அன்பானவர்களே, இன்றைக்கு மகிழ்ச்சியோடு உங்களை வாழ்த்துகிறேன். தேவனுடைய சமுகம் நம்மோடு இருக்கும்போது பரிபூரண சந்தோஷம் உண்டாயிருக்கும்; அந்த சந்தோஷத்தை இந்த உலகத்தால் எடுத்துப்போட முடியாது. நெடுங்காலத்திற்கு முன்பு என்னுடைய பாட்டி, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றபோது இதே சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய ஊழியத்தின் மூலம் அநேகர் ஆசீர்வாதம் பெற்று வருகிறீர்கள். நீங்களும் தேவனுடைய அபிஷேகத்தின் கிருபையை பெற்றுக்கொள்ளவேண்டுமென்று ஜெபிக்கிறேன். "இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்" (சங்கீதம் 32:7) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். ஆம், இன்றைக்கு இரட்சணியப் பாடல்களை நீங்கள் பாடுவீர்கள்.

மிகுந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும், நீங்கள் கவலைப்படும்போதும், எப்பக்கமும் நெருக்கப்படும்போதும், "நான் வாழவே முடியாது," என்று சொல்லுகிற நிலையில், தேவனுடைய இரட்சணியப் பாடல்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். "நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காக்கிறீர்," என்று இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைப் பின்பற்றியதற்காகவே அவருடைய சீஷர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பயந்துபோனார்களா? அங்கே அவர்கள் என்ன செய்தார்கள்? கலங்கிப்போய் அழுதார்களா? இல்லை. அவர்கள் பாடி, தேவனை துதித்தார்கள். அவர்கள் ஆண்டவரை தங்கள் அடைக்கலமாக, மறைவிடமாக கண்டுகொண்டார்கள். அவர்கள் கண்கள் ஆண்டவரையே நோக்கிக்கொண்டிருந்தன. ஆகவே, அங்கே ஓர் அற்புதம் நடந்தது. பூமி அதிர்ந்தது; சிறைச்சாலைகளின் கதவுகள் திறவுண்டன; அவர்கள் தப்புவிக்கப்படுவதற்கான வழி உண்டானது.  

தானியேலைப் பாருங்கள். அவன் கர்த்தரை நேசித்த காரணத்தினால் சிங்கங்களின் கெபிக்குள் போடப்பட்டான்; கெர்ச்சிக்கிற சிங்கங்களால் சூழப்பட்டான். ஆனால் நடந்தது என்ன? கர்த்தர் அவனை காப்பாற்றினார். தேவன், சிங்கங்களின் வாய்களைக் கட்டி, அவனை விடுவித்தார்.

இன்றைக்கு, உங்களைப் பார்த்து சிங்கங்கள் கெர்ச்சித்துக்கொண்டிருக்கலாம். மக்கள் உங்களுக்கு எதிராக கெர்ச்சிக்கலாம். ஒருவேளை, உங்களுக்கோ, உங்களுக்கு அன்பானவர்களுக்கோ அநியாயம் நடந்திருக்கலாம்; சிறைக்குள் சிக்கிக்கொண்டதுபோல நீங்கள் உணரலாம். இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் யாராவது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கலாம். ஆனால், உங்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது! ஆண்டவரை நீங்கள் மறைவிடமாக கொண்டிருக்கிறபடியால், இரட்சணியப் பாடல்கள் உங்களை சூழ்ந்துகொள்ளும். இன்றைக்கு ஆண்டவரிடமிருந்து இந்த விடுதலையைப் பெற்றுக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, அடைக்கலம் தேடி உம்முடைய சமுகத்திற்கு வருகிறேன். நீரே எனக்கு மறைவிடமாகவும், பலத்த துருகமாகவும், என்னை விடுவிக்கிறவருமாயுமிருக்கிறீர். நான் சிக்கிக்கொண்டதாக எண்ணும்போது, உபத்திரவங்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போது, நீர் எனக்கு மறைவிடமாயிருப்பதை நினைவுப்படுத்தும் (சங்கீதம் 32:7). நீர், தானியேலை சிங்கங்களிடமிருந்து பாதுகாத்ததுபோலவும், உம்முடைய சீஷர்களை சிறைச்சாலையிலிருந்து விடுவித்ததுபோலவும் உபத்திரவங்களிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். புயலின் நடுவிலும் நான் உம்மை துதித்துக்கொண்டிருக்கும்படி, இரட்சணியப் பாடல்கள் என் உள்ளத்தை நிரப்புவதாக. ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன். நான் உமக்குக் காத்திருப்பதால் அற்புதங்கள் நடப்பதாக. இப்போதும் எப்போதும் எனக்கு அடைக்கலமாகவும் பெலனாகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.