அன்பானவர்களே, "அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்" (சங்கீதம் 91:4) என்று வேதம் வாக்குப்பண்ணுகிறது. இது தேவன் உங்களுக்குக் கொடுக்கும் மாறாத வாக்குத்தத்தமாகும். ஆம், உங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும்படியாய் அவர் தம் செட்டைகளை விரிக்கிறார். கழுகு, செட்டைகளை விரித்து, குஞ்சுகளை சுமந்துசெல்வதுபோல, கர்த்தரும் உங்கள் பிள்ளைகளை சுமக்கிறார்; அவர்களை தூக்கியெடுத்து உயர்ந்த ஸ்தானங்களில் அமர்த்துகிறார். "பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி..." (ஏசாயா 58:14) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளபடி, உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்துவதற்கு கர்த்தர் விருப்பமாயிருக்கிறார். தம்மை கிட்டிச்சேரும்படி தேவன் உயர்ந்த இடத்துக்கு உங்களை அழைக்கிறார். "உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" என்றும் வேதம் கூறுகிறது. உங்கள் வாழ்க்கையைக் குறித்த, குடும்பத்தைக் குறித்த, உலகத்தைக் குறித்த தம்முடைய திட்டங்களை, தமது இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்த தேவன் வாஞ்சிக்கிறார். இந்தத் திட்டங்கள் நிறைவேறுவதற்காக நீங்கள் ஜெபிக்கும்போது, அவர் உயர்வான நோக்கங்களுக்கு, ஆசீர்வாதமான நிலைக்கு உங்களை உயர்த்துவார்.
"நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும்..." (பிலிப்பியர் 3:10) என்று பவுல் ஜெபிக்கிறதுபோல, நாம் அநேகர், தீர்க்கதரிசனங்களையும் தரிசனங்களையும் சொப்பனங்களையும் நாடி, "ஆண்டவரே, நான் உம்முடைய சத்தத்தைக் கேட்க விரும்புகிறேன்; உம்முடைய வழிகளையும் திட்டங்களையும் எனக்குக் காண்பிப்பீராக," என்று கூப்பிடுகிறோம். அவ்விதமாகவே, "உம்முடைய சித்தம் நிறைவேறுவதற்காக நான் ஜெபிக்கும்படி உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்," என்று சங்கீதக்காரன் முறையிடுகிறான். "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்" (அப்போஸ்தலர் 2:17) என்று வாக்குப்பண்ணப்பட்டுள்ளபடி, உங்கள் கண்களை திறக்க விரும்பி, தேவன், பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்புகிறார். இந்த தெய்வீக அழைப்புக்கேற்றவண்ணம் நீங்கள் செயல்படும்போது, தேவன் உங்களை உயர்ந்த இடங்களுக்கு உயர்த்துவார்; அவருடைய செட்டைகளின் கீழ் நீங்கள் அடைக்கலம் புக முடியும்.
தேவனுடைய அற்புத வல்லமையைக் குறித்து ஓர் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோயம்புத்தூரை சேர்ந்த சகோதரர் பிரவீன். அவர் மனைவி பெயர் நான்சி. இருவருமே காருண்யா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். அவர்கள் மகன் யுவன் சாமுவேலுக்கு ஐந்து வயதாகிறது. யுவன் வியாதிப்பட்டான். காய்ச்சல் வந்தது. கணுக்கால் பகுதி வீங்கியது. பையனால் நடக்க இயலவில்லை. ஆகவே, அவர்கள் பல மருத்துவர்களைப் பார்த்தார்கள். என்ன வியாதி என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருநாள் சென்னையில் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வழியில் தாம்பரத்தில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை பார்த்து அங்கே சென்றார்கள். அவர்கள் மகனுக்காக ஜெபித்த ஜெப வீரர், தீர்க்கதரிசனம் உரைத்து, "நீங்கள் குடும்ப ஜெபம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்," என்று கூறினார். அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்து குடும்பமாக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் பெரிய மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைக்காக சென்றபோது, அவர், "நூறுபேரில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய பாதிப்பு இது. இதற்கு சிகிச்சை இல்லை," என்று கூறினார்.
ஆனாலும், ஜெப கோபுரத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார்; அவர்கள் குடும்பமாக தங்களை ஆண்டவருக்கு அர்ப்பணித்தபோது, அவர்கள் மகன் பூரண சுகம் பெற்றான். முன்பு நடக்க முடியாமல் இருந்த அவன், தற்போது நடனமாடுகிறான்; பாடுகிறான்; முழு சுகத்தோடு விளையாடுகிறான். தேவனுடைய கிருபையால் நூறு சதவீத சுகத்தை பெற்றிருக்கிறான். அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு இசைந்திருக்கும்போது, உங்கள் குடும்பத்திற்காக ஜெபிக்கும்போது, அவர் தமது சிறகுகளால் உங்களை மூடி பாதுகாப்பார். தொடர்ந்து குடும்பமாய் ஆண்டவரை சேவிக்கும்போது, அவர் உங்களை காப்பார்; உயர் ஸ்தலங்களுக்கு உயர்த்துவார்; பூரணமாய் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய சிறகுகளினால் என்னை மூடி, அடைக்கலம் அளிப்பதாக தந்திருக்கும் மாறாத வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். கழுகு தன் குஞ்சுகளை சுமந்துசெல்வதுபோல, நீர் எனக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற உயரமான ஸ்தலங்களுக்கு என்னை தூக்கிச் செல்வீராக. நான் உம்முடைய நினைவுகளின்படி நடந்து, உம்முடைய சித்தத்தின்படி ஜெபிக்கும்படி உம்முடைய இரகசியங்களை எனக்கு வெளிப்படுத்துவீராக. நான் தரிசனங்களையும் சொப்பனங்களையும் காணும்படியும், உம்முடைய சித்தம் நிறைவேறுவதற்காக ஜெபிக்கும்படியும் என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புவீராக. உம்முடைய செட்டைகளின் கீழ் என்னை பாதுகாத்து, உம்மோடு உலாவும்படி உன்னதமான இடங்களுக்கு உயர்த்துவீராக. உம்முடைய வழிகளைப் பார்த்து, உம்முடைய ஆசீர்வாதங்களையும் கிருபையையும் பெற்றுக்கொள்ளும்வண்ணம் நடக்கும்படி என் கண்களை திறந்தருளும். ஆண்டவரே, நான் உம்முடைய சித்தத்திற்கு இசைந்து நடப்பதால், உமக்குள்ளான சந்தோஷம், சமாதானம், வெற்றியை பெறும்படி என்னை உயர்த்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.