அன்பானவர்களே, இன்றைக்கு, "என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு" (சங்கீதம் 116:7)என்ற வசனத்தை நாம் தியானிப்போம். இந்த வசனம் கூறுகிறபடி, நம்முடைய அன்பின் ஆண்டவர், நம்முடைய சரீரங்களையும் ஆத்துமாக்களையும் எப்போதும் காத்துக்கொள்வார். ஆகவேதான் சங்கீதக்காரன், "என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்" (வசனம் 8)என்று கூறுகிறான். ஆம், அன்பானவர்களே, நாம் ஆண்டவருக்குள் இளைப்பாறவேண்டும். அவர் எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்வார். நாம் களைப்படைந்து விடாய்த்துப் போகும்போது, தேவன், "உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு," என்று கூறுவதைக் கேட்பது பெரிய ஆறுதலாக இருக்கும். நம் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பது தேவனுடைய வேலை மட்டுமல்ல; அதை இளைப்பாறுதலாகவும் புத்துணர்வுடனும் காத்துக்கொள்வது நம்முடைய கடமையுமாகும்.


மார்த்தாளை பாருங்கள். இயேசுவையும் அவரது சீஷர்களையும் உபசரிப்பதில் அவள் கவனமாயிருந்தாள். அதினால் கலக்கமடைந்து, தன்னுடைய சகோதரியைக் குறித்து இயேசுவிடம் குறை கூறினாள். இயேசு அவளிடம், "மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய்," என்று கூறினார். சிலவேளைகளில் நாமும் இவ்வாறே செய்கிறோம். வாழ்வில் ஏதாவது தவறாக நடக்கும்போது, நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் குறித்து நாம் கலக்கமடைந்து, நம்முடைய கோபத்தை, நம் குடும்பத்தில், நமக்கு அன்பானோரிடம் காட்டுகிறோம். பின்னர் பல நாள்கள் அவர்களுடன் பேச முடியாமல் போகிறது. அது நம்முடைய சமாதானத்தை கெடுப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய குடும்பத்தினரின் சமாதானத்தையும் கெடுக்கிறது. நாம் ஒன்றைக் குறித்தும் கவலைப்படக்கூடாது. நீங்கள் எந்த காரியத்தைக் குறித்தும் ஒருபோதும் கலக்கமடையக் கூடாது. கர்த்தரே, நம் சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதுகாத்து, இளைப்பாறச் செய்கிறவர். இயேசு, மார்த்தாளிடம், "தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்," என்று கூறினார். நல்ல பங்கு எது? இயேசுவே நல்ல பங்காவார். நமக்குள் இயேசு வாசம்பண்ணி, நாம் அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை தருவார்.

உலகம், "உன்னையே நம்பு," என்கிறது. நம்மேல் நம்பிக்கை வைப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. நம்மையே நம்மால் நம்ப இயலாது. நம் சரீரம் குறைகள் கொண்டது. நம் மனம் அடிக்கடி எதிர்மறையாய் யோசிக்கக்கூடியது. அதில் நம்புவதற்கு என்ன இருக்கிறது? இயேசு மாத்திரமே நாம் நம்பக்கூடியவராவார். இந்த உலகில் நாம் பிழைத்திருக்கும்படி அவர் தம்முடைய ஜீவனை பலியாகக் கொடுத்தார். நாம் இயேசுவை முழுவதுமாக நம்பலாம்; விசுவாசிக்கலாம். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)என்று இயேசு கூறுகிறார். நாம் இளைப்பாறும்படி, தம்மேல் நம்முடைய பாரங்களை வைக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். பவுலும், "... எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும்... போதிக்கப்பட்டேன்" (பிலிப்பியர் 4:12)என்று குறிப்பிடுகிறான். எல்லாவற்றின்மேலும் தேவன் ஆளுகை செய்கிறார் என்று அறிந்து நாம் திருப்தியாயிருக்கவேண்டும். "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" (சங்கீதம் 46:10)என்று தேவன் கூறுகிறார். ஆகவே, அன்பானவர்களே, உங்கள் இளைப்பாறுதலுக்கு திரும்புங்கள். மனங்கலங்காதிருங்கள். இயேசுவை மாத்திரம் சார்ந்திருங்கள். அவர் உங்களுக்கு பூரண சமாதானத்தை தருவார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, ஆண்டவராகிய இயேசுவின் மூலம் நீர் அருளும் இளைப்பாறுதலுக்காகவும் பூரண சமாதானத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போதும், என்னுடைய கவலைகளையும் பாரங்களையும் உம்முடைய பாதத்தில் வைப்பதற்காக உம்மிடம் வருகிறேன். நீரே என் இரட்சகர். நான் பிழைக்கும்படி நீர் உம்முடைய ஜீவனை எனக்காக பலியாகக் கொடுத்தீர். நீர் ஒருவரே நான் நம்பத்தக்கவராயிருக்கிறீர். என்னுடைய கலக்கத்திலிருந்தும், எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் என்னை விடுவிக்க உம்மால் மாத்திரமே கூடும். உம்முடைய அன்பின் பிரசன்னத்தில் சமாதானத்தையும் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலையும் காணும்படி உம்மிடம் திரும்புகிறேன். என்னுடைய சரீரப்பிரகாரமான தேவைகளிலிருந்து ஆவிக்குரிய போஜனம் வரைக்கும் எல்லாவற்றையும் நீர் பொறுப்பெடுத்துக்கொண்டு, என்னை சுகமாய் தங்கப்பண்ணுவீர் என்று அறிந்திருக்கிறேன். வல்லமையும், ராஜ்யமும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே என்று கூறி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.