அன்பானவர்களே, இன்றைக்கு மகிழ்ச்சியோடு உங்களை வாழ்த்துகிறேன். "கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்" (ஏசாயா 52:12) என்ற வசனத்தை தியானிப்போம். இந்த வசனம் கூறுகிறவண்ணம் ஆண்டவர் உங்களுக்கு முன்னே செல்கிறார்; நீங்கள் நடக்கும் பாதை ஏற்றதாய் இருப்பதற்காக கோணலானவற்றைச் செவ்வையாக்குகிறார்.
மேய்ப்பனைக் குறித்து நாம் எண்ணும்போது, பெரும்பாலும் மேய்ப்பன் ஆடுகளுக்கு பின்னே செல்வதாக அல்லது மந்தையின் நடுவே செல்வதாக கற்பனை செய்கிறோம். ஆனால், உண்மையில் மேய்ப்பன் ஆடுகளுக்கு முன்னே செல்கிறான். அவன் முன்னாக சென்று, வழியில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா என்று கண்காணித்து அவற்றை நடத்துகிறான். கொடிய மிருகங்கள் இருந்தால் அவன் அவற்றை முதலில் பார்க்கிறான். பாதை, கரடுமுரடாக இருந்தால் அவன் ஆடுகளுக்காக பாதையை சரி செய்கிறான். ஆகாரத்தையும் தண்ணீரையும் தேடி, ஆடுகளுக்குத் தேவையானவை யாவும் கிடைக்கும்படி செய்கிறான். மேய்ப்பன் எப்போதும் முன்னே சென்று, ஆடுகள் தொடரும்படி வழியை ஆயத்தம் செய்கிறான். அவை, அவனுடைய சத்தத்தைக் கேட்டு அவன் நடத்தும் இடங்களுக்கெல்லாம் அவன் பின்னே செல்கின்றன.
அவ்வாறே அன்பானவர்களே, தேவன் உங்களுக்கு முன்னே சென்று, உங்கள் வாழ்க்கையில் கோணலான பாதைகள் எல்லாவற்றையும் செவ்வையாக்குகிறார். அவர் உங்களுக்கு வழியை ஆயத்தம்பண்ணுகிறார்; இருளிலும்கூட உங்களை வழிநடத்துகிறார். "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" என்று இயேசு கூறுவதுபோல, "என் பிள்ளையே, என் பின்பற்றி வா," என்று அவர் அன்புடன் அழைக்கிறார் (யோவான் 10:27). நாம் இயேசுவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தால் முன்னே என்ன இருக்கிறது என்று கவலைப்படாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லலாம். அவர் நம் முன்னே செல்கிறார்; நம் பாதையை பாதுகாக்கிறார். பின்னால் இருந்து தீங்கு நம்மை தொடாதவண்ணம் பிறகே நம்மைக் காக்கிறார்.
ஆகவே, அன்பானவர்களே, தைரியமாயிருங்கள். நீங்கள் ஒருபோதும் தனியே இல்லை. எதுவும் நிச்சயமில்லாத சூழ்நிலையில், "நான் எங்கே செல்கிறேன் என்று தெரியவில்லை. எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை; எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை," என்று சொல்வீர்களானால், இயேசு அவற்றை அறிந்திருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள். அவர் வழியை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். ஆகவே, தைரியமாய் திடநம்பிக்கையுடன் நடந்திடுங்கள். இயேசு உங்களுக்கு முன்னே வழிகாட்டுகிறார். உங்களுக்கு முன்னே செல்வதற்காகவும் பின்னாலே காக்கிறவராயிருக்கிறபடியினாலும் அவரை ஸ்தோத்திரித்து ஜெபியுங்கள். அவரது பராமரிப்பில் நீங்கள் சுகமாய் இருக்கிறீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்கு முன்னே சென்று, கோணலானவைகளைச் செவ்வையாக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். முன்னால் என்ன இருக்கிறதென்று நான் அறியாவிட்டாலும், நீர் எனக்காக அன்புடன் வழியை ஆயத்தம்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய நடத்துதலை நான் நம்புகிறேன்; உம்முடைய சத்தமே என்னை வழிநடத்துகிறது. எனக்கு தீங்கு நேர்ந்துவிடாமல் என்னை பிறகாலே காக்கிறபடியால் உம்மை துதிக்கிறேன். பயமும் நிச்சயமில்லாத சூழ்நிலையும் என்னை பயப்படுத்தும்போது, நீர் என் எதிர்காலத்தை அறிந்திருக்கிறீர்; அதை பாதுகாப்பாய் வைத்திருக்கிறீர் என்பதை எனக்கு நினைவுறுத்தும். நீர் ஏற்கனவே எனக்கு முன்னால் செல்கிறீர் என்பதை அறிந்து விசுவாசத்தில் தைரியமாக நடப்பதற்கு எனக்கு உதவும். இருளின் மத்தியிலும் உம்முடைய திட்டத்தை நான் நம்புவதற்கு தேவையான தைரியத்தை தந்தருளும். நித்தியமான உம் அன்புக்காகவும், நீர் உண்மையாய் என்னை நடத்தும் மேய்ப்பராக இருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.