அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது" (சங்கீதம் 119:50) என்ற வசனத்தை நாம் இணைந்து தியானிப்போம். ஆம், தேவனுடைய வார்த்தை நமக்கு உண்மையாகவே ஜீவனையும் பெலனையும் அளிக்கிறது. "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத்தேயு 4:4) என்று இயேசு நினைவுப்படுத்துகிறார். அப்பம் உடலுக்குப் பெலன் தரலாம்; ஆனால் தேவனுடைய வார்த்தை நம் ஆத்துமாக்களை போஷிக்கிறது; நமக்கு ஜீவனையும், நோக்கத்தையும் அளிக்கிறது. "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்... இருக்கிறது." (எபிரெயர் 4:12) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவனுடைய வார்த்தையில் வல்லமையும் ஜீவனும் உண்டு. சத்தியமும், ஆறுதலும், பெலனும் நம்மைக் காக்கும்படி தேவனுடைய வாக்குத்தத்தங்களை மனப்பாடம் செய்வது முக்கியம். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்," "எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்," "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு," போன்ற வாக்குத்தத்தங்களை நாம் அறிக்கையும்போது, அந்த வார்த்தைகள் நமக்கு உத்வேகம் அளிப்பதோடு, ஜீவனையும், ஆறுதலையும், பெலனையும் கொடுக்கின்றன. நம் வாழ்க்கையின்மேல் நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரைக்கும்போது, ஜீவனும் வல்லமையுமான அந்த வார்த்தைகள் உண்மையாகின்றன.

தாவீது, மோசே, எரேமியா, ஏசாயா ஆகியோரின் வாழ்க்கையை நாம் பார்த்தால், தேவன் நம்மை ஏதாவது ஒரு காரியத்திற்காக அழைக்கும்போது, "நான் உனக்கு முன்னே போவேன். நான் உன்னை விடுவிப்பேன். நான் உன்னை மீட்டுக்கொள்வேன்," என்று வாக்குத்தத்தத்தைக் கொடுத்து நம்மை ஆயத்தமாக்குகிறார் என்பதை அறிகிறோம். இந்த வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கு தைரியம் கொடுத்தன; அழைப்புக்கான நோக்கத்தை அளித்தன; தேவனுடைய திட்டங்களை நிறைவேற்றி, வெற்றி பெறும்படி நடத்தின. உபத்திரவம், தடை, எதிர்ப்பு இவை உங்களை அழுத்துவதாக உணர்ந்தால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தின் பதித்துக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் அவருடைய வாக்குத்தத்தங்களை நினைவுக்குக் கொண்டு வந்து, எவ்வித இக்கட்டினையும் எதிர்கொள்ள உதவுவார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.

தேவன் உங்களுக்குத் தந்திருக்கும் வாக்குத்தத்தங்களை இன்று முதல் மனப்பாடம் செய்ய ஆரம்பியுங்கள். எந்த இக்கட்டிலும் அவருடைய வார்த்தை உங்களுக்கு ஆறுதல் தரட்டும்; மேற்கொள்வதற்கான பெலனை அளிக்கட்டும். உங்களை விடுவிக்கவும் மீட்டுக்கொள்ளவும் ஆயத்தமாய் தேவன் உங்களோடு இருக்கிறார். இப்போதே அவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்பீர்களா? இந்த வாக்குத்தத்தங்களை உங்கள் வாழ்க்கைக்கென சுதந்தரித்து, எல்லா போராட்டங்களையும் அவருடைய பெலன் எப்படி வெற்றியாய் மாற்றுகிறது என்பதை காணுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய உபத்திரவ நேரங்களில் உம்முடைய வாக்குத்தத்தங்கள் எனக்கு ஜீவனையும் ஆறுதலையும் அளிப்பதால் உம்மை ஸ்தோத்திரித்து, நன்றியுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். ஜீவனுள்ளதும் வல்லமையுள்ளதுமான உம்முடைய வார்த்தை, பூமிக்குரியவிதத்தையும் தாண்டி என்னை தாங்குகிறது. உம்முடைய வார்த்தைகளை நான்  காத்துக்கொள்ளவும், இறுகப் பற்றிக்கொள்ளவும், விசுவாசத்துடன் என் வாழ்க்கையின்மேல் அவற்றை உரைக்கவும் உதவி செய்யும். நீர் தாவீது, மோசே, எரேமியா, ஏசாயாவுடன் சென்றதுபோல, என்னுடனும் வந்து, உம்முடைய வாக்குத்தத்தங்களால் எனக்கு திடநம்பிக்கையையும் சமாதானத்தையும் அருளும். நீர் என்னை விடுவிப்பீர்; மீட்டுக்கொள்வீர்; மாறாத துணையாக இருப்பீர் என்று நம்புகிறேன். உம்மிடமிருந்து ஆறுதலை பெற்று, உம் வாக்குத்தத்தங்களை திடநம்பிக்கையோடு சுதந்தரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.