அன்பானவர்களே, இந்த தேதியானது, என் தந்தையின் வாழ்வில் மிகவும் முக்கியமானது. இந்த தேதியில்தான் இயேசு, என் தந்தையை பாவத்திலிருந்து இரட்சித்து, அவருடைய வாழ்வின் தேவனானார். இன்றைக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணிக்கலாம். அப்போது, அவர், மறைந்த என் தந்தை சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் மூலமாக லட்சக்கணக்கான மக்களை ஆசீர்வதித்ததுபோல, உங்களையும் பயன்படுத்துவார். "அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்" (எரேமியா 31:3) என்று இன்றைய வாக்குத்தத்தம் கூறுகிறது. ஆகவே, உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள். இயேசு உங்களை சிநேகிக்கிறார்; அவருடைய அன்பு ஒருபோதும் அழிந்துபோகாது. அவரது அன்பு அழியாததுபோல, உங்களுக்கு நன்மை செய்வதையும் அவர் நிறுத்தமாட்டார். நீங்கள் தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்றவராயிருந்தாலும் அவர் உங்களை சதாகாலங்களிலும் சிநேகிக்கிறார். அவரது அன்பு உங்களை உயர்த்தும். நீங்கள் அவரை நேசித்து, அவருக்கு ஊழியம் செய்யுங்கள்; அவருடைய நாமத்தில் மற்றவர்களை மன்னியுங்கள்; அவர் இரட்டிப்பான பலனை உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். இதுவே இன்று உங்களுக்கான தேவ வாக்குத்தத்தமாகும். அவரது பரிபூரண ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வில் பாய்ந்து வருவதாக!
இவாஞ்சலின் மார்க்கரெட் பிரபு என்ற சகோதரியின் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக அவர்களுக்கும் அவர்கள் கணவருக்கும் பத்து லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளாக அவர்கள் குழந்தை பாக்கியத்திற்காகவும் காத்திருந்தார்கள். இந்த மனவேதனையின் மத்தியில் அவர்கள் ஜெப கோபுரத்திற்கு வந்தார்கள். அங்கே அர்ப்பணிப்புடன் ஊழியம் செய்யும் ஜெப வீரர்கள், அவர்களுக்காக ஜெபித்தார்கள். ஜெப கோபுரத்திற்கு பலமுறை சென்ற நிலையில், "நாம் ஏன் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் ஜெப வீரராக மாறக்கூடாது?" என்ற தெய்வீக உணர்வு அவர்களுக்குள் ஏற்பட்டது. அவர்கள் ஜெப கோபுரத்திற்கு வருகிறவர்களுக்காக ஜெபிப்பதற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கினார்கள். நீங்களும் அப்படியே ஊழியம் செய்யலாம். அவர்கள் குடும்பமாக வணிக ஆசீர்வாத திட்டத்திலும், குடும்ப ஆசீர்வாத திட்டத்திலும் இணைந்தார்கள். பல லட்சக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக திகழும்படி ஊழியத்தை தாங்கினார்கள். அவர்கள் வியாபாரத்தில் அற்புதமான திருப்புமுனை உண்டானது. புதிய ஆர்டர் ஏராளமாய் கிடைத்தன; அவர்கள் குடும்பம் உயர்வடைந்தது. அடுத்த ஆண்டு, அந்த சகோதரிக்கு, இரட்டிப்பான ஆசீர்வாதமாக, இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இன்றைக்கும் அவர்கள் தொடர்ந்து ஜெப கோபுரத்தில் மற்றவர்களுக்காக ஜெபித்து வருகிறார்கள்; ஊழியத்தை தாங்குகிறார்கள்; தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
அன்பானவர்களே, உங்களையும் இவ்வாறே ஆசீர்வதிப்பதற்கு ஆண்டவர் விரும்புகிறார். இயேசுவின் அன்பை அனுபவியுங்கள்; அவரை முழு மனதோடு நேசித்திடுங்கள்; மக்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம் அவருக்கு ஊழியம் செய்யுங்கள்; பலனாக நிரம்பி வழியுமளவுக்கு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் ஒருபோதும் மாறாத நித்திய அன்புடையவராயிருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை இரட்சிப்பதற்காக, உயர்த்துவதற்காக, உமக்கு ஊழியம் செய்ய அழைப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் வாழ்வை உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். வேதாகமத்தில் உம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் மூலம் நீர் செய்ததுபோல, மற்றவர்களை ஆசீர்வதிக்கும் பாத்திரமாக என்னை பயன்படுத்தும். ஆண்டவரே, உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன். வெற்றியிலும் தோல்வியிலும் உம்முடைய அன்பு மாறாததாயிருக்கிறது என்று அறிந்திருக்கிறேன். உம்மை அதிகமாக நேசிக்கவும், உண்மையாய் உமக்கு ஊழியம் செய்யவும், உம்மைப்போல மற்றவர்களை மன்னிக்கவும் எனக்கு உதவி செய்யும். நான் உம்மை மகிமைப்படுத்தவும், தேவையோடு இருக்கிறவர்களுக்கு வெளிச்சமாக விளங்கவும் தக்கதாக உம்முடைய ஆசீர்வாதங்களை என்மேல் இரட்டிப்பாக பொழிந்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.