அருமையானவர்களே, தேவன் உங்களை விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் எப்போதும் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானத்தை தருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். அவர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் தமது கிருபையைப் பெருகப்பண்ணுவார். "கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்" (சங்கீதம் 121:8). தேவன் உங்களை காக்கிறவராயும், உங்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறவராயும் இருக்கிறார். உங்கள் ஆத்துமாவும் உங்கள் ஜீவனும் இயேசுவுக்கு அருமையானவை. ஒரு நோக்கத்திற்கென அவர் உங்களை இந்த உலகில் வைத்திருக்கிறார். "நான் இன்னும் ஏன் வாழவேண்டும்?" என்று ஒருபோதும் சொல்லாதிருங்கள். நீங்கள் இந்த உலகில் வாழ்வது இயேசுவுக்கு அவசியமாயிருக்கிறது. பாரமும் கரடுமுரடுமான பாதையில் செல்லும்போது உங்களுக்கு ஒத்தாசை அனுப்பக்கூடிய கர்த்தரை நோக்கி உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் (சங்கீதம் 121:1). உங்களுக்கு சகாயம் ஆண்டவரிடத்திலிருந்து வரும்.
இயேசு அழைக்கிறார் பங்காளரான திரு. ஜப்லோன் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறார். ஒருமுறை இரவில் அவர் தனியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது, தூக்கமயக்கமாக உணர்ந்தார். பாதை எங்கும் இருளாக இருந்தது. அப்போது, அவரது மனைவி அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, "நீங்கள் விபத்தில் சிக்கிகொள்வதுபோல கனவு கண்டேன். ஆகவே, எங்கே வந்துகொண்டிருக்கிறீர்களோ அங்கேயே காரை நிறுத்திக்கொள்ளுங்கள்," என்று கூறினார்கள். எங்கே இருக்கிறோம்; சுற்றிலும் என்ன இருக்கிறது என்பதை அறியாமலே அவர் வண்டியை நிறுத்தினார். காரிலேயே உறங்கிவிட்டார். அவர் காலையில் விழித்தபோது காருக்கு முன் ஆழமான பள்ளம் இருப்பதைக் கண்டார். இன்னும் சிறிது தூரம் அவர் காரை ஓட்டியிருந்தால், அதற்குள் விழுந்திருப்பார்; உயிரையும் இழக்க நேர்ந்திருக்கலாம். தேவன் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குச் சொப்பனத்தைக் கொடுத்து அவர்கள் மூலமாக இவருடன் பேசினார். கணவருக்கும் மனைவிக்கும் எவ்வளவு நல்ல தொடர்பு இருந்திருக்கிறது! தேவன் குடும்பத்தை கண்ணோக்கினார்; அவர் உங்களையும் கண்ணோக்குவார். ஆகவே, நீங்கள் ஒருபோதும் இடறிவிழமாட்டீர்கள். தேவனுக்கு நீங்கள் அருமையானவர்கள். கழுகுகளைப்போல அவர் தமது செட்டைகளில் உங்களை தாங்கி உயர்த்துவார்; எல்லா சூழ்நிலைகளுக்கும் மேலாக நீங்கள் பறந்திடுவீர்கள்; காப்பாற்றப்படுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எப்போதும் என்னை விசாரிக்கிறவராக, என்மேல் கண்ணோக்கமாயிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய முகத்தை என்மேல் பிரசன்னமாக்கி, உமது சமாதானத்தை எனக்கு அருளிச்செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம்முடைய முகத்தை என்மேல் பிரகாசிக்கப்பண்ணி, என் வாழ்க்கையில் உம்முடைய கிருபையை பெருகப்பண்ணுவீராக. இப்போதும் எப்போதும் என்னுடைய போக்கையும் வரத்தையும் கவனித்துக்கொள்ளும். என் ஆத்துமாவும் ஜீவனும் உமக்கு அருமையானவை என்பதையும், ஒரு நோக்கத்திற்காகவே நீர் என்னை உலகில் வைத்திருக்கிறீர் என்பதையும் நான் மறந்துபோகாதிருக்க உதவும். அதிக பாரத்தை சுமப்பதாகவோ, தோற்றுப்போனதாகவோ நான் உணரும்வேளையில், எனக்கு ஒத்தாசை அளிப்பவராகிய உம்மை ஏறெடுத்துப் பார்க்க எனக்கு நினைவுப்படுத்தியருளும். நான் அறியாதவேளையிலும் என்னை நீர் பாதுகாத்து, வழிநடத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். என் விசுவாசத்தை பெலப்படுத்தி, நான் இடறிவிடாமல் காத்தருளும். சூழ்நிலைகளுக்கு மேலாக நான் எழும்பும்படி கழுகுகளைப்போல என்னை செட்டைகளின்மேல் தாங்கி உயர்த்தவேண்டுமென்று உம்முடைய பரிசுத்த நாமத்தில் வேண்டுகிறேன், ஆமென்.