அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கை இப்போது கடுவெளிபோல இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். "எல்லாம் வறண்டு கிடக்கிறது. எனக்கு வாழ்க்கையே இல்லை," என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், தேவன் உங்களை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல மாற்ற விரும்புகிறார். இன்றிலிருந்து உங்கள் வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதமும் ஜீவனும் சந்தோஷமும் பெருகும்.

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்" (ஏசாயா 58:11) என்பதே தேவன் இன்று உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தமாகும்.

திருநெல்வேலியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற சகோதரரின் வல்லமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் கிறிஸ்துவை அறியாதிருந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, மிகவும் முரட்டாட்டம் உடையவராய் பெற்றோருக்கு பெரும் வேதனையை கொடுத்துக்கொண்டிருந்தார். மதுப்பழக்கத்துடன் அவர் போராடிக்கொண்டிருப்பதை கண்ட அவருடைய உறவினர் ஒருவர், அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட தாம் உதவுவதாகக் கூறி, அவரை இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு அழைத்து வந்து, இயேசு அழைக்கிறார் இளம் பங்காளராக இணைத்தார். ஜெப கோபுரத்தில் ஜெப வீரர்கள் அவருக்காக ஜெபித்தனர். அன்றிலிருந்து ஒரு தெய்வீக சமாதானம் மகேந்திரனின் உள்ளத்தை நிரப்பியது. இயேசுவின் வல்லமையினால் அற்புதவிதமாக எல்லா அடிமைத்தனங்களும் அவரை விட்டு அகன்றன. அவர் புது மனுஷனாகி, இயந்திரங்களை வாங்கி விற்கும் தன்னுடைய வியாபாரத்தை மறுபடியும் நடத்த தொடங்கினார்.

அவரிடம் இயந்திரங்களை வாங்கியவர்கள் பணம் செலுத்தாமல் இருந்தனர். ஆகவே, அவர் அதிக கடனில் இருந்தார். அப்போது அவருக்கு ஆண்டவராகிய இயேசுவுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையும் அதிகமாக எழுந்தது. ஒரு பக்கம் கடன் பாரம்; மறுபக்கம் இயேசுவுக்கு ஊழியம் செய்யும் வாஞ்சை அவருக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய பட்டணத்தில் இயேசு அழைக்கிறார் கூட்டம் நடந்தது. அவர் கூட்டத்திற்கு வந்தார். நான் அங்கே தேவ செய்தியளித்துக்கொண்டிருந்தேன். ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்த அந்தக் கூட்டத்தில் நான் அவர் பெயரைக் கூறி அழைத்து, எந்தப் பாதையில் செல்வது என்று அவர் குழம்பிக்கொண்டிருப்பதாகவும், இருளுக்குள் இருப்பதுபோல், இந்த உலகில் எப்படி வாழ்வது என்று தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் கூறினேன். தேவனுடைய கரம், அவரை ஆசீர்வதிப்பதற்காகவும், வழிநடத்துவதற்காகவும், புதிய வாசல்களை திறப்பதற்காகவும் அவர்மேல் வந்திருப்பதாக தீர்க்கதரிசனமாக உரைத்தேன். இந்த தீர்க்கதரிசனத்தை கேட்டதும், தெய்வீக சமாதானம் அவரை நிறைத்தது. நான்கு மாதத்திற்குள் அவருக்கு வரவேண்டிய பணம் அவ்வளவும் வந்து சேர்ந்தது. எல்லா கடனையும் செலுத்தி முடித்துவிட்டு, இப்போது ஆண்டவருக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்.

அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் அப்படியே செய்வார். உங்கள் வாழ்க்கையை அவர் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல மாற்றுவார். இனிமேல் வறட்சி இருக்காது. இயேசு உங்களை நேசிக்கிறார்; நித்திய ஜீவனை அருளிச்செய்கிறார். அவருடைய நாமத்தில் ஜெபிப்போம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் கொடுத்திருக்கும் அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் கூடாதவற்றை முடியச்செய்கிற தேவனாயிருக்கிறீர். இப்போதும், வறண்டுபோயிருக்கும் என் வாழ்வை பாரும். சமாதானமும் வளர்ச்சியும் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். பிரச்னைகளுக்குள்ளும் நிச்சயமற்ற சூழ்நிலைக்குள்ளும் சிக்கித் தவிக்கிறேன். உம்முடைய பிரசன்னத்தை உணர இயலாமலும், உம்முடைய சத்தத்தை கேட்க இயலாமலும் இருக்கிறேன். இன்றைக்கு உம்மண்டைக்கு ஓடி வருகிறேன். என்னை அன்போடு அரவணைத்து, என் ஆவியை பிடித்திருக்கும் பயம், கலக்கம், எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையும் அகற்றும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி, புதுச்சிருஷ்டியாக மாற்றும். இப்போதிலிருந்து உம்முடைய பிரசன்னத்தை நான் அனுபவிக்க உதவும். உம்முடைய ஜீவத்தண்ணீர் எனக்குள் பாய்ந்தோடட்டும்; உமக்குள் நான் ஜீவனையும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அனுபவிக்க கிருபை செய்யும். ஆண்டவரே, என்னை கனப்படுத்தும். என்னுடைய கூப்பிடுதலுக்குப் பதிலளியும். மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் பாத்திரமாக என்னை பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.