அன்பானவர்களே, தேவன் உங்களோடு இருக்கிறார். "உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்" (செப்பனியா 3:17) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். ஆம், தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இரட்சிக்கிறதற்குரிய வல்லமையுடையவர் உங்களுக்குச் சமீபமாய் இருக்கிறார். நீங்கள் எந்தவித இக்கட்டுகளில் இருந்தாலும், "ஆண்டவர் என்னோடேகூட இருக்கிறார்," என்று அறிக்கை பண்ணுங்கள். உபத்திரவங்கள் பெருகுவதுபோல காணப்பட்டாலும், ஆண்டவர் தூரத்தில் இருக்கிறார் என்றும், அவரை பார்க்க இயலாது என்றும் நாம் நினைத்தாலும், அவர் எப்போதும் நம்முடனே கூட இருக்கிறார். "நன்மையான நேரங்களிலும் இக்கட்டான வேளையிலும் நான் உன்னுடனே இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். "ஆண்டவரே, நீர் என்னுடனே இருக்கிறீர்," என்று விசுவாசத்துடன் சொல்லுங்கள். அப்போது, நிறைவான சமாதானம் உங்கள் உள்ளத்தில் தங்கும்.
"ஆண்டவரே, நீரே என்னுடைய பயங்கரமான பராக்கிரமசாலி. அதிக உபத்திரவங்கள், பெரிய கலக்கங்கள், தீவிர இக்கட்டுகள் எனக்கு எதிராய் நிற்கின்றன. ஆனால், நீர் இவை எல்லாவற்றை காட்டிலும் வல்லவராயிருக்கிறீர். நீரே என்னை இரட்சிக்கிற தேவனாயிருக்கிறீர். நீர் என்னுடனே இருக்கிறீர்; நீர் என்னை இரட்சிப்பீர்," என்று சொல்லுங்கள்.
இராட்சதர்கள் உங்களுக்கு எதிராக எழும்புவதுபோல இருந்தாலும், வேலையில் பெரிய இலக்கு, படிப்பு அல்லது ஆவிக்குரிய வளர்ச்சி என்று எந்த எதிர்பார்ப்பாக இருந்தாலும், "ஆண்டவரே, நீர் என்னோடு இருக்கிறீர். தயவாய் என்னை இரட்சியும். எனக்கு பெலன் தாரும்," என்று கேளுங்கள். ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்து அறிக்கை செய்து இப்படி ஜெபிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் அவரது சந்தோஷம் நிரம்பி வழியும். அவர் உங்களில் பிரியமாயிருப்பார். அவரது அன்பு உங்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர் உங்கள்பேரில் கெம்பீரிப்பார். "என் பிள்ளையே, நீ என்னை நம்பினாய். நான் உன்னுடனே இருக்கிறேன். நானே உன்னுடைய பயங்கரமான பராக்கிரமசாலி. நான் உனக்கு வெற்றியை தருவேன். நான் உன்னை இரட்சிப்பேன்," என்று சொல்லுங்கள். தேவன் உங்களுக்கு இந்த வாக்குத்தத்தத்தை தருகிறார்; அது ஒருபோதும் தவறாது. ஆகவே, அவரை நம்புங்கள்; இயேசுவின் பரிபூரணத்தை உங்கள் வாழ்வில் அனுபவித்து மகிழுங்கள்.
ரூர்கேலா (ஒடிசா) என்ற பட்டணத்தை சேர்ந்த கவிதாவின் சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கவிதாவை அவர்கள் தாயார் இளம் பங்காளராக சேர்த்தார்கள். கவிதா, நன்றாக படித்து 10 மற்றும் 12ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் வாங்கினார்கள். ஆனால், திடீரென அவர்கள் தந்தை மரித்துப்போனதால், சந்தோஷம் துக்கமாய் மாறியது. தந்தை இல்லாததால் குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்பட்டது. எவ்வளவோ நெருக்கங்கள் இருந்தாலும் கவிதா, இயேசுவை நம்பியதோடு, "நான் இளம் பங்காளர். ஆண்டவர் எனக்கு உதவி செய்வார்," என்று அறிக்கையிட்டார்கள். ஆண்டவர், அவர்கள் விசுவாசத்தை கனப்படுத்தும்விதமாக பட்டப்படிப்பில் 9.3 CGPA (93%) மதிப்பெண்கள் வாங்க கிருபை செய்தார். பிறகு பட்டமேற்படிப்பையும் முடித்து அரசு வேலைகளுக்காக போட்டித் தேர்வுகளை எழுத ஆரம்பித்தார்கள். தொடக்கத்தில் தேர்வுகளில் தேர்ச்சி கிடைக்கவில்லை. அப்போது அவர்கள் அம்மா, இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் வேலை ஆசீர்வாத திட்டத்தில் கவிதாவை சேர்த்தார்கள். ஜெப கோபுரத்தில் நடைபெறும் உபவாச ஜெபத்திலும் UTurn கூட்டங்களிலும் கவிதா கலந்துகொண்டார்கள். அங்கு தேவ ஆவியானவர் கவிதாவை தொட்டார். அற்புதவிதமாக கவிதாவுக்கு அரசு வேலை கிடைத்தது. பணக்கஷ்டம் நீங்கியது. கவிதா, "எனக்கு வழிகாட்டுவதற்கு தந்தை இல்லை. ஆனால், பரம தகப்பனாகிய இயேசு என் வாழ்க்கையை ஸ்திரப்படுத்தினார்," என்று கூறினார்கள். கவிதாவுக்கு நன்மை செய்த இயேசு, நிச்சயமாகவே உங்களுக்கும் நன்மை செய்வார். அவரை நம்புங்கள். வல்லமையுடைவரான அவரே உங்களை இரட்சிக்கும்படி உங்களுடன் இருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய நன்மையான நேரத்திலும் சவாலான நாட்களிலும் நீர் பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னோடு இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். "ஆண்டவரே, நீர் என்னுடனே இருக்கிறீர்," என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். உம்முடைய சமுகம் எனக்கு சந்தோஷமாய் இருக்கிறது. என்னுடைய உபத்திரவங்களையும் கலக்கத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். அவை எல்லாவற்றை காட்டிலும் நீர் வல்லமையுடையவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் சந்திக்க நேரிடுகிற எல்லா சவால்களிலிருந்தும் என்னை இரட்சிக்கிற தேவன் நீரே. எல்லா இராட்சதர்களையும் மேற்கொள்ளும்படி என்னை பெலப்படுத்தும்; எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும். உம்முடைய அன்பு என்னை சூழ்ந்துகொள்ளட்டும்; உம்முடைய சந்தோஷம் என் இருதயத்தில் நிரம்பி வழியட்டும். மாறாத உம்முடைய வாக்குத்தத்தங்களை நான் நம்புவதால் என்பேரில் கெம்பீரியும். வல்லமையுடையவரான நீர் எனக்கு ஜெயத்தையும் விடுதலையையும் தருவீர் என்று உம்மை முழுமையாய் விசுவாசிக்கிறேன். என்னோடு இருப்பதற்காகவும், எக்காலமும் என்னை காத்துக்கொள்வதாலும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.