அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதிலும், தேவனுடைய வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் இணைந்து, "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்" (யோவான் 6:35) என்ற இந்த வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்வோம்.
லேஸ் என்னும் சிப்ஸுக்கு ஒரு விளம்பரம் செய்யப்படுகிறது. அதில், "யாரும் ஒரே ஒரு லேஸ் சிப்ஸ் மாத்திரம் சாப்பிட்டு நிறுத்தமாட்டார்கள்," என்று கூறப்படுகிறது. ஆம், மக்கள் ஒரு சிப்ஸுக்கு பிறகு இன்னொன்று என்று சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் உண்மையான திருப்தியை அடைவதில்லை. உலக பிரகாரமான காரியங்களை நாம் தேடும்போது இப்படியே நடக்கிறது. நாம் பணத்தின் பின்னால் செல்வோமானால் எவ்வளவு பணமும் நம் உள்ளான ஆசையை திருப்திப்படுத்தாது; மேலும் மேலும் ஆசையையே தூண்டும். உலக பிரகாரமான இன்பங்களை தேடுவோமானால், அது ஒருபோதும் நம்மை நிறைவு செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகூட, அதன்மீது நாம் அதிக பற்றாக இருந்தால், ஒருபோதும் நம்மை திருப்திப்படுத்தாது. சிலர், சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்; அதை பெரிய இன்பமாக கருதுவார்கள். ஆனாலும், மேலும் மேலும் பசியாகவே உணருவார்கள்.
ஆனால், என்னுடைய 13வது வயதில் ஆண்டவர் என்னை தம்முடைய பரிசுத்த ஆவியால் நிறைத்தபோது, இந்த உலக காரியங்கள் எதுவும் நிறைத்திடாதவகையில் என் இருதயம் நிரம்பியது. நான் சிறுவயதிலேயே பரிசுத்த ஆவியை வாஞ்சித்து ஜெபித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய அப்பா பேசிய ஒரு கூட்டத்தில், ஆண்டவர் என்னை சந்தித்தார்; தம்முடைய ஆவியினால் நிறைத்தார். என் உள்ளம் தேவ பிரசன்னத்தில் மூழ்கியது; சொல்லிமுடியாத சந்தோஷம் என்னை நிறைத்தது. அதன் பிறகு மூன்று நாட்கள் எனக்கு எதையும் சாப்பிடவோ, அருந்தவோ விருப்பம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் எனக்குள் பொங்கி வழிந்தார்; முன்பு நான் அனுபவித்திராத சந்தோஷமான பிரசன்னத்தை உணர்ந்தேன். இன்றைக்கு வரைக்கும் அந்த பிரசன்னத்தை நான் அனுபவித்து மகிழ்கிறேன்; நான் நினைத்துப்பார்த்திராதவண்ணம் அது எப்போதும் எனக்கு திருப்தியை அளிக்கிறது.
ஆகவேதான், இன்றிலிருந்து தேவன் தினமும் காலையில் பரிசுத்த ஆவியானவர் மூலமாக தமது வசனத்தை உங்களுக்குப் போதிப்பார் என்று கூறுகிறேன். வேதத்திலுள்ள வார்த்தை உங்கள் ஆத்துமாவை நிறைத்து, பெரும் பசியை திருப்தியாக்கும். இயேசு, "என்னிடத்தில் வருகிறவன் ஜீவ அப்பத்தை பெற்றுக்கொள்வான்; அவன் ஒருக்காலும் பசியடையான்," என்று கூறுகிறார். ஆகவே, தினமும் காலையில் தேவனிடமிருந்து வார்த்தையை பெற்றுக்கொள்ளுங்கள். இன்றைய தினத்திலிருந்து தம்மிடமிருந்து மாத்திரமே வரக்கூடிய மெய்யான திருப்தியை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய பெரும் பசியை திருப்தியாக்கக்கூடிய ஜீவ அப்பமாக நீர் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தினமும் உம்முடைய வசனத்தினால் நிரப்பப்படவேண்டுமென்ற வாஞ்சையோடு உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, உம்முடைய வசனத்தை நான் வாசிக்கும்போது அதை ஜீவன் தரும் வாக்குத்தத்தமாக பெற்றுக்கொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் மூலமாக எனக்குப் போதித்து உதவி செய்யும். உம்மைப் போல உலகில் எதுவும் எனக்கு திருப்தியை அளிக்க முடியாததால், என் இருதயத்தை உம்முடைய பிரசன்னத்தினாலும் சொல்லிமுடியாத சந்தோஷத்தாலும் நிறைத்தருளும். உம்முடைய வார்த்தை எனக்கு நம்பிக்கையை அளிக்கட்டும்; பயத்தை விரட்டட்டும்; என் விசுவாசத்தை பெலப்படுத்தட்டும். தினமும் உம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு என்னை பெலப்படுத்தும். என்னை வழிநடத்தும்; நிறைத்தருளும்; உம்முடைய அன்பின் நான் வேரூன்றியிருக்கும்படி செய்யும். ஆண்டவரே, எப்போதும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக என்னை சந்தித்து, மெய்யான திருப்தியை எனக்கு அளிப்பதற்காக நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.