அன்பானவர்களே, "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்" (சங்கீதம் 46:11) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். நீங்கள் திக்கற்றவர்கள் அல்ல. நீங்கள் தனிமையானவரோ, மறக்கப்பட்டவரோ அல்ல. தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார்; ஆகவே, நீங்கள் தனிமையாய் இல்லை.
விழுப்புரத்தை (தமிழ்நாடு) சேர்ந்த முத்தலாம்பிகை என்ற அன்பு சகோதரி தன்னுடைய சாட்சியை பகிர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள். இருவரும் இளம் பங்காளர்கள். அவர்கள் ஆசிரியையாக பணியாற்றுகிறார்கள். அவர்கள் மகனுக்கு ஒரு விபத்து நடந்தது. அதிக எடையுள்ள பெரிய கிரானைட் துண்டு அவர்மேல் விழுந்துள்ளது. கல்லை நகர்த்தியபோது, அவர் படுகாயமுற்று அசைவற்ற நிலையில் கிடப்பதை கண்டார்கள். உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். இடுப்பிலிருந்து கால் எலும்புகள் அனைத்தும் உடைந்துபோயிருந்தன. மருத்துவர், கிட்டத்தட்ட அவர் மரிக்கும் நிலையில் இருப்பதாகவும், பிழைத்தாலும், அறுவைசிகிச்சையும் வேறு சிகிச்சைகளும் செய்தாலும் அசைய முடியாமல்தான் இருப்பார் என்று கூறினார். திருமணமாகி சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. ஆகவே, குடும்பத்தினர் அனைவரும் மனமுடைந்து போயினர். சகோதரி முத்தலாம்பிகை, புதிதாக திருமணமாகி வந்த மனைவியையும் குடும்பத்தினரையும் தேற்றினார்கள். காயமுற்றவரின் மனைவியை இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளச் செய்தார்கள். ஜெப வீரர்கள், அவர்களோடு இணைந்து தேவ சமுகத்தில் அழுது, அற்புதம் நடக்கும்படி ஜெபித்தார்கள். "நிச்சயமாகவே தேவன் அவரை எழுப்புவார்; மீண்டும் நடக்கும்படி செய்வார்," என்று ஜெப வீரர்கள் தீர்க்கதரிசனமாக கூறினார்கள். ஆண்டவர் அந்த ஜெபத்தைக் கேட்டார். மூன்றே மாதங்களில் அவர் பூரண சுகமடைந்தார்; இயல்பாக நடக்க ஆரம்பித்தார். தற்போது, மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நகரமெல்லாம் சுற்றி வருகிறார். ஆண்டவராகிய இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரே உங்களுக்கு அடைக்கலமாவார்.
"நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்," என்று கூறிய யாக்கோபின் தேவன் உங்களுக்கு அடைக்கலமாயிருப்பார். அவர் உங்களை விட்டு விலக மாட்டார். அவரே உங்களுக்குக் கோட்டையாயிருப்பார். நீங்கள் எப்படிப்பட்ட உபத்திரவத்தின் வழியாக கடந்துசென்றாலும், அவர் உங்களுக்கு அடைக்கலமாக இருப்பார். அவர் உங்களை விடுவித்து, உயர்த்தி, ஆசீர்வதிப்பார். உங்கள் உபத்திரவத்தில் அவர் நித்திய அடைக்கலமாயிருப்பார். இன்றைக்கு அவர் உங்களை விடுவிப்பார்; இதுவே விடுதலையின் நாளாகும். சந்தோஷமாயிருங்கள்!

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய வாக்குத்தத்தத்தின் மூலம் என்னை தைரியப்படுத்தி, எனக்கு உதவி செய்யும்படி நீர் எப்போதும் என்னுடன் இருப்பதை உறுதி செய்கிறபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்பி, விடுதலையளிக்கும் உம்முடைய கரம், என் மீதும் என் வீட்டார் அனைவர்மேலும் அமர்ந்து, எல்லா வியாதிகள், எல்லா குறைவுகள், சமாதானமற்ற சூழ்நிலையிலிருந்து எங்களை விடுவிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம்முடைய பூரண ஆசீர்வாதங்களும் ஈவுகளும் எங்கள் வாழ்வில் வருவதாக. வாழ்வில் எப்பக்கமும் நாங்கள் நீர் தரும் விடுதலையை அனுபவிக்க அருள்புரியும். ஆண்டவரே, எல்லா பாரத்தையும் உம்முடைய பாதத்தில் வைத்து, என்னில் நற்கிரியையை தொடங்கிய நீர் அதை முடிப்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். நீரே என்னுடைய நித்திய அடைக்கலமாக, கோட்டையாக, தேவனாக விளங்குகிறீர் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.