அன்பானவர்களே, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்" (யாக்கோபு 1:12) என்று வேதம் கூறுகிறது. தேவன், நம் வாழ்க்கையில் அநேக சோதனைகளை அனுமதிக்கிறார். ஆண்டவராகிய இயேசு, ஊழியம் செய்ய தம் வாழ்க்கையை அர்ப்பணித்ததும், பரிசுத்த ஆவியானவர், பிசாசினால் சோதிக்கப்படும்படி அவரை நடத்தினார். சாத்தான், உலக இச்சைகளைக் காட்டி அவரை சோதித்தான். ஆனால், இயேசு தேவனுடைய வார்த்தைகளை உரைத்து அவனை மேற்கொண்டார். சாத்தான் அவரை விட்டு சென்றான். அவ்வாறே, மக்கள், சூழ்நிலைகள், பணம் உள்ளிட்ட பலவிதங்களில் இவ்வுலக ஆசைகளைக் காட்டி சாத்தான் நம்மை சோதிக்கிறான். ஆனாலும், தேவனுடைய வார்த்தை அனுதினமும் நம்மை பெலப்படுத்துகிறதாய் இருக்கிறது; அதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். தினமும் காலையில் வேதத்தை வாசிப்பது, சோதனைக்கு தப்பவும், அதை மேற்கொள்ளவும் நமக்கு பெலன் தரும். "சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரிந்தியர் 10:13) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. தேவனுடைய வசனத்தினால் நாம் திடமாய் நின்று, முற்றுங்ஜெயங்கொள்ள முடியும்.
ஆம், அன்பானவர்களே, நாம் இயேசுவின்பேரில் கொண்டிருக்கும் அன்பின் ஆழத்தை சோதிப்பதற்கு சிலவேளைகளில் தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார். நம் குடும்பம், அந்தஸ்து, பணம் அல்லது நம்மையே காட்டிலும், நாம் தம்மை அதிகமாய் நேசிக்கிறோமா என்பதை அறிந்துகொள்ள தேவன் விரும்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரை நம்பி, நிலைத்து நிற்பதற்கு உதவும்படி தேவன் தம் கிருபையை பெருகச் செய்கிறார்.
சோதனையின் மத்தியில் உறுதியாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஜீவகிரீடத்தை பெறுவார்கள். அதற்காகவே தேவன் நமக்கு பரிசுத்த ஆவியை தருகிறார். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, எல்லா பெலவீனங்களையும் மேற்கொள்வதற்கான பெலனை அடைவோம் (ரோமர் 8:26). இயேசுவை நேசியுங்கள்; அவரை விசுவாசியுங்கள்; அவர் ஜீவகிரீடத்தை தந்து உங்களை உயர்த்துவார். சோதனைகள் வரலாம்; ஆனால் அவை, நம்முடைய அர்ப்பணிப்பை காட்டுவதற்கான வாய்ப்புகளாக அமையும்; தேவனுடைய கிருபையால் நாம் ஜெயம்பெறுவோம்.
சிரோமணி மின்ச் என்ற அருமையான சகோதரி, தேவன் உண்மையுள்ளவர் என்பதற்கு ஒரு சாட்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களும் அவர்கள் கணவரும் சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள், அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்கள். 2008ம் ஆண்டில் அவர்கள் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். அவர்கள் கணவரை அவர்களை பாதி வழிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விடுவார்; மீதி வழிக்கு அவர்கள் மோசமான சாலையில் பேருந்தில் பயணிக்கவேண்டும். அப்படி பயணித்ததால், முதுகெலும்பிலும் இடுப்பிலும் கடுமையான வலி உண்டானது. அவர்களால் வகுப்பில் நின்று பாடம் கற்றுக்கொடுக்க இயலவில்லை; வீட்டில் படுக்கவும் முடியவில்லை. அதிக வலியினால் அவர்கள் அழுதார்கள்; தனக்காக ஜெபிக்கும்படி தொலைபேசி மூலம் ஜெப கோபுரத்தை தொடர்பு கொண்டார்கள்; கடிதங்கள் எழுதினார்கள்; இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தார்கள். ஒருநாள், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவர்களுடைய தேவைகளுக்காக நான் ஜெபித்தபோது, தேவனுடைய வல்லமை அவர்களை தொட்டு குணப்படுத்தியது. அவர்கள் வேதனை முற்றிலும் மறைந்தது. அவர்கள் உடன் இருந்தவர்கள் பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்துக்காகவும் தவறான வழியில் முயற்சித்தார்கள். இவர்களோ அதை மறுத்து, இயேசுவையே நம்பி ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். தேவன் அவர்களுக்கு பதவி உயர்வை அளித்ததுடன், வீட்டிலிருந்து 15 நிமிட நேரத்தில் நடந்துசெல்லும் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு பணியிட மாற்றம் கிடைக்கும்படி செய்தார். எவ்வளவு ஆசீர்வாதம்! உபத்திரவத்தின் மத்தியிலும் உறுதியாய் இயேசுவை நம்புகிறவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். உங்களுக்கு இந்த தெய்வீக தயவு கிடைப்பதாக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, சோதனையின் மத்தியிலும் உறுதியாயிருப்பவர்களுக்கு ஜீவகிரீடம் கிடைக்கும் என்று வாக்குப்பண்ணுவதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இக்கட்டுகள் நேரிடும்போது இயேசுவின்மேல் உண்மையான நம்பிக்கை வைப்பதற்கான கிருபையையும் பெலனையும் தந்தருளும். எல்லா பெலவீனங்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளும்படி என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும். உம்முடைய வசனத்தையே பற்றிக்கொண்டு, அதின் சத்தியத்தில் அடைக்கலம் காணவும் ஞானத்தை பெற்றுக்கொள்ளவும் உதவும். குடும்பம், அந்தஸ்து, உலக ஆஸ்திகள் எல்லாவற்றை விடவும் உம்மை அதிகமாய் நேசிக்க எனக்கு உதவும். எல்லா சோதனைக்கும் தப்பிக்கொள்ளுவதற்கு நீர் வழியை ஏற்படுத்துவீர் என்று அறிந்து உறுதியாய் நிற்பதற்கு தேவையான தைரியத்தை அருளிச்செய்யும். ஒவ்வொரு சோதனையின் மூலமும் உம்மேல் நான் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பில் அதிகமாக வளர உதவும். உம்முடைய பூரண திட்டத்தை நம்பி, உம்முடைய கிருபையினால் வெற்றியை பெறும்படி என் உள்ளத்தை பெலப்படுத்தும். என்னை ஆசீர்வதித்து உயர்த்துவதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.