற்றி ஜெபித்ததும், பரிசுத்த ஆவியானவர் திடீரென எனக்குள் செயல்பட ஆரம்பித்தார். "உன் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்களில் நான் உதவி செய்யவில்லையா? இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் முன்பு அநேக திட்டங்களை செய்தபோது நான் உடனிருக்கவில்லையா? ஊழியத்தின் எல்லா திட்டங்களையும் நானே வழிநடத்தினேன். உன் குடும்பத்துடன் இருந்தேன். உன்னை திரளாய் ஆசீர்வதித்தேன்," என்று மெல்லிய குரலில் எனக்கு நினைவுப்படுத்தினார். அது மறுரூபமாகுதலின் தருணமாக அமைந்தது. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லாவற்றையும் நான் நினைவுகூர்ந்தபோது, என் உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்தது. எல்லா அற்புதங்களுக்காகவும், எல்லா வெற்றிகளுக்காகவும், எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் அவரை ஸ்தோத்திரித்து துதிக்க தொடங்கினேன். அவருடைய உண்மையை நினைவுகூர்ந்து, அவரது பிரசன்னத்தில் என்னை மறந்து களிகூர்ந்தேன். அன்பானவர்களே, அந்தத் திட்டத்தை நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக தேவன் ஆசீர்வதித்தார்.

நீங்கள் எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தாலும், அவரது வல்ல கரத்தினால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. ஆண்டவர் உங்களுக்குச் செய்த பெரிய காரியங்களை நினைத்து, மகிழ்ச்சியோடு பாடுங்கள். "ஆண்டவரே, நீரே எனக்கு இதைச் செய்வீர்," என்று திடநம்பிக்கையோடு அறிக்கை செய்யுங்கள். அன்பானவர்களே, சிறிது நேரம் கர்த்தருக்குள் களிகூருங்கள். உங்கள் வாழ்க்கையில் வல்லமையான கிரியைகளைச் செய்ய அவர் உண்மையுள்ளவராயிருந்ததை எண்ணி உங்கள் உள்ளம் மகிழ்வதாக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த ஆண்டு முழுவதும் நீர் பாராட்டிய தயைக்காகவும் காட்டிய உண்மைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தேவையான நேரங்களில் நீரே எனக்கு சகாயராக இருக்கிறீர்; மாறாத உம் அன்பை எண்ணி களிகூருகிறேன். உம்முடைய செட்டைகளின் கீழ் ஆறுதலையும், சமாதானத்தையும், பெரிய சந்தோஷத்தையும் காண்கிறேன். கண்ணீர் நிறைந்த நாட்களிலும் உம்முடைய வல்ல கரம் என்னை தாங்கியது. என் வாழ்க்கையில் நீர் செய்த ஆச்சரியமான காரியங்களையும் அதிசயங்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். எல்லா இக்கட்டுகளின் வழியாகவும் நீரே என்னை நடத்தி, உம்முடைய வல்லமையையும் கிருபையையும் காண்பிக்கிறீர். ஆண்டவரே, நீர் எனக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாக இருப்பதால் உம்மை துதிக்கிறேன். எதிர்காலத்திலும் நீரே எனக்கு சகாயம் செய்வீர் என்று திடநம்பிக்கையுடன் அறிக்கையிடுகிறேன். என்னை மகா உயரங்களுக்கு நடத்திச் செல்ல நீர் உண்மையுள்ளவராயிருக்கிறீர் என்று அறிந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.