எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான, விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்" (யாத்திராகமம் 20:24) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ள பெரிய இரகசியத்தை இன்றைக்கு தியானிப்போம்.
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, தேவனுடைய மகத்துவமான நாமங்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவரே தேவனாகிய கர்த்தர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நீங்கள் தேவனிடம் ஜெபிக்கும்போது, கர்த்தருடைய இந்த மகிமையான நாமங்களை கூறி ஜெபியுங்கள். அப்போது நீங்கள் எந்த ஜெபத்தை ஏறெடுத்தாலும் அதற்கு பதில் கிடைக்கும்.
கர்த்தருடைய ஊழியத்தை செய்யும்படியும், இஸ்ரவேலர்களை எகிப்து ராஜாவிடத்திலிருந்து விடுவிக்கும்படியும் மோசே அவரால் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தான். அந்த ராஜா இஸ்ரவேலருக்கு பெருத்த உபத்திரவத்தை கொடுத்தான். "என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும்" (யாத்திராகமம் 9:16) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ள வசனம், தேவன் தம் ஜனங்களை அவர்களுடைய உபத்திரவங்களிலிருந்து, தம்முடைய நாமத்தை பயன்படுத்தி விடுவிப்பதற்கு மோசேயை தம் கருவியாக பயன்படுத்தினார் என்பதை குறிக்கிறது. "என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும்" என்று தேவன் பார்வோனிடம் கூறினார்.
அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய தேவனாகிய கர்த்தரின், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான நாமங்களை எவ்வளவாய் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? தேவனுடைய பிள்ளைகள் அவரை கர்த்தர் என்று அறிந்திருக்கிறார்கள் (எரேமியா 48:15; யாத்திராகமம் 6:3). ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதம் தேவைப்படும்போது அல்லது நீங்கள் உபத்திரவங்களின் வழியாய் கடந்துசெல்லும்போது, "ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும்," என்று அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய உபத்திரவத்தை எதிர்கொண்டார்கள். மோசேயும் அவன் ஜனங்களும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு முறையிட்டார்கள். அந்த அதிகாரமுள்ள நாமத்தினால் அவர்கள் வல்லமையான வழியில் விடுவிக்கப்பட்டார்கள். எனக்கு அன்பான தேவ பிள்ளையே, அவ்விதமே நீங்களும் ஆண்டவருடைய மகத்துவமான நாமத்தை சொல்லி கூப்பிடுங்கள்; அற்புதங்களை காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வல்லமையான நாமங்களை பயன்படுத்தி அதிகாரத்துடன் ஜெபிப்பதற்கு எனக்கு கற்றுக்கொடுக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நான் அவநம்பிக்கை அடைந்துவிடாமல், உம்மேல் நோக்கமாயிருக்கவும், எப்போதும் உம்மை முழுமையாக நம்புவதற்கும் உதவி செய்யும். என்னை ஆவிக்குரியவிதத்தில் பெலப்படுத்தும்; எந்தச் சூழ்நிலையிலும் உம்முடைய மகத்துவமான நாமங்களையும் உம் வார்த்தையையும் ஞாபகப்படுத்தி, பயன்படுத்தி, வெற்றி சிறக்கும்வண்ணம் அவற்றை என் இருதயத்திற்குள் வைத்துக்கொள்ள உதவும். உம்முடைய ராஜ்யம் வல்லமையும் மகிமையும் கொண்டதாகையால், வரும் நாள்களில் உம்முடைய அற்புதங்களை நான் அனுபவித்து மகிழும்படி என்மேல் இரக்கமாயிருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.