எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்" (நீதிமொழிகள் 12:24) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். அன்பானவர்களே, இந்த வசனத்தை உள்ளத்தில் பதித்து, இதன்படி செய்வதற்கு கவனமாய் இருப்போம். நாம் செய்கிற எல்லா காரியங்களிலும் ஜாக்கிரதையாயிருப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.

விசுவாசத்திலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எல்லாக் காரியங்களிலும், பெருகியிருக்கவேண்டும் என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது (2 கொரிந்தியர் 8:7). தினமும் காலையில் நாம் எழும்பும்போது, வாழ்க்கையில் எல்லாக் காரியங்களையும் ஜாக்கிரதையாய் நடப்பிக்கிறோமோ என்பதில் கவனமாய் இருக்கவேண்டும். நாம் எழுந்திருக்கும்போதே, நம்முடைய இருதயங்களை தேவனிடமாய் திருப்பி, அன்றைய தினத்தில் அவருடைய பாதுகாப்பை தேடுவோம். அவரை உண்மையாய் தேடுவதில் நாம் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்.

நாள் முழுவதும், எல்லா தருணத்திலும், ஜாக்கிரதையான ஆவியோடு காணப்படும்படி நம்முடைய வார்த்தைகளிலும் செய்கைகளிலும் விழிப்புடன் இருக்கவேண்டும். "நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்" (எபிரெயர் 6:11,12) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனத்தில் காணப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் முக்கியமானது. நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ளும்படி, உறுதியான ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும். நாம் விசுவாச பாதையில் தொடர்ந்துசெல்லும்படி, எல்லாக் காரியங்களிலும் ஜாக்கிரதையாய் இருப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய வேலைகளில் நம் விசுவாசம் வெளிப்படவேண்டும். விசுவாசிகளாகிய நாம், "தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி... இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்" (தீத்து 3:8) என்ற வசனத்தை நினைவில் கொள்ளவேண்டும். ஆகவே, நம் செயல்கள், தேவனுக்கு கனத்தைக் கொண்டுவரும்படி நன்மையானவையாக இருக்கவேண்டும். "சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்" (எபேசியர் 4:3) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. நம் வீடுகளில் சமாதானம் காணப்படும்படி நாம் தேடினால், ஆவியில் ஒருமனப்படுவதில் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். அப்போது நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் சமாதானம் காணப்படும்.

அன்பானவர்களே, ஜாக்கிரதையாய் வாழ வேண்டியதின் அவசியத்தை நாம் பார்த்தோம். ஜாக்கிரதையாய் இருக்கிறவர்களுக்கு தேவன் வாக்குப்பண்ணியுள்ள எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி நாம் இப்போது ஜெபிப்போம். உங்கள் வாழ்க்கையில் எந்தப் பகுதியிலாவது ஜாக்கிரதையில் நீங்கள் குறைவுபட்டிருந்தால் அதை இப்போதே ஆண்டவரிடம் அர்ப்பணித்து, அவருடைய வழிகாட்டுதலை தேடுங்கள்; அவர் உங்களை நடத்துவார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, ஜாக்கிரதையுடன் வாழ்வதற்கு உம்முடைய கிருபையை நாடி உம் முன்னே வருகிறேன். என்னுடைய வார்த்தைகளாலும் செய்கைகளாலும் உம்மை கனம்பண்ணும்படி, எல்லாவற்றிலும் உண்மையாகவும் கவனமாகவும் இருப்பதற்கு எனக்கு உதவி செய்யும். "ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்" என்று வேதம் கூறுகிறதுபோல, நான் ஜாக்கிரதையுடன் உம்முடைய வாக்குத்தத்தங்களை அனுபவிக்க வழிகாட்டுவதோடு, சோம்பலின் பாதையில் சென்றுவிடாமல் காத்துக்கொள்ளும். தினமும் காலையில் உம்மை உண்மையாய் தேடி, உம்முடைய பாதுகாப்பை பெற்றுக்கொள்ளும்படி என் இருதயத்தை நடத்தியருளும். எல்லாக் காரியங்களிலும் உம்முடைய நன்மையை விளங்கப்பண்ணும்படி நான் கருத்தாய், கவனத்துடன் இருப்பதற்கு என்னை பெலப்படுத்தும். என் செய்கைகள் உம்முடைய அன்பை வெளிக்காட்டுவதாக; என் வீட்டில் ஒருமனமும் சமாதானமும் விளங்கும்படி செய்வதாக. என் வாழ்க்கை உம்மை மகிமைப்படுத்துவதாக அமையும்படி, நற்கிரியைகளில் என்னை சிறந்து விளங்கச்செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.