அன்பானவர்களே, "நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்" என்று தேவனுடைய வாக்குத்தத்தம் கூறுகிறது (ஏசாயா 54:14). அந்த வசனம், "கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை" என்று தொடர்ந்து கூறுகிறது. இவ்வுலகில் பயம் நம்மை சூழ்ந்திருக்கிறது. நமக்கு அன்பானோரை இழக்கக்கொடுக்கும்போது, வேலையில் துன்பங்கள் வரும்போது, வேலையை இழக்க நேரிடும்போது, வியாதிப்படும்போது, பிள்ளைகளின் வாழ்வில் தோல்வி வரும்போது, வீட்டை விட்டு வெளியே தள்ளப்படும்போது நாம் கலங்கிப்போகிறோம். இதுபோல் எத்தனையோவிதமான பயங்கள் உள்ளன. பொல்லாத பிசாசு, பொல்லாத மக்கள், இச்சை நிறைந்தவர்களால் வரும் பயங்களும் உள்ளன. சிலவேளைகளில் திருமணம் செய்துகொள்ள முடியாமல், ஏற்ற வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க முடியாமல் அநேகர் தவிக்கின்றனர். எதிர்காலத்தை குறித்த பயம் ஏற்படுகிறது; பொல்லாத பிசாசினால், ஜனங்களால் கொடுமை உண்டாகிறது.
ஆனால் வேதம், "பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை" என்று கூறுகிறது. தேவன் உங்களை நீதியில் ஸ்திரப்படுத்தும்போது, நீங்கள் அவருடைய பிள்ளையாக இருக்கும்போது, பாதுகாக்கப்பட்டிருப்பீர்கள். நீதி உங்களுக்கு முன்னாகச் செல்லும்; கர்த்தர் உங்கள் பிறகே காக்கிறவராயிருப்பார். வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் (ஏசாயா 58:8). இதுவே தேவன் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தம். தேவன், நீங்கள் நீதிமானாக இருக்கும்படி காத்துக்கொள்வார். இயேசு உங்களுக்குள் ஜீவிக்கும்போது, நீங்கள் அவருடைய திட்டத்தின்படி நடக்கும்போது, உலகின் பொல்லாத காரியங்களும், பயங்கரத்தையும் கொடுமையையும் கொண்டு வருகின்றவையும் ஒருபோதும் உங்களை மேற்கொள்ள முடியாது. ஆகவே, தினமும் தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள். அதை தியானியுங்கள். அதன்படி நடப்பதற்கு உதவும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். மற்றவர்களை மன்னித்து, அவர்களுக்காக, தேவையோடு உள்ள மக்களுக்காக ஜெபியுங்கள். அதற்காகவே, உங்கள் கம்ப்யூட்டரை இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் கம்ப்யூட்டருடன் இணைத்து, தொலைபேசி அழைப்புகளை பெற்று மற்றவர்களுக்காக ஜெபிக்கிற வாய்ப்பினை இயேசு அழைக்கிறார் ஊழியம் வழங்குகிறது. ஜெப கோபுரத்திற்கு வந்தும் மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்லாம். இந்த உலகின் பயங்கரத்துக்கும் கொடுமைக்கும் தேவன் உங்களை விலக்கிக் காத்துக்கொள்வார்.
நாக்பூரைச் சேர்ந்து லலிதா என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் சிறிய வயதிலேயே தாயை இழக்க நேரிட்டது. அவர்களுக்கு பிறகு பிறந்த நான்கு பிள்ளைகளையும் வளர்க்கவேண்டிய பொறுப்பு அவர்கள்மேல் விழுந்தது. அவர்கள் தந்தையும் காலமாகிவிட, பிள்ளைகள் அனைவரும் அநாதைகளாயினர். அக்கம்பக்கத்தினர், "உன்னை யார் திருமணம் செய்துகொள்வார்?" என்று கேலி செய்தனர். பிள்ளைகளின் உள்ளம் உடைந்துபோனது. பயத்திலும், பயங்கரத்திலும், கொடுமையின் மத்தியிலும் வாழ்ந்தனர். அப்போது அவர்கள் நாக்பூரில் உள்ள ஜெப கோபுரத்தில் ஜெப வீராங்கனையாக சேர்ந்தார்கள்.
அவர்கள் பயத்தில் வாழ்ந்தாலும், தன் வாழ்க்கையை இயேசுவுக்கு கொடுத்து, மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு 40 வயதாகியது. மக்கள் அவர்களை கேலி செய்துகொண்டே இருந்தார்கள். நானும் என் மனைவி இவாஞ்சலினும் டெல்லி தேசிய ஜெப கோபுரத்திற்குச் சென்றிருந்தபோது அவர்கள் எங்களை சந்தித்தார்கள். நாங்கள் அவர்கள்மேல் கைகளை வைத்து, இயேசுவின் நாமத்தில் அவர்கள் வாழ்க்கை தொடங்கும் என்று தேவன் அவர்களுக்காக வைத்திருந்த திட்டத்தை அறிவித்தோம். ஆறு மாத காலத்திற்குள் நாக்பூரில் இருந்தே அவர்களுக்கு ஒரு வரன் வந்தது. 2023 ஜூன் மாதம் 2ம் தேதி அவர்களுக்கு திருமணமானது. எனக்கும் இவாஞ்சலினுக்கும் ஜூன் 2ம் தேதிதான் திருமணம் நடந்தது. ஆண்டவர் அந்த சகோதரியை கனப்படுத்தியவிதத்தை பாருங்கள்! அவர்கள் கணவர் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவர்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அவர்கள், "நான் நீதியில் நடப்பேன். ஜெப கோபுரத்தில் ஜனங்களுக்கு ஊழியம் செய்வேன்," என்று கூறுகிறார்கள். தேவன் அவர்கள் குடும்ப வாழ்க்கையை நிலைப்படுத்தினார்; உங்களுக்கும் அப்படியே செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் என்னை நீதியில் நிலைநிறுத்துவீர் என்றும், உம்முடைய சித்தத்தில் நடக்கச் செய்வீர் என்றும் விசுவாசிக்கிறேன். என்னையோ, என் குடும்பத்தையோ, என் எதிர்காலத்தையோ எந்தப் பயங்கரமும், கொடுமையும் அணுகுவதற்கு நீர் அனுமதிக்கமாட்டீர். ஆண்டவரே, எப்போதும் உம்முடைய பாதுகாப்புக்குள் என்னை மூடி, என் பிறகே என்னைக் காத்தருளும். என் வாழ்வில் உடைந்திருக்கும் பகுதியை சீர்ப்படுத்தி, இழந்தவை எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். மற்றவர்களை மன்னிக்கும்படி என்னை பெலப்படுத்தி, உம்முடைய அன்பிலும் கிருபையிலும் நான் நடக்கும்படி செய்யும். தினமும் உம்முடைய வார்த்தையை தியானிக்கவும், உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியவும் எனக்கு உதவி செய்யும். எனக்கு போராட்டங்கள் இருந்தாலும், மற்றவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி என்னை பயன்படுத்தும். என்னை பயமுறுத்தும் எல்லாவற்றையும் அகற்றி, உம்முடைய சமாதானம் என் வாழ்க்கையை ஆளும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.