அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2) என்ற வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். யோபு, தேவனை முழு மனதுடன் நேசித்தான்; நம்பினான். அவன் அசையாத விசுவாசம் கொண்டவனாயிருந்தாலும், பிள்ளைகள், ஆரோக்கியம், ஆஸ்திகள் எல்லாவற்றையும் இழந்துபோனான். ஒன்றுமில்லாத நிலையில் விடப்பட்டான். கடும் பாடுகளின் மத்தியிலும் அவன் தேவனை நோக்கி, "கர்த்தாவே, நீரே என் நம்பிக்கை; நீர் மாத்திரமே என் நம்பிக்கை," என்று கூப்பிட்டான். அவன் அவரை முற்றிலுமாய் நம்பி, அவருடைய வழிகளில் உத்தமமாய் நடந்தான் (நீதிமொழிகள் 28:25). "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்" (யோபு 13:15) என்றும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10) என்றும் அவன் தைரியமாய் கூறினான், அல்லேலூயா!
அன்பானவர்களே, நீங்கள் ஆண்டவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்? எப்போதும் அவரை நம்புகிறீர்களா? எல்லாவற்றையும் இழக்கக்கொடுத்த பின்னரும், உங்கள் கண்களை அவர்மேல் வைத்திருக்கிறீர்களா? யோபு அப்படியே செய்தான். நண்பர்கள் கேலி செய்தபோதும், குடும்பம் கைவிட்டபோதும், அவனை தைரியப்படுத்த யாருமில்லாதபோதும் அவன் தேவனை இறுகப் பற்றிக்கொண்டான். அவன், அசையாத விசுவாசமுள்ளவனாய், "அவர் என் தேவன். அவர் என்னை கைவிடமாட்டார். அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், நான் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்," என்று கூறினான். யோபுவின் திடவிசுவாசத்தைக் கண்ட தேவன், அவன்மேல் பிரியங்கொண்டார். எல்லா எதிர்ப்புகளுக்கும், உபத்திரவங்களுக்கும் மேலாக அவர் அவனை தூக்கியெடுத்து, பூரணமாய் ஆசீர்வதித்தார்.
அன்பானவர்களே, அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அவர் அன்புள்ளவர். உங்களுக்கு ஏதாவது நன்மையை செய்ய அவர் விரும்புகிறார். "எல்லாவற்றையும் இழந்துபோனேனே?" என்று நினைக்கிறீர்களா? "எனக்கு நம்பிக்கையே இல்லை. யாருக்கும் என்மீது அன்பு இல்லை. என்னை விசாரிப்பார் யாருமில்லை," என்று கூறுகிறீர்களா? திடன் கொள்ளுங்கள். அவர் அன்பின் தேவனாயிருக்கிறார். அவரை நோக்கிப் பாருங்கள்; அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்; அவருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்மேல் நம்பிக்கையாயிருக்கும்போது, பூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நம்பிக்கையுள்ள இருதயத்துடன், உம்மால் யாவற்றையும் செய்யக்கூடும் என்பதை அறிந்தவனா(ளா)ய் உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, இழப்பின் நேரத்திலும், பயத்தின் நேரத்திலும் என் கண்களை உம்மேல் மாத்திரமே வைத்திருக்க உதவும். என்ன நடந்தாலும் உம்மையே பற்றிக்கொள்ளும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். உம்முடைய கிருபையின்மேல் நான் வைத்திருக்கும் திடநம்பிக்கையை எந்த சந்தேகமோ, பயமோ, அதைரியமோ அசைக்காதிருக்க உதவி செய்யும். உம்முடைய சமுகம் என்னை சூழ்ந்துகொள்ளட்டும்; வாழ்வில் புயல் வீசும் நேரங்களில் நீரே எனக்கு அடைக்கலமாக இரும். உபத்திரவங்களிலிருந்து என்னை தூக்கியெடுத்து, உம்முடைய தெய்வீக சித்தத்தின்படி ஆசீர்வதித்தருளும். எனக்கு குறிக்கப்பட்டது உம் கையில் இருக்கிறது என்பதை என்னை அறிந்து கொள்ளச் செய்து, என் இருதயம் உம்முடைய சமாதானத்தினால் நிரப்பும். நான் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும், உம்முடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்ளவும் உதவும். உம்முடைய பரிபூரண திட்டத்தை நான் நம்புகிறபடியினால் உம்முடைய மகிமையை என் வாழ்வில் விளங்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.