அன்பானவர்களே, "நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள்" (சகரியா 10:12) என்று கர்த்தர் கூறுகிறார். இந்த வசனம், "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்" (ஏசாயா 40:31)என்ற வசனத்திற்கு ஒப்பாயிருக்கிறது. ஆண்டவரை நம்புகிறவர்கள், அவருடைய பெலத்தில் நடப்பார்கள்; அவருடைய வல்லமை அவர்களை தாங்கும்.
தாவீது, சிக்லாகில் இருந்தபோது, விரோதியால் கொடூரமாக தாக்கப்பட்டான். பட்டணம் தீக்கிரையாக்கப்பட்டது. அவனுடைய மனைவியரும், அவன் தோழரின் மனைவியருடன் பிள்ளைகளும் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் மனமுடைந்த தாவீதும் அவன் சிநேகிதரும் கசந்துபோய் அழுதார்கள். இந்த வேதனையின் மத்தியில் தாவீதின் சிநேகிதர் அவன்மேல் கல்லெறிய நினைத்தனர். தாவீதும் ஆவியில் மிகவும் கலங்கினான். "தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்" (1 சாமுவேல் 30:6) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாவீது எப்போதும் ஆண்டவரின் நாமத்தினால் நடந்தான். ஆகவேதான் அவன், "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:3)என்று தைரியமாகக் கூறுகிறான். தாவீது எப்போதும் கர்த்தரிடமிருந்து பெலனை பெற்றான்; அவருக்குள் நிலைகொண்டிருக்க எண்ணினான்.
அவ்வாறே என் தகப்பனாரும் ஆண்டவரின் பெலத்தில் நடந்தார். அவர் இப்போது நம்மிடையே இல்லாவிட்டாலும், அவருடைய விசுவாசம் இப்போதும் என்னை உற்சாகப்படுத்துகிறது. என் தாயார் அதிகமாய் சுகவீனப்பட்டு, சிகிச்சை பெற்றபோது என் தந்தை அதிகமாய் கவலைப்பட்டார். அப்போது அவர் பொருளாதார இழப்புக்குள்ளாகியிருந்தார். அந்த இக்கட்டான நேரத்தில் என்னுடைய திருமணமும் கூடியது. எங்கள் உறவினர்கள், "திருமணத்தை எப்படி நடத்தப்போகிறீர்கள்?" என்று கேட்டனர். என் தகப்பனார் திடநம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும், "என் ஆண்டவர் எனக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார்," என்று கூறினார். தன்னுடைய கவலையின் மத்தியில், என் தகப்பனால் கர்த்தருக்குள் பெலப்பட்டார். அவரையே எனக்கு மாதிரியாக கொண்டிருக்கிறேன். "என் தகப்பனின் தேவன் எனக்கும் தேவனாயிருக்கிறார்," என்று தைரியமாக கூற முடியும்.
ஆம், நாம் ஆண்டவரின் பெலத்தில் நடக்கும்போது, வாழ்க்கையை எதிர்கொள்ளவும், பெரிய இக்கட்டுகளை மேற்கொள்ளவும் அவர் நம்மை பழக்குவிக்கிறார். ஏற்றமும் இறக்கமும் கொண்ட இவ்வாழ்வில் தம்முடைய நாமத்தில் திடநம்பிக்கை கொண்டு நடப்பதற்கு உங்களுக்கு உதவுவார். நீங்கள், அப்போஸ்தலனாகிய பவுலைப்போல, "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு," என்று சொல்வீர்கள். ஆண்டவர், இன்றைக்கு தம்முடைய பெலத்தில் நடக்கும்படி உங்களுக்கு அருள்புரிவாராக. அவருடைய நாமத்தினால் நீங்கள் ஏறியும் இறங்கியும் நடப்பீர்கள்; அவருடைய வல்லமை உங்களைப் பெலப்படுத்தி, தாங்கும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் பெலவீனமாகவும் களைப்பாகவும் உணரும்போது நீர் எனக்குப் பெலனாக இருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தாவீது, தன் வாழ்வின் இருளான தருணங்களில் செய்ததுபோல, நானும் உம்மை முழுவதுமாய் நம்புவதற்கு எனக்கு போதித்தருளும். ஆண்டவரே, வாழ்வின் இக்கட்டான தருணங்களை உம் வல்லமையின்மேல் திடநம்பிக்கை கொண்டு நான் எதிர்கொள்ளுவதற்கு என்னை பெலப்படுத்தியருளும். நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணரும்போது, நீர் எனக்கு நங்கூரமாய், எல்லாவற்றின்மேலும் ஆளுகை செய்கிறவராய் இருப்பதை எனக்கு நினைவுப்படுத்தும். ஏற்றமும் தாழ்வும் கொண்ட இவ்வாழ்வில், நீர் எனக்காக யாவையும் செய்து முடித்து, என்னை மறுபடியுமாய் களிகூரப்பண்ணுவீர் என்று உம் நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்க உதவும். உம்முடைய அற்புதங்களைச் செய்யும் வல்லமையினால் அனுதினமும் என்னை தாங்கி, வாழச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.