அன்பானவர்களே, "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:4) என்று பவுல் கூறுகிறான். இந்த வசனத்தின்படி ஆண்டவர் உங்களுக்கு தமது சந்தோஷத்தை தந்து ஆசீர்வதிப்பாராக. "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்" என்றும் வேதம் கூறுகிறது. ஆண்டவரின் பிரசன்னம் நம்மோடு இருக்கும்போது, நாம் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் சந்தோஷமடைவோம். நம் மத்தியில் தேவ பிரசன்னம் இருப்பதே முக்கியமாகும். அவருடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. உலகம், சந்தோஷத்திற்காகவும் இன்பத்திற்காகவும் ஏங்குகிறது. ஆகவே, ஜனங்கள் இன்பத்தை தேடி அங்குமிங்கும் ஓடுகிறார்கள்; அதற்காக அடிக்கடி மற்றவர்களை எதிர்நோக்குகிறார்கள்; ஆனால், அப்படி வருபவை சிறிதுநேரத்தில் மறைந்துபோகும். கடல் அலைகள் கரைக்குச் சென்று திரும்புவதுபோல அதை வந்து செல்லும். ஆனால், கர்த்தருக்குள் கிடைக்கும் மகிழ்ச்சி வாழ்நாளெல்லாம் குறையாது காணப்படும்.
தேவன், "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" (யோவான் 16:24) என்று கூறுகிறார். ஆண்டவர் தரும் சந்தோஷமானது பூரணமாயிருக்கும். இதற்காக நாம் ஏங்கவேண்டிய அவசியம் இல்லை. நமக்கு தேவையானதற்கு அதிகமாக நம் ஆத்துமாக்களில் ஆண்டவர் இந்த இந்த சந்தோஷத்தை தருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, அதாவது ஆண்டவரால் நிரம்பும்போது, மகிமையான சந்தோஷத்தை அடைவோம். "...அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து" (1 பேதுரு 1:8) என்று வேதம் கூறுகிறது.
நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, முன்னால் வந்து சாட்சி கூறும்படி அழைக்கப்பட்டேன். ஆனால், நான் அனுபவித்த அளவில்லாத சந்தோஷத்தை மற்றவர்களிடம் என்னால் விவரிக்க இயலவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. ஆண்டவர் என்னை அப்படி ஆழமான, நிரம்பி வழிகிற சந்தோஷத்தினால் நிறைத்தார்; நான் அவருக்குள் சந்தோஷமாயிருந்தேன். என்னால் ஒரு வார்த்தையைக் கூடி பேச இயலவில்லை. நான் கர்த்தருடைய சந்தோஷத்தை எண்ணி விசும்பி அழுதேன். அன்பானவர்களே, தேவனிடத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. அவர் தமது அன்பின் பரிபூரணத்தினால் நம்மில் களிகூருகிறார். அவருடைய அன்பினிமித்தம் நம் உள்ளங்களில் பூரணமான சந்தோஷத்தை பெற்றிருக்கிறோம். சந்தோஷத்தை அனுபவிப்பதற்கான இன்னொரு வழி, தேவனுடைய வசனத்தை படிப்பதாகும். அது நம் உள்ளங்களுக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கிறது. தாவீது, "கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது" (சங்கீதம் 19:8) என்று குறிப்பிடுகிறான். தேவனுடைய வசனம் ஜீவனும் சந்தோஷமும் நிறைந்ததாயிருக்கிறது. நாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யும்போது அது நம்மை கண்டிக்கிறது. ஆனால் நாம் தேவனுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும்போது, நம்முடைய எதிர்காலத்திற்கென்று தேவன் ஒரு வார்த்தையை கொடுத்து, நம்முடைய உள்ளங்களை பெரிய சந்தோஷத்தினால் நிரப்புகிறார். இதைத்தான் ஆண்டவர் இயேசு, "நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்" (யோவான் 15:10) என்ற வேத பகுதியில் கூறுகிறார். அடுத்த வசனத்தில், "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்" என்று கூறுகிறார். தேவனுடைய வசனம் நம்முடைய உள்ளங்கள் சந்தோஷத்தினால் பொங்கி வழியும்வண்ணம் நிறைவான மகிழ்ச்சியை அளிக்கிறது. "மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்" (நீதிமொழிகள் 17:22) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வசனம் நம் உள்ளங்களையும் சரீரங்களையும் குணப்படுத்தி, எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்பானவர்களே, உங்கள் இருதயம் எப்போதும் மகிழ்ச்சியாயிருப்பதாக; சந்தோஷத்தினால் நிரம்புவதாக. தேவனுடைய வசனத்தை எப்போதும் இருதயத்தில் காத்துக்கொள்ளுங்கள்; அவருக்குள் எப்போதும் மகிழ்ச்சியாயிருங்கள், மகிழ்ச்சியாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் சந்தோஷமாய் இருப்பதை நீர் காண விரும்புவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் வாஞ்சிக்கிற சந்தோஷத்தை, சமாதானத்தை, திருப்தியை உம்மால் மாத்திரமே தர இயலும். உலக காரியங்களிடமும் ஜனங்களிடமும் திருப்தியையும் நிறைவையும் தேடினேன்; எதிலும் நான் விரும்புகிற ஆழமான சமாதானம் கிடைக்கவில்லை என்று அறிக்கையிடுகிறேன். இன்றைக்கு, உம்முடைய பிரசன்னத்தை தேடி உம் முன்னே வருகிறேன். எப்போதும் என்னோடிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்மால் நிரம்பும்படி, என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைத்து, பரிபூரண சந்தோஷமுள்ள உம்முடைய சமுகத்தில் வைத்துக்கொள்ளும். உம்முடைய மகிமையான சந்தோஷத்தினால் என் உள்ளம் நிரம்பும்படி உம்முடைய ஜீவனுள்ள, கிரியை செய்கிற வசனத்தை தியானித்து புரிந்துகொள்ளும் கிருபையை அருளிச்செய்யும். இவ்வுலகின் கவலைகளையும் தொல்லைகளும் என்னை ஒருபோதும் கீழே தள்ளாதிருக்கும்படி காத்துக்கொள்ளும். உமக்குள் நான் எப்போதும் பெலனையும் நம்பிக்கையையும் நித்திய பேரின்பத்தையும் சந்தோஷத்தையும் கண்டுகொள்ள கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.