அன்பானவர்களே, இன்றைய தினம் என் அன்பு தாயார் திருமதி. இவாஞ்சலினின் பிறந்தநாள். அவர்கள் ஊழியம் செய்வதுடன் குடும்பத்தில் எங்கள் ஒவ்வொருவருக்காகவும் உண்மையாய் ஜெபித்து வருகிறார்கள். இப்படியாக, அவர்களுடைய அன்பு, வேண்டுதல், விசுவாசத்தின் மூலமாக இன்றைக்கு கட்டப்பட்டு வருகிறது. இந்த விசேஷித்தநாளில், "பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்" (நீதிமொழிகள் 28:25) என்ற வசனத்தின் மூலமாக ஆண்டவர் நம்முடன் பேசுகிறார்.
ஆம், பொருளாசையுள்ள மக்கள், சண்டைகளை உண்டாக்குகிறார்கள்; பிரச்னைகளை ஆரம்பிக்கிறார்கள். சிலவேளைகளில் நீங்கள் ஏதோ ஒன்றில் சிறந்து விளங்குவதால்கூட இப்படி நடக்கலாம். குடும்பத்தில் நற்பெயர் எடுப்பதாலும் இருக்கலாம். சொத்து, நிலம் அல்லது ஏதாவது உதவியை நீங்கள் பரம்பரை சுதந்தரமாக பெற்றுக்கொண்டதாலும் எதிர்ப்பு எழும்பலாம். ஆனால், வேதம் என்ன கூறுகிறது? "கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்". இஸ்ரேலை பாருங்கள். அவர்கள் எப்போதும் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறார்கள். அமலேக்கியர், மீதியானியர், அம்மோனியர் ஆகியோர் எப்போதும், குறிப்பாக இஸ்ரேல் செழிக்கும்போது, எல்லைகள் விரிவாகும்போது அதற்கு விரோதமாய் எழும்பி யுத்தம் பண்ணினார்கள்.
இன்றும் அதேபோன்ற காரியங்களையே பார்க்கிறோம். பாலஸ்தீன், லெபனான், சிரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து குழுக்கள் எழும்பி இஸ்ரேலுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கின்றன. ஆனால், ஆண்டவர் என்ன செய்கிறார்? அவர் இஸ்ரேலுக்கு முழு வெற்றியை அருளுகிறார். தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம் போன்ற எல்லாவற்றிலும் இஸ்ரேல் மகா உயரத்துக்குச் செல்லும்படி செழிக்கப்பண்ணுகிறார். அவர்கள் எதைச் செய்தாலும், தேவன் அவர்களை சிறக்கச் செய்வதால் அவர்கள் பிரகாசிக்கிறார்கள். மட்டுமல்ல, விரோதிகள் தாக்கும்போது, அவர்களுடைய செல்வத்தையும் இவர்கள் கரங்களில் தேவன் கொடுக்கிறார். அன்பானவர்களே, உங்களுக்கும் அவ்வாறே நடக்கும். எதிர்ப்பைக் கண்டு பயப்படாதிருங்கள். தேவன் உங்களைச் செழிக்கப்பண்ணுவார்; உங்களை பேரைப் பெருமைப்படுத்துவார். ஆண்டவரை நம்புங்கள்; நீங்கள் செழிப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன். நீர் எனக்கு ஆசீர்வாதங்களை தந்திருப்பதை கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்ளும்போது நீரே என்னை தற்காத்துக்கொள்ளும். பொருளாசையோ, எதிர்ப்புகளோ என் சமாதானத்தை குலைத்துப்போடாதபடி, என் சந்தோஷத்தை திருடிக்கொள்ளாதபடி காத்தருளும். நீர் இஸ்ரேலை நிரப்பியதுபோல, என் வாழ்வில் எப்பக்கத்திலும் நிறைவு காணப்படும்படி செய்யும். என் மீதான தாக்குதல் எல்லாவற்றையும் உம்முடைய வல்லமைக்கும் கிருபைக்கும் சாட்சியாக மாற்றியருளும். எதிர்ப்புகள் வரும்போது, நீர் என்னோடிருப்பதை உணர்ந்து நான் பயப்படாதிருக்க உதவி செய்யும். உம்முடைய ஞானத்தையும், தெய்வீக பெருக்கத்தையும், நற்பெயரையும் எனக்குத் தந்து ஆசீர்வதியும். நான் பெறும் வெற்றியானது, உம்முடைய உண்மையான அன்புக்கு மற்றவர்கள் முன் சாட்சியாக விளங்கட்டும். ஆண்டவரே, நீர் எனக்குக் கேடகமாகவும், எனக்கு வேண்டியவற்றை தருகிறவராகவும், எனக்கு பலனாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.