அன்பானவர்களே, ஆண்டவருக்குள் நம்பிக்கை உண்டு. நீங்கள் தனியே இல்லை. "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோத்தேயு 1:7) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளபடி, சூழ்நிலையுடன் போராடவும், உங்களுக்கு நம்பிக்கை அளித்து, எதிர்காலத்தை உருவாக்கவும் உதவி செய்ய ஒருவர் இருக்கிறார். தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை அல்ல; பெலமுள்ள ஆவியை தருகிறார். ஒருவேளை இன்றைக்கு, முன்னோக்கி அடுத்த அடி எடுத்த வைக்க முடியாதபடி பயமான சூழ்நிலையில் நீங்கள் இருக்கலாம். ஒருமுறை நாங்கள் நியூசிலாந்துக்கு ஊழியத்திற்காக சென்றிருந்தபோது, கூட்டங்கள் முடிந்த பிறகு ஒரு போதகரின் குடும்பத்தினர் எங்களை மிக உயரமான கட்டடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஒரு கயிற்றை எங்களிடம் கொடுத்து, கட்டடத்திலிருந்து எங்களை குதிக்கும்படி கூறினர். அது பயங்கரமான, திகில் அனுபவம். ஓரத்தில் நின்று பார்த்தபோது, கீழே ஒன்றும் தெரியவில்லை. அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் என் கால்கள் நடுங்கின. நம்பிக்கையோடுதான் அடியெடுத்து வைக்கவேண்டும். இப்போதும், கால்களின் கீழ் எதுவுமில்லாததுபோல் தோன்றக்கூடிய, முன்னேறிச் செல்வதற்கு பயப்படக்கூடிய நிலையில் நீங்கள் இருக்கலாம். வேண்டிய பொருள்கள் இல்லாத நிலையாக, ஆதரவுக்கு யாருமில்லாத நிலையாக, தரிசனத்தை குறித்து பயம் நிறைந்த நிலையாக அது இருக்கலாம்.

2008ம் ஆண்டு தன் தந்தை மறைந்தபோது, என் தந்தையும் அவ்வாறே உணர்ந்தார். "இத்தனை ஆண்டுகளாய் ஊழியத்தோடு இணைந்திருக்கும் மக்களை யாரால் கவனிக்க முடியும்? நான் எப்படி ஊழியத்தை நடத்தப்போகிறேன்?" என்று நினைத்து அவர் பயந்தார். தேவனிடமிருந்து தெளிவான வழிகாட்டுதலை நாடி அவர் பல நாள்கள் இரவும் பகலும் அவர் இவ்வாறு ஜெபித்தார். இதே நாள் (2008 மார்ச் 14) ஆண்டவர் அவருக்குக் கொடுத்த தெய்வீக வெளிப்பாடு எல்லாவற்றையும் மாற்றியது. "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். என் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். இந்த ஊழியத்திற்கு தீர்க்கதரிசன கிருபையை தருவேன்," என்று தேவன் பேசியதும், என் தந்தையின் பயம் அகன்றது. அதன் பிறகு தான், தேசத்தைக் குறித்து ஜெப வீரர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும் டெல்லி ஜெப கோபுரம் திறக்கப்பட்டது. விரைவிலேயே நாடெங்கும் ஜெப கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. மற்றவர்களுக்காக ஜெபிப்பதற்கு கணக்கற்ற மக்கள் எழும்பினர். அநேக நாடுகளில் தலைவர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும்படி தேவன் என் தந்தையை வழிநடத்தினார்.

காருண்யாவை பொறுத்தமட்டில், நான்கு துறைகளில், மனுக்குலத்தின் பிரச்னைகளுக்கு தீர்வை கண்டுபிடிக்கும்படி பெரிய தரிசனத்தை தேவன் அவருக்குக் கொடுத்தார். காருண்யா பல்கலைக்கழகம் பெலத்தின்மேல் பெலன் அடைந்து, உலக அளவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புப் பெற்று, நாட்டின் உயரிய அங்கீகாரத்தை (A++) பெற்றுள்ளது. தேவனுடைய பெலப்படுத்தும் வல்லமை எல்லாவற்றையும் மாற்றியது. அவர் தந்துள்ள புதிய ஆவியினால் அநேக புதிய காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பெலத்தின் ஆவியை இப்போதே பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பெலத்தின் ஆவியை எனக்குத் தருவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே எனக்கு தேற்றரவாளனாக, என் பெலனாக, வழிகாட்டியாக இருக்கிறீர். என்னுடைய பெலவீன தருணங்களில் என்னை தூக்கியெடுத்து, பெலப்படுத்தும். பயம் என்னை தடுத்து பின்னாக இழுக்கும்பொழுதெல்லாம், முன்னேறிச் செல்வதற்கான தைரியத்தை தந்தருளும். ஒருவரும் பூட்டக்கூடாதபடி எனக்கு வாசல்களை திறந்து, உம்முடைய பரிபூரண திட்டத்திற்குள் வழிநடத்தும். விசுவாசத்தில் தைரியமாக நடக்கும்படி, உம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு என்னை பெலப்படுத்தும். என் வாழ்வில் காணப்படும் எல்லா தடைகளும் அகற்றப்படட்டும்; உம்முடைய தெய்வீக அருளால் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படட்டும். உம்முடைய சமாதானத்தினால் என் உள்ளத்தை நிறைத்திடும்; என் வாழ்வுக்கென்று நீர் திட்டம்பண்ணியுள்ளவற்றில் என்னை நிலைநிறுத்தியருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.